இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அங்குள்ள ஆறுகளில் நேற்று காலை பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 750 பேர் மாயமாகினர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 57 பேர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாளத்துக்கு ஆன்மீக யாத்திரை புறப்பட்டு சென்றனர்.
இவர்களில் திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி, கற்பகம், கிருபாகரி, வள்ளிநாயகி, சத்யா, அன்பழகி, சித்ரா, சிவயோகம், இளவரசி, தங்கமணி 10 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களில் ஒரு பேருந்தில் சென்ற திருச்சி உறையூர் சாலை ரோடு ரிச் அக்ஷயா அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த முத்துநாதன் மனைவி சிவரஞ்சனி(வயது 46), திருச்சி கே.கே. நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ் மோகன் மனைவி கற்பகம்(62), திருச்சி தில்லை நகர் பத்தாவது கிராஸ் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி வள்ளிநாயகி(63) ஆகிய மூன்று பேர் பத்திரமாக இருப்பதாகவும் இன்று உறவினர்களிடம் பேசியதாகவும் அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
திருச்சி தில்லை நகரை சேர்ந்த வள்ளி நாயகியின் உறவினர் வழக்கறிஞர் மனோகரன் கூறும்போது, கும்பகோணத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் திருச்சியை சேர்ந்த வள்ளி நாயகி, கற்பகம் மற்றும் சிவரஞ்சனி ஆகிய மூவரும் நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து உள்ளிட்ட இன்னும் சில வாகனங்கள் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டது. அதில் எங்களுடைய உறவினர்கள் சென்ற பேருந்து ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டதால் திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி வள்ளிநாயகி கற்பகம் ஆகிய மூன்று பேர் உள்பட அந்த வாகனத்தில் பயணம் செய்த 20 பேர் தப்பித்துள்ளனர்.
அவர்கள் இன்று எங்களிடம் தொடர்பு கொண்டு பேசினர். ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பேருந்து அங்கு சகதியில் சிக்கிக்கொண்டது. அதில் அவர்களின் உடமைகள் உள்ளது. அவை அனைத்தும் அந்த பேருந்துக்குள் உள்ளது. அதை மீட்பது சிரமம் என தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலை தெரியவில்லை.
உறையூரை சேர்ந்த சிவரஞ்சனியின் தோழி அமராவதி என்பவர் கூறும்போது,
சிவரஞ்சினியை ஆன்மீக சுற்றுலாவுக்கு மகிழ்ச்சியோடு நாங்கள் அனுப்பி வைத்தோம். இந்த நிலையில் இன்று இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டதும் மிக வருத்தம் அடைந்தோம். நான் சற்று முன் தான் கோவிலுக்கு சென்று யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என வேண்டிக் கொண்டேன். தற்பொழுது சிவரஞ்சனி நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சிவரஞ்சனியின் கணவர் முத்துநாதன் பேசுகையில்,
என் மனைவி சிவரஞ்சனி உள்பட ஒரே பேருந்தில் சென்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சாலை மார்க்கமாக அழைத்து வருவது கடினம். ஹெலிகாப்டர் மூலமாகத்தான் அழைத்து வர முடியும். நாளை எப்படி அழைத்து வருவார்கள் என்பது குறித்து தெரிய வரும் என நினைக்கிறேன். அரசு மிக துரிதமாக செயல்படுகிறது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக எங்களிடம் விவரங்கள் கேட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் விரைந்து அழைத்து வரப்படுவார்கள் என நம்புகிறோம். காணாமல் போனவர்களும் மீட்கப்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.