ஆன்லைன் மோசடிகளும், நிறுவன மோசடிகளும் பெருகிவிட்ட காலத்தில் இவர்களும்கூட மோசடி செய்வார்களா? என்று புருவம் உயர்த்த வைத்த மோசடிகளுள் ஒன்றுதான் பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி.
1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவனம் சென்னை பெரம்பூர் பாரதி சாலையில், சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.
”50 ஆண்டு அனுபவம் உள்ள நிறுவனம். சொந்தக் கட்டிடம் இருக்கிறது. ஏமாற்றிவிடவா போகிறார்கள்?” என்ற எதார்த்தமான புரிதலிலிருந்து, பலரும் நம்பி முதலீடு செய்திருக்கிறார்கள். நிறுவனத்தை சேர்ந்த வசந்தி ஈஸ்வரப்பன், அவரது மகள் சக்தி ஐஸ்வர்யா மற்றும் ராஜம் கண்ணன் ஆகியோர் உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தி முதலீடுகளை பெருமளவு பெருக்கியுள்ளனர். முதலீட்டுக்கு 10% முதல் 12% வரை வட்டி வழங்குவதாக ஆசை வார்த்தைகளை அளந்து விட்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் முறையாக மாதாந்திர வட்டித்தொகை சொன்னபடி வந்து சேராத நிலையில், பலரும் கேள்வி எழுப்ப, முதலீட்டை திரும்பக்கேட்க விவகாரம் வெடித்தது. போலீசு புகாரானது. சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத்தை ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி சீல் வைக்கும் நிலை உருவானது.
வழக்கில் சிக்கிய 2023 காலகட்டத்தில் 28 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக கருதப்பட்ட நிலையில், புகார்கள் குவிய மோசடியின் அளவு 100 கோடியை தாண்டியது. சுமார் 2000-க்கு அதிகமானோர் 2 இலட்சம் முதல் 1 கோடி வரையிலும்கூட முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கிறார்கள்.
வட்டி வருவாய் குறைவுதான் என்ற போதிலும், அரசு பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி. போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி | 200 கோடி நம்பிக்கை மோசடி
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.