சூடு
மதியம் கொதித்தக் காவிரியின்
மணல்வெளி மாலை சற்று
வெப்பம் தணிந்திருந்தது.
ஆடிக் காற்று அவ்வளவு வேகமாயில்லை
சிறு சிறு ஓவியங்களாய்
அழுக்கு கலந்து ஆங்காங்கு
தண்ணீர் கிடந்தது.
ஆமாம்
இது ஆறுதான் என்று நம்புவதற்குக்
கொஞ்சம் தண்ணீர் வேண்டாமா..?
வானம் மூடிக்கிடந்ததால்
மணல் சூடு இல்லை.
காலாற காவிரி மணலில் நடப்பது
சாயங்காலத்தின் சொர்க்கம்.
இரு பெரியவர்கள் மணலில்
குந்தியிருந்தார்கள்.
போன வருஷம் இதுக்கும் அதுக்குமா
தண்ணி ரொம்பிகிட்டு போனிச்சே
இந்த வருஷம் டேம் தெறக்கலயா…
ஒருவரின் பேச்சுக்கு இன்னொருவர்
தலையாட்டினார்.
நல்ல ராசா வந்தா மாரி மழை
பெய்யாமப் போகுமா
மற்றவரின் பதில்.
பொய்த்துப் போன மழைக்கும்
தைத்துப் போட்ட காரணம்
மனசுக்குள் கவலை தொற்றிக் கொண்டது
நீரில்லாக் காவிரியைப் பார்க்க.
வளர்ந்து வளைந்து நெல்மணிகள் கோர்த்த
அலங்காரமாய்ச் சிரித்துத்
தலையாட்டிக் கொண்டிருக்கும்
பயிர்களைத் தேடி கசியும் விழிகள்.
மணலில் செத்துக் கிடக்கும்
மீன் குஞ்சுகளின் துர்நாற்றம்
வாழ்விழந்த அந்தப் பிஞ்சுகளாகத்தான்
இங்கே மனிதப் பாடுகளும்.
நெருங்கும் இருட்டு
சற்று வேகமாய்க் கரை நோக்கி நடை.
இறங்காமல் கிடக்கும் மனசின் பாரம்.
நெளிந்து நெளிந்து சுழல் விட்டு
மெதுவாய் நடப்பது போல் ஏமாற்றி
வேகமாய் ஓடிய நீரைத் தேடும் விழிகள்
சூடு தணியமறுத்து உடன் நடக்கும்.
முத்தரசநல்லூர்..
காவிரிக் கரை அருகே
— தமிழகன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.