டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். மழலைகள் கை பிடித்து நடைபயில. பேரார்வம் தூண்டும் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் இல்லாத காலத்தில் வாழ்கிறோம். நிலாவை காட்டி சோறூட்டிய அன்னையின் இடத்தில் இன்று ஆன்ட்ராய்டு ஃபோன். குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும் அதே கைப்பேசி.
அடம்பிடிப்பவர்களென்றும்; அராத்துகளென்றும் குழந்தைகளை குறை சொல்லி, பெற்றோர்களின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சமூகத்தின் மனநிலை எத்துனை அருவெறுப்பானது?
சிலையாக வடிவமைப்பதற்கேற்ற உகந்த களிமண் போன்றவர்கள் சிறார்கள். குறைகளும் நிறைகளும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களை கையாளும் பெற்றோர்களிடத்தில். பக்குவமாய் அவர்களை அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோர்களின் வரலாற்று கடமையல்லவா?
ஆனால், பொதி சுமையாய் பள்ளிப்பாடங்கள் அழுத்த, போட்டித்தேர்வுகளுக்கான முன்திட்டத்தோடு பெற்றோர்களும் பாடாய்படுத்த பரிதவித்து கிடக்கிறது, சிறார்களின் உலகம்.
எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது. அவர்களின் சமூகப்பார்வையை விசாலமாக்குகிறது. குழந்தைகள் என்பவர்கள் நம்முடைய அடுத்தத் தலைமுறை. அவர்களின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சி என்பதையும் தாண்டி, நல்லதோர் சமூகத்தின் வளர்ச்சி.
கூடுதல் சுமையாக அல்லாமல், சிறார்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும். தன் ஆளுமையையும் மொழி ஆளுமையையும் வலிய திணிக்கும் எழுத்துக்களால், ஒருபோதும் வாசிப்பை வயப்படுத்திவிட முடியாது. சிறார்களின் உலகம் தனியானது. தனித்துவமானது. அவர்களுக்கான மொழியில், அவர்களுக்கு புரிந்த நடையில் எழுதியாக வேண்டும். இதுதான், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறார் எழுத்தாளர்கள் கதை சொல்லிகள் ஆகியோர் முன் இப்போது உள்ள சவால்.
இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
பள்ளி மாணவர்களிடத்திலும் வாசிப்பை ஓர் இயக்கமாக கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நோக்கில், அரசு சார்பாக நிறைய புத்தகத் திருவிழாக்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறன. நிறைய பதிப்பகங்கள் சிறார் நூல்களை குவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி விற்பனைக்கு வருகின்ற புத்தகங்கள் அனைத்தும் வாசிக்கத் தகுந்தனவா என்பதைக் குறித்து சிந்தித்தோமேயானால், அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நிறைய காரணங்களையும், உண்மைச் சூழலையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
குழந்தைகளுக்கு கதை சொல்வதும், எழுதுவதும் மிக எளிது என்றும், இவர்கள் குழந்தைகள் தானே எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்றும் பெரும்பாலான பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது நிச்சயம் அபத்தமானது.

குழந்தைகளுக்கான கதைகள் படைப்பது என்பது கூடுதல் சவால் நிறைந்தது. சுவைபட எழுதுதல் என்பதைத்தாண்டி, அதில் அறிவியல் பார்வையும் பகுத்தறிவை போதிப்பதாகவும் படைக்க வேண்டும். கூடவே, அவர்களின் கற்பனைத் திறனையும் சிந்தனையும் தூண்டும் விதமாகவும் அவர்களின் மொழியிலேயே படைக்கவும் வேண்டும்.
இந்த சவாலான பணியை, பெற்றோராக, ஆசிரியராக, சிறார் எழுத்தாளராக, நல்ல கதை சொல்லிகளாக நாம் எவ்வாறு ஈடேற்றப் போகிறோம் என்பது குறித்து கலந்துரையாடும் நோக்கில்தான் அங்குசம் செய்தியின் வழியே தொடங்குகிறது, சமூக உரையாடல்.
இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து, அடுத்த வாரத்தில் பேசுவோம்.
(தொடரும்)
கார்த்திகா கவின் குமார்
(எழுத்தாளர், கதைசொல்லி)
திருச்சி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.