உண்மையில் முதல்வர் விஜய் எங்கே ஆய்வு செய்ய வேண்டும்?
உண்மையில் முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் நிறைய இடங்களை ஆய்வு என்ற பெயரிலாவது சுற்றிப்பார்க்க வேண்டும்! சினிமா செட்டிங்குகள்… சொகுசு கார்கள்… தனி விமானப் பயணமென்ற வாழ்க்கையிலிருந்த முதல்வர் விஜய்… தற்போது தான் ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகாரமென்பது எத்தகையது என்பதை கவனிக்கத் தொடங்கியிருப்பார் என்று நம்புகிறேன்…
அவர், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சென்று பார்க்க வேண்டும்… ஓர் நூலகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளுக்கும் இத்தனை விஷயங்களை கலைஞர் செய்துவிட்டுச் சென்றிருக்கிறாரா என்று அவரது மனசாட்சியாவது அவரை பிரமிக்க வைத்திருக்கும்… அதேபோல், மதுரையிலுள்ள கலைஞர் நினைவு நூலகத்துக்கும் சென்று பார்வையிட வேண்டும்…
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திற்கு சென்று பார்வையிட வேண்டும்… அதன் கட்டமைப்பிற்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்களென்று பார்க்க வேண்டும்… அதேபோல் தமிழ்நாடு முழுக்க கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை பார்வையிடுங்கள்!
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகங்களுக்கு செல்ல வேண்டும்… அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட வேண்டும்… சென்னையில் கொளத்தூர் ஏரி பூங்கா, சேத்துப்பட்டு ஏரி பூங்கா… எனத் தற்போது உருவாக்கப்பட்டுள்ள படகு சவாரி வசதியுள்ள பல்வேறு பூங்காக்களுக்கு சென்று பார்வையிட வேண்டும்…
கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப்பாலத்தை பார்வையிட வேண்டும்! திருவள்ளுவர் சிலையின் பிரமாண்டத்தை பார்த்து பிரமிக்க வேண்டும்!
மேட்டூர் அணைக்கு கண்டிப்பாக செல்லவேண்டும்… இப்போது திறந்துவிட தண்ணீரில்லாத அந்த அணையில் தான் கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து தண்ணீரை முழுமையாகத் தேக்கி, விவசாயத்துக்கு திறந்துவிட்டு சாதனை படைத்திருக்கிறார்கள்! புழல் ஏரியை பார்வையிடுங்கள்… நானறிந்தவரை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக முழுக்கொள்ளளவிலேயே இருந்த புழல் ஏரி, தற்போது தான் தண்ணீர் குறைந்து வருகிறது… தரை தெரிகிறது… காரணம், முன்பெல்லாம் தொடர்ச்சியாக ஆந்திராவில் கிருஷ்ணா நதியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு, அங்கிருந்து புழல் ஏரியில் நீர் நிரப்பப்படும்… தற்போது அதை செய்யவில்லை!
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு செல்லுங்கள்… அங்குள்ள சிறப்பான கட்டமைப்பை பார்வையிடுங்கள்… அதேபோல் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தையும் பார்வையிடுங்கள்… கலைஞரின் கனவுத்திட்டமான கட்டடம் அது… ஜெயலலிதாவால் வம்படியாக மருத்துவமனையாக மாற்றப்பட்ட கட்டடம் அது….
கோவையில் தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலமான ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை பார்வையிடுங்கள்… இதுபோல் டைடல் பார்க்குகள்… தொழிற்பூங்காக்கள் என திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற கட்டுமானங்களைப் பற்றி உங்கள் அதிகாரிகளிடம் விசாரித்து அவற்றையெல்லாம் பார்வையிடுங்கள்! ஆட்சி அதிகாரத்தின் மூலமாக தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என ஒவ்வொன்றுக்கும் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதற்கான காரணத்தை அறிவீர்கள்…
இத்தனைக்குமிடையே தான் ஆளுநரின் வாய்க்கால் தகராறு… ஒன்றியத்தின் ஒடுக்குமுறை… எனத் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்காக சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றத்தின் வாயிலான போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தது! மிக எளிதாக ஸ்க்ரிட்ப்களை உணர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள்… வெறுமனே லெட்டர் எழுதும் கவர்மென்ட் என்று இழிவுபடுத்திப் பேசி கைத்தட்டல்களை வாங்கினீர்கள்… இப்போது நீங்கள் லெட்டர் எழுதுவதைத்தாண்டி என்ன செய்ய முடிந்தது?
நீதிமன்றத்தில் வாதத்தை வலுவாக எடுத்து வைக்காமல் மருத்துவப் படிப்புகளுக்கான இருக்கைகளை கைநழுவ விட்டிருக்கிறீர்கள்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம் தரப்பட்டது குறித்து வாய் திறக்கவும் அஞ்சுகிறீர்கள்… இனியாவது மெல்ல மெல்ல புரியக்கூடும்… முதல்வர் நடந்தார்… குடை பிடித்தார்… டிக்கெட் எடுத்தார் என்ற தலைப்புகளையும் தாண்டியும் முதல்வருக்கான கடமைகள் நிறைய இருக்கிறது என்ற உண்மை! அதை புரிந்துகொண்டால் மகிழ்ச்சி!!
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.