அர்ச்சகர்கள் சம்பளம் உயர்த்த வேண்டும் !
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைமுறையில் உள்ள விசேஷ சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலாவுக்கான கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500ல் இருந்து 5 ஆயிரமாகவும், சண்முகார்ச்சனைக்கான கட்டணத்தை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாகவும், மூலவர் அபிஷேகம் 2 நபர்களுக்கான கட்டணம் ரூ. ஆயிரத்து 500ல் இருந்து 10 ஆயிரமாகவும், அபிஷேக தரிசனத்துக்கு எல்லா நாட்களுக்கும் பொதுவான கட்டணமாக ரூ. 2 ஆயிரத்து 500ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை அறநிலையத்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.
இதெல்லாம் அறநிலையத்துறையால் உத்தேசிக்கப்பட்ட கட்டணங்கள்; அவற்றை பொதுமக்கள் முன்னிலையில் கருத்துக்கேட்புக்கு வைத்து, மக்கள் சொல்வது என்னவோ அதன்படி அறநிலையத்துறை முடிவு செய்யும். பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்த மாட்டோம். பொதுமக்கள் கருத்துக்கு மாறாக இந்த அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று அமைச்சர் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம்; மக்கள் கருத்துக்கு மாறாக எந்த முடிவையும் இந்த அரசு எடுக்காது என்ற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதேபோல், கோயில்களின் வருமானம் கோயில்களுக்கும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சட்டசபையில் அவர் அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேநேரம், எந்த அரசு வந்தாலும், கோயில் வருமானத்தை அதிகரிப்பதில்தான் குறியாக இருக்கின்றனவே தவிர, அதிகரிக்கப்பட்ட வருமானத்தை எதற்கெல்லாம் செலவிடப்படுகிறது என்பதில் அக்கறைகாட்டுவதில்லை.
உதாரணத்துக்கு, கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், அதே கோயில்களில் பணியாற்றும் அறநிலையத்துறையை சேர்ந்த கடைநிலை ஊழியர் பெறும் சம்பளத்தைவிட மிகமிக குறைவான சம்பளத்தையே ஊதியமாக பெறுகின்றனர்.
அர்ச்சகர்கள் மட்டுமல்ல, ஓதுவார், நாதஸ்வர, தவில் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் உட்பட கோயிலில் தெய்வ கைங்கர்யம் செய்யும் உள்பணியாளர்கள் எல்லோருக்கும், மிகமிக குறைந்த தொகையே அந்தந்த கோயில் சட்டவிதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த நிலை மாற வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் அர்ச்சகர்கள் போன்ற கோயில் உள் பணியாளர்களின் சம்பளத்தை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உயர்த்துவது குறித்து எந்த அரசும் கவனம் செலுத்துவதில்லை.

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி வந்திருக்கும் இந்த அரசாவது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும். அடுத்து, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களிலேயே அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களுக்கான சம்பளம், கோயிலுக்கு கோயில் வித்தியாசப்படுகிறது. அதை மாற்றி ஒரே வேலைக்கு ஒரே மாதிரி சம்பளத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வருமானத்தை பெருக்குவதிலும், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் ஆர்வம் காட்டும் அரசும் அறநிலையத்துறையும், தெய்வ கைங்கர்யத்தை தலைமுறை தலைமுறையாக செய்துவரும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களின் நலன் மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
— கோபால்ஜி, தினமலர் வெளியீட்டாளர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.