சென்ற தொடரில், வாணிபம் செய்ய கடல் மார்க்கமாக வந்திறங்கிய போர்ச்சுகீசியர்களை எதிர்த்து நின்ற முஸ்லீம் மரைக்காயர்கள் குறித்து பார்த்தோம். இந்த தொடரில், இந்திய கடலோரங்களில் வியாபார பொருளாக கருதப்படும் கடல் வாழ் சிற்றினமான சங்குகளின் வகைகள் குறித்து பார்க்கலாம்.
4.4 சங்கு வகைகளும் கிடைக்கும் இடங்களும்
இந்தியக் கடலோரங்களில் வியாபாரத்திற்காக, பூஜை பொருளாகக் கருதப்படும் சங்குகள் ஒரு சிற்றினத்தைச் சார்ந்தவை. அதன் விஞ்ஞானப் பெயர் Turbinella pyrum. இந்தச் சிற்றினம் ஐந்து வகையாகப் பிரிக்கிறார் Hornel (1915) அவர்கள். அந்த 5 வகைகள் Turbinella pyrum var.obtusa, Turbinella pyrum var.acuta, Tubinella pyrum var.globosa, Turbinella pyrum var.comoriensis மற்றும் Turbinella pyrum var.fusus. இந்த ஐந்து வகைகளிலும் இன்னும் பல வகைகள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறுபாட்டு வித்தியாசமான சங்குகளாகக் காணப்படுகின்றன.
இந்த ஐந்து வகை சங்குகளில் Tubinella pyrum var. acuta பொதுவாக இராமேஸ்வரத்தையும், தலைமன்னாரையும் பிரிக்கும் ஆதம் பாலத்திற்குக் கீழே தெற்கு பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்த வகை சங்குகளுக்கு “ஜாதி அல்லது சாதி” என்று பெயர். மிகவும் அழகாகவும், விரும்பக் கூடியதாகவும், அதிக விலை உள்ள சங்காகும்.
Turbinella pyrum var. obtusa பெரும்பாலும் ஆதம் பாலத்திற்கு மேலே (வடக்கே) பாக் ஜலசந்தி மற்றும் சோழமண்டலக் கடற்கரை முதல் ஆந்திரப்பிரதேசம் கோதாவரி நதிகரை வரை கிடைக்கின்றன. இந்த இனத்தில் பல வகைகள் தென்பட்டாலும், இவைகள் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக்கரை வரை அதிகமாகக் கிடைப்பதாகவும், அதற்குமேல் கோதாவரி நதிவரை குறைவாகக் கிடைப்பதாகவும் அறியப்படுகிறது. இந்த வகை சங்குகளை “பட்டி” (Patti) என்று அழைக்கின்றனர். இவை இரண்டாம் தரச் சங்காகவும், விலை சற்றுக் குறைவானதாகவும் கருதப்படுகிறது.
Turbinella pyrum var.globosa மற்றும் Turbinella pyrum var.comorinensis இரண்டும் மிக நெருக்கமான உறவுள்ள சங்காகவும், பொதுவாகத் தமிழகத்தின் கடைசி பகுதி கன்னியாகுமரியிலிருந்து வடக்கே இரண்டு கடலோரங்களிலும் (அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அரபி கடல்) கிடைப்பதாக அறியப்படுகிறது. இதில் var.comoriensis பொதுவாகக் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள ஆழம் குறைவான பகுதியிலும், var.globosa ஆழம் கூடுதலான பகுதியிலும் கிடைக்கின்றன. var.globosa-வை பொதுவாக “பத்தலா” (Pathala) சங்கு என்றும், var.comoriensis சங்கை “குமாரி” (komari) என்றும் அழைப்பதுண்டு. இந்த வணிகச் சங்குகள் அரபி கடலிலுள்ள திருவனந்தபுரம் வரை கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் திருவனந்தபுரத்திலிருந்து குஜராத்திலுள்ள கட்ச் வளைகுடா வரையுள்ள மலபார் கடலோரங்களில் இந்தச் சங்குகள் அறவே கிடைப்பதில்லை. அதை விசித்திரமென்றும் கூறுகின்றனர். ஆனால் குஜராத் கட்ச் வளைகுடாவில் பல நூற்றாண்டுகளாகச் சங்கு எடுப்பது, வியாபாரம் செய்வது சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “சுருதி” (Surti or Surat) என்று அழைக்கப்படும்இந்தச் சங்குகள் பெரும்பாலும் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் தரமான var.acuta-விற்கு நெருக்கமான விலையுயர்ந்த ஜாதி வகையை (Jadhi) சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. இறுதியாக Turbinella pyrum var fusus வகை சங்குகள் அந்தமான் தீவுகளில் மிகக் குறைவாகக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இங்குக் கிடைக்கும் சங்குகள் மிகவும் அழகாகவும், விலையுயர்ந்ததாகவும் உள்ளது.
அரிதான வலம்புரி சங்கு Turbinella pyrum வகைகள் குறித்து அடுத்த தொடரில் பேசுவோம்.
(தொடரும்)







Comments are closed, but trackbacks and pingbacks are open.