அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !
அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.சி. 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதில் குளறுபடி சர்ச்சையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் மாபெரும் மோசடி அரங்கேறியிருப்பதாக TRB எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும், இதே TRB சார்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பணி நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் மாபெரும் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் 156 பேர் கைதான நிலையில், இதில் தொடர்புடைய இடைத்தரகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டை நடத்தியுள்ள நிலையில் இப்படி ஒரு சர்ச்சை TRB குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போல, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB). தற்போது இதன் தலைவராக ஜெயந்தி இருந்து வருகிறார்.
அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 14.03.2024 இல் வெளியிடப்பட்டது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டு மறு அறிவிப்பு 16.10.2025 அன்று வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த 27.12.2025 அன்று நடைபெற்ற தேர்வில் தமிழகம் முழுவதிலும் 42,064 மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 5 பாடங்களுக்கும்; எஞ்சியுள்ள 56 பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் ஜூன் 25 அன்றும் வெளியாகியிருக்கிறது.
சிக்கலும் சர்ச்சையும் கொண்ட தேர்வு முறை :
தாள் – 1 மற்றும் தாள் – 2 ஆகிய இரண்டு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். தாள்-1 இல் பகுதி – அ வில் 50 மதிப்பெண்களுக்களை மொழிப்பாடம் கட்டாயம். அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எதிர்கொண்டாக வேண்டும். பகுதி – 2 வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தேர்வு.
தாள்-2 ஐ பொருத்தவரையில், இந்திய அரசியலமைப்பு, இந்திய வரலாறு, சூழலியல், அரசின் திட்டங்கள், இந்திய பொருளாதாரம் உள்ளிட்டு பொதுவான தலைப்புகளிலிருந்து 5 கேள்விகள் கேட்கப்படும். அதிலிருந்து ஒரு கேள்விக்கு மட்டும் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் விரிவான விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 50 மதிப்பெண்கள்.
நிறைவாக, கல்லூரியில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அதை பொருத்து 15 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு 15 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
தொகுப்பாக, தாள்-1 இல் பகுதி-அ (50 மதிப்பெண்கள்) தவிர்த்து, 230 மதிப்பெண்களுக்கான தேர்வு முறையை கடைபிடித்து வருகிறது.
மதிப்பிடுவதில் மாபெரும் மோசடி :
தாள்-1 இல் அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் என்பதால், இதில் எந்த பிரச்சினையும் இல்லை. தாள்-2 ஐ பொருத்தமட்டில், ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் வழங்குவதில்தான் பெரும் மோசடியே அரங்கேறியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
உதாரணமாக, தாள்-1 இல் பகுதி-ஆ வில் 150 மதிப்பெண்களுக்கு 100-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள், அதே நாளின் பிற்பகலில் நடைபெற்ற தாள்-2 க்கான தேர்வில் வெறும் ஒற்றை இலக்க எண்களில் மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தாள்-1, பகுதி-ஆ-வில் 100 மதிப்பெண்களுக்கும் கீழாக, 60,70 என்பதாக எடுத்த மாணவர்கள், தாள்-2 இல் 38,40,42, என்பதாக இரட்டை இலக்கங்களில் மதிப்பெண்களை பெற்றிருப்பதாக சொல்கிறார்கள்.
இன்னும் குறிப்பாக, தாள்-1 இல் 111 மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர், தாள்-2 இல் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருக்கிறார். தமிழ் பிரிவு மாணவர்களுக்கு என்றில்லை. வேதியியல், இயற்பியல் உள்ளிட்டு 61 வகையாலான பாடப்பிரிவுகளுக்கும் இதுதான் கதி.
ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண் சர்ச்சை :
TRB-யின் 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய நடைமுறையாக, விரிவான விடையளிக்கும் பகுதி சேர்க்கப்பட்டதே சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. அதுவும், TNPSC தேர்வு வாரியம் கடைபிடிக்கும் வழிமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக நிர்ணயித்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. அவ்வாறு, 50 மதிப்பெண்களை கொண்ட கேள்வியை எவ்வாறு மதிப்பிடுவது என்பது குறித்த எந்தவிதமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
இந்த பின்னணியிலிருந்தே, தாள்-1 இல் 111 மதிப்பெண்களை பெற்ற மாணவி, தாள்-2 இல் பூஜ்யம் மதிப்பெண் பெற்ற விவகாரமும்; தாள் 1 இல் 100க்கும் கீழாக மதிப்பெண்களை பெற்றவர்கள் தாள்-2 இல் இரட்டை இலக்கங்களில் மதிப்பெண்களை பெற்ற விவகாரமும் முன்னிலைக்கு வருகின்றன. ஆளுக்கு தகுந்தாற்போல, மதிப்பெண்களை இவர்களாகவே போட்டுக்கொள்கிறார்களோ? என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
மேலும், தற்போது வெளியான முடிவுகளோடு, விண்ணப்பத்தவர்களின் பணி அனுபவத்துக்கான 15 மதிப்பெண்களுக்கான மதிப்பீட்டையும் சேர்த்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியான முடிவுகளில், ஆவண சரிபார்ப்புக்கு முன்னர் ஒருவருக்கு பணி அனுபவத்துக்கான மதிப்பெண் 11 என்பதாக இருந்த நிலையில், அதே நபருக்கு ஆவண சரிபார்ப்பு முடிந்து நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது 13 மதிப்பெண்களை பெற்றதாக திருத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற குளறுபடி – மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு இப்போதே பணி அனுபவத்துக்கான மதிப்பெண்களையும் சேர்த்து முழுமையான தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.
விசாரணை வேண்டும்:
இந்த விவகாரத்தில், எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஐயப்பாடுகளை உரிய முறையில் நீதிபதி தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரையில், தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும். மிக முக்கியமாக, விசாரணை முடியும் வரையில், இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலான பணிநியமன நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, உதவிபேராசிரியருக்கான புதிய பணிநியமனங்களே இல்லாத நிலையில், இத்தனை ஆண்டுகாலம் தவ வாழ்வு போல வாழ்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் அரசு ஆசிரியர் பணி எனும் கனவை சிதைத்திருக்கிறது, இந்த விவகாரம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.