ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம்!
வாழ்நாள் பயனை அனுபவித்த மனமகிழ்ச்சி என்பார்களே. அப்படி ஒரு மனநிறைவு. ஜூன்-31, ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மறவர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு தந்த பெருமகிழ்ச்சி அது.
பொதுவில் திருமணம் என்றாலே, மகிழ்வானதுதான் மறுப்பதற்கில்லை. ஆனாலும், இந்த திருமணம் அப்படிப்பட்டதல்ல. கலீலூர் ரஹ்மான் – நசீபா பானு தம்பதியினரின் மகன் உ.க.முகம்மது அனஸ் என்பவருக்கும்; ஞா.அ.ராஜா – ஸ்டெல்லா மேரி தம்பதியினரின் மகள் அ.லில்லி சினேகா ஆகியோரின் திருமண நிகழ்வு அது.
மாப்பிள்ளை முஸ்லீம். பொண்ணு கிறிஸ்டியன். இருவேறு மதங்கள் சங்கமிக்குமிடத்தில், அவர்கள் இருவரும் என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை. மாப்பிள்ளை வீட்டில் அச்சடித்த திருமண பத்திரிகையில் நிக்காஹ் என்றோ பொண்ணு வீட்டில் “தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கடவன்” என்ற பைபிள் வசனத்திற்கோ இடமில்லை. ”யாயும் ஞாயும் யாராகியரோ?”. – என்ற குறுந்தொகை பாடலும்; ”அன்பும் அறனும்” எனத்தொடங்கும் வள்ளுவரின் குறளும்தான் இடம்பெற்றிருந்தது.
மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண். மணமகனின் பட்டு வேட்டி சட்டையைத்தவிர மேடையில், காதில், கையில், கழுத்தில் எவையும் மின்னவில்லை. மணமக்களின் பெற்றோர்களும்கூட எந்தவித ஆடம்பர உடையலங்காரங்கள் இன்றி எளிமையாகவே இருந்தார்கள். இதைவிட, நிகழ்வில் பங்கேற்றவர்களும் அப்படியேத்தான் இருந்தார்கள். இதெல்லாம், இதுவரை நான் நேரில் கண்ட திருமண நிகழ்வுகளில் கண்டிராத பேரதிசயங்கள்.
திருமண நிகழ்வுக்கு பேணர் கட்டிக்கொட்டிருந்த தோழர் கார்க்கியிடம் மண்டபத்தார்கள் கேட்டிருக்கிறார்கள். “மண்டபத்துல டெக்ரேஷன் கூட வேண்டானு சொல்லிட்டாங்க. பையன் முஸ்லிம். பொண்ணு கிறிஸ்டியன். ஃபாதர் வருவரா? இல்ல, ஜமாத்காரங்க வந்து கல்யாணம் செஞ்சி வைப்பாங்களா?” என்று.
என்னதான் திருமண ஏற்பாடுகள் இறுதிநேரத்தை எட்டியிருந்தாலும், முதல்நாள் இரவு வரையில் மணமகனின் தந்தை கலீலூர் ரஹ்மானுக்கு ஒருவித பதட்டம். “சொந்த காரங்கவுங்கள பகைச்சி, ஜமாத்தாரின் எதிர்ப்பையும் மீறித்தான் இந்த கல்யாணத்தை நடத்துறேன். எத்தனை பேரு கல்யாணத்துக்கு வர்ற போறாங்கனுதான் தெரியல” என்ற கவலை அவருக்கு.
மறுநாள் ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம். கலீலூர் ரஹ்மான் கவலைப்பட்டதற்கு நேர்மாறாக, அரங்கத்தின் சரிபாதிக்கும் மேலான இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் அவரது இசுலாமிய மார்க்க சொந்தங்கள். கட்டுக்கோப்பான மார்க்க நெறி கொண்டது இசுலாமிய மதம் என்றால், அந்த கட்டுக்கோப்பை கச்சிதமாக பராமரித்து வரும் மார்க்க நெறிக்கு பெயர்போன ஊரான கடையநல்லூரில்தான் இந்த ஆச்சர்யமும் அரங்கேறியிருக்கிறது. ஆகச்சிறந்த திருமண பந்தத்தின் அடையாளமாக மட்டுமின்றி, தமிழகத்தின் மதநல்லிணக்கத்தின் எடுப்பான உதாரணமாகவும் அமைந்துபோனது இத்திருமண நிகழ்வு.
முன்னொரு காலத்தில், 1930 களில் தந்தை பெரியார் பார்ப்பனர்களை வைத்துத் திருமணச் செய்யும் முறையை மறுத்து, சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்து, தொடர்ந்து பல திருமணங்களைக் கிராமங்களிலும் நடத்தினார். இந்திய விடுதலைக்குப் பின்னும் தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை வேகங்கொண்டு நடத்தினார். நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்க்காமல், திராவிட இயக்க முன்னணி தலைவர்கள் தலைமையில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள். தாலி பெண்ணுக்கான அடிமைச் சின்னம் என்பதால் சுயமரியாதை திருமணத்தில் தாலி அணிவிக்கும் பழக்கம் மேற்கொள்ளப்படவில்லை.
