பராமரிப்பின்றி மெல்ல வலுவிழக்கும் பாலம் !
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் மோனக்குடி என்ற ஊரின் வழியாக பாய்ந்தோடும் கல்லணைக் கால்வாயின் மீது ஒரு பாலம் உள்ளது. இப்பாலம் அப்பகுதிகளில் உள்ள நந்தவனப்பட்டி, ஆவாரம்பட்டி, வீரமரசன் பேட்டை, கரையாம்பட்டி, முத்துவீரக்கன்டியன்பட்டி ஆகிய கிராமங்களை இணைக்கிறது. இந்த பாலத்தை பயன்படுத்தித்தான் விவசாய வேலைகளுக்கு விவசாயத் தொழிலாளர்கள் சென்று வருகிறார்கள். உழவுக்கு பயன்படும் டிராக்டர் உள்ளிட்ட போக்குவரத்துக்கு மட்டுமின்றி, மேய்ச்சலுக்கான கால்நடைகள் சென்றுவரவும் இந்த பாலம் ஒன்றுதான் ஒரே ஆதாரமாக உள்ளது.
அன்றாட பயன்பாட்டில் உள்ள, தவிர்க்கவே முடியாத முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. பாலத்தை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் பாலத்தின் வழியே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பாலத்தின் மேல் குளம் போல் நீர் தேங்கிக்கிடக்கிறது. சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால், கால்நடைகள் தவறி கால்வாயில் விழும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறது. பாலத்தின் இரு முனைகளையும் இணைக்கும் சாலை வசதியும் குண்டும் குழியுமாக இருப்பதும் பாலத்தின் ஆதாரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகியிருக்கிறது.
பாலத்தின் உறுதித்தன்மையை அவ்வப்போது கண்காணித்து பராமரிக்க வேண்டிய கல்லணைக் கால்வாய் கோட்டப் பொறியாளர் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்பதே சுற்றுவட்டார கிராம விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— தஞ்சை க.நடராசன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.