50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் 50ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலீசார் சைக்கிள் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோவிலை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் எப்போதும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி வாகனங்கள் செல்வதை கண்காணிப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. போலீசார் சைக்கிள்களில் சித்திரை வீதிகளை சுற்றிவந்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைக்கிளில் ரோந்து செல்வதால் சித்திரை வீதிகளில் நெரிசலான பகுதிகளுக்குள் போலீசார் எளிதாக சென்று கண்காணிப்பு மேற்கொள்ள முடிவதுடன், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகளையும் வழங்க முடிகிறது. மேலும் சித்திரை வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கான தடையை கண்காணிப்பதுடன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.