1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்பதற்கு இந்து மதச் சட்டத்தில் உள்ள திருமண முறையில் சிறு திருத்தமாக, திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் பார்ப்பனர்களைக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல், உற்றார், உறவினர் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டும், தாலி அணிவித்தும் செய்துகொள்ளும் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது என்று சட்டம் நிறைவேற்றினார் என்பதெல்லாம் தமிழகத்தின் சுயமரியாதை உணர்வுக்கான சான்றுகள்.
ஆனாலும், சாதி ஆணவப்படுகொலைகளின் காலகட்டத்தில் இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டனவா? என்ற வேதனையிலும் ஆற்றாமையிலும் உழன்று கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு இத்திருமண நிகழ்வு பெருமருந்து.
மணமக்களின் பெற்றோர்கள் கலீலூர் ரஹ்மானும், அ.ஞா.ராஜாவும் ம.க.இ.க. தோழர்கள் என்பதால் மட்டும் இது சாத்தியமாகிவிடவில்லை. மிக முக்கியமாக, இருவருமே அந்தஸ்தில் சமமானவர்கள். நல்ல கல்வி புலத்தோடு வசதியும் படைத்தவர்கள். ஆனாலும், கவினை வெட்டி சாய்க்க அவனது சாதி தான் காரணமாகியிருந்தது. இன்னும் சில நேர்வுகளில், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, அந்தஸ்து தடையாக இருக்கிறது. இவ்வாறு, ஆணவப்படுகொலைகளின் வரையறைகள் உருமாறியிருக்கும் காலகட்டத்தில்தான், சாதி கடந்து, மதம் கடந்து, மனிதமாக சங்கமித்திருக்கும் இந்த எளிய திருமண நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இன்ஸ்டாகிராம் கழிசடை காதல் ரகங்கள் ஒருபுறமும் சாதிய ஆணவப் படுகொலைகளின் காலமாகவும் மாறிவிட்ட தமிழகத்தில்தான் இப்படி ஒரு திருமணமும் நிகழ்ந்திருக்கிறது.
இதுபோன்ற திருமணங்கள் தமிழகத்தின் வீதிகள் தோறும் நிகழ்த்தப்பட வேண்டுமென்ற உந்துதலை தருகிறது. இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; அடுத்தடுத்த ஆணவப்படு கொலைகளால் சாதிய கவுச்சி வீசும் தமிழகத்துக்கு அவசியமான ஒன்று.
இத்திருமண விழாவுக்கு மக்கள் அதிகாரம், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் எழில் மாறன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநிலச் செயலாளர் தோழர் கோவன், ஆவணப்பட இயக்குநர் கோம்பை எஸ்.அன்வர், இடதுசாரி செயற்பாட்டாளர் தோழர் மருதையன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திச் சாதி, மத மறுப்பு திருமணங்கள் பெருகி மனிதம் போற்றப்படும் சமூகமாக மலரவேண்டும் என்று உரையாற்றினர். தமுஎசக கவிஞர் ப.மகாலட்சுமி மணவிழாவிற்கு வருகை தர இயலாத நிலையில் அவர் அனுப்பி வைத்த கவிதையைத் தோழர் கார்க்கி வாசித்தார். மேலும் திருமண விழாவில் தோழா்கள் சிறப்புரை ஆற்றினா்.
தோழர் வாஞ்சிநாதன் உரை
“மணமக்கள் இருவரும் சித்தமருத்துவம் படித்து மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர். மணமக்கள் சார்ந்த இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடைபெறுகின்றது என்றால் இதுபோன்ற மத மறுப்பு திருமணங்கள் ஏன் நடைபெறவில்லை என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற வாய்ப்பைச் சமூகம் அமைத்து தரவில்லை. காதல் என்றாலே ஆவணக்கொலையில் ஈடுபடுகின்ற மனிதர்களைப் பார்க்கின்றோம். இப்போது மதங்களை மறுத்து ஒரு திருமணம் நடைபெறுகின்றது என்றால் அதற்கு சமூகத்திலிருந்து எங்கிருந்து ஒப்புதலும் அங்கீகாரமும் கிடைத்து என்பதை திருப்பரங்குன்றம் பிரச்சனையிலிருந்து பார்க்கவேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாதத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றப்படுகின்றது. அங்கே உள்ள நிலஅளவைக் கல்லில்தான் ஏற்றவேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுக்க, நிலஅளவைக் கல்லில் ஏற்றலாம் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகின்றார். அப்போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராய் இருந்த மு.க.ஸ்டாலின்,“தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றப்பட்டால் இந்து – இஸ்லாமியர் இடையே பதற்றம் ஏற்படும். கலவரம் ஏற்படும் என்று எண்ணி 144 தடை உத்தரவைப் பிறப்பித்து தீபம் ஏற்றும் நடவடிக்கையை அமல் செய்ய மறுத்தார்”. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர். ஆனால் இறுதிவரை மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தை வைத்து இஸ்லாமிய வெறுப்பை விதைக்க ஆட்சியில் இருந்தவரை அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த மத நல்லிணக்கம் தொடர்கிறது. மத வேறுபாடுகளுக்கு இங்கே இடம் இல்லை என்ற சூழலில்தான் இந்த மதமறுப்பு திருமணம் நடைபெறுவது சாலப் பொருத்தமுடையதாகும். இதுபோன்ற மத மறுப்பு திருமணங்கள் நடைபெறவேண்டும்.
