ஆசைக்கு ஆப்பு வைத்த ஆப்ரோ நிதி நிறுவன மோசடி !
கடந்த 2010 – 2014 காலகட்டத்தில், சென்னை எண்ணூர் கொளத்தூர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது ஆப்ரோ அறக்கட்டளை. ஏசுதாஸ் என்பவரை நிறுவன தலைவராக கொண்ட இந்த அறக்கட்டளையில் 600 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொண்டால், குறைந்த வட்டியில் வங்கிக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் பெற்றுத்தருவதாக விளம்பரம் செய்தார்கள்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை அணுகி, இதே கதையை ஒப்பித்து தலைக்கு 5600/- ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். இவர்களை நம்ப வேண்டும் என்பதற்காக 20,000 முதல் 1 இலட்சம் வரையில் கடனும் கொடுத்திருக்கிறார்கள். இதை நம்பி கடன் வாங்கியவர்கள் மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்ய, அடுத்தடுத்து 52,000 பேர் வரையில் பணத்தை இவர்களிடம் கொட்டியிருக்கிறார்கள்.
இவர்களும் வந்த முதலீடுகளையெல்லாம், ஆப்ரோ டிரஸ்ட், சென்னை மாநகராட்சி ரிப்போர்ட்டர், ஐ.பி.பி. ரியல் எஸ்டேட், ஐ.பி.பி. எண்டர்பிரைசஸ் ஆகிய பெயர்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், உரிமம் இல்லாமல் முதலீடுகளை பெறுவதாக ஆர்.பி.ஐ. எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகிறது. அதற்குள் ஒரு பெரும் வேட்டையையே நடத்தி முடித்துவிட்ட ஏசுதாஸ், தேவி, கிரிஜா கும்பல் தலைமறைவாகிவிடுகிறது.
சென்னை தலைமையிடத்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூரூவில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைது செய்து விசாரணையை தொடங்கி, 16 வருடங்களை கடந்து விட்டது. இன்னும் விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில்தான், இந்த கும்பலின் மோசடியில் சிக்கியவர்கள் யாரேனும் இருந்தால் இழந்த பணத்தை மீட்க புகார் அளிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
அந்தந்த மாவட்டங்களில் இயங்கிவரும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்திலேயே புகார் அளிக்கலாம் என்பதாக குறிப்பிடும் போலீசார், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்க உதவி எண்களையும் அறிவித்திருக்கிறார்கள்.
புகார் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அழைக்க : 7010190757 – 9498109056 – 9840895154 – 9498127068
16 ஆண்டுகளுக்கு பிறகு சூடு பிடிக்கும் ஆப்ரோ மோசடி!
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.