தோழர் கோவன் உரை
இஸ்லாம் சமூகம் சார்ந்த மணமகன் தாயும் தந்தையும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். கிறித்தவ சமூகம் சார்ந்த மணமகளின் தந்தை தாயும் மக்கள் அதிகாரம் அமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இரு குடும்பமும் இடதுசாரி சிந்தனைக் கொண்டது என்பதுதான் இங்கே சிறப்பான செய்தியாகும். இஸ்லாமியர்களை ஏதோ அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் போல் பலரும் இங்கே சித்தரிக்கின்றனர். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இப்போதை இஸ்லாமியர்கள் இந்து மதத்திற்குள்தான் இருந்தார்கள். சாதிய கொடுமைகள் போன்ற காரணங்களால் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்கள் என்பதுதான் வரலாறாக உள்ளது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் அங்கே வரவேற்பு கொடுப்பவர்களாக இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மத வேறுபாடுகள் என்பது எப்போதும் இருந்ததில்லை. தற்போது அந்த வேறுபாட்டை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிதான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் முயற்சியாகும். இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி என்றுதான் வாழ்ந்து வருகிறார்கள். புரட்சிக்கர இடதுசாரி சிந்தனை கொண்ட மதங்களால் வேறுபட்ட இரு குடும்பங்கள் இணைந்து மதமறுப்பு இல்லற இணைஏற்பு விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த நல்லிணக்கம் தமிழ்நாட்டில் தொடரவேண்டும். இதுபோன்ற திருமணங்களும் நடைபெறவேண்டும். தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கவேண்டும் என்ற நம் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது.
தோழர் மருதையன்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்னும் இந்த நகரத்தில் மத மறுப்பு திருமணம் நடைபெறுகின்றது. இஸ்லாமிய மணமகன், கிறித்தவ மணமகள் – என இருவரும் தங்களின் இல்லற வாழ்வைத் தொடங்க இருக்கின்றனர். அவர்களுக்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம். இந்த மணவிழா அரங்கில் இந்துக்களும், கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள், புரட்சிக்கர அமைப்பைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் கூடியுள்ளனர். இந்து மத வெறி கொண்டவர்கள்தான் இஸ்லாமிய வெறுப்பை இந்தியாவி முழுவதும் விதைத்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அவர்கள் விதைக்க முயல்கின்றனர். இங்கே தந்தை பெரியார் போன்ற சமூக சிந்தனை கொண்ட தலைவர்களால் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வெறுப்புக்கு வேலை என்ற நிலை தொடர்கின்றது. மாட்டுக்கறி உண்ணக்கூடாது. பசு மாடு தெய்வம் என்று சொல்கிறார்கள். மாட்டுப் பாலை அவர்கள் குடிப்பார்கள் ஆனால் மாட்டுக்கறியை யாரும் சாப்பிடக்கூடாது என்று கலவரம் செய்கின்றனர். பார்ப்பனர்களில் பலர் மிருதங்கம் வாசிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த மிருதங்கத்தில் உள்ளது பசு மாட்டு தோல். இரண்டாவது கன்று ஈன்ற பொழுதில் அந்த பசு மாடு வெட்டப்பட்டு, அதன் தோலை உரித்து பதப்படுத்திதான் மிருத்தங்கத்தில் பயன்படுத்தப்படுகின்றது. பசு மாட்டு தோலில் உருவாக்கப்பட்ட அந்த இசைக் கருவியைப் பார்ப்பனர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் செய்தால் எல்லாம் சரி. மற்றவர்கள் செய்தால் அது தவறு என்ற பொய்யைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அந்தப் பொய்யை இந்த மதமறுப்புத் திருமணம் முறியடித்துள்ளது. இரு குடும்பங்களின் இசைவுடன் இந்தத் திருமணம் நடைபெறுவது எதிர்காலத்தில் இதுபோன்ற திருமணங்கள் நடைபெற வழிகோலும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகின்றது.
— ஆதவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.