கொரியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு !
கொரிய தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் முதலாம் பன்னாட்டு இந்தியா–தமிழ்–கொரியா ஆய்வு மாநாடு 2026, கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு.
ஓசோங் (தென்கொரியா): கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் கொரியாவில் “முதலாம் பன்னாட்டு இந்தியா–தமிழ்–கொரியா ஆய்வு மாநாடு 2026”, தமிழ்க் கலை இலக்கியத் திருவிழா மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா ஆகியவை வரும் அக்டோபர் 31, 2026 அன்று டேஜான் அருகிலுள்ள ஓசோங் அரங்கில் (Osong Hall) கோலாகலமாக நடைபெறவுள்ளன.
சென்னையைச் சேர்ந்த கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் (இயக்குநர் முனைவர் மோ. பாட்டழகன்), வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இவ்விழாவை இணைந்து நடத்துகின்றன.
கொரிய தமிழ்ச் சங்கம்: ஒரு பார்வை
தென்கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் பதிவு பெற்ற அரசு சாரா அமைப்பான கொரிய தமிழ்ச் சங்கம், ஓசோங்கைத் தலைமையிடமாகக் கொண்டு, உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பு அமைப்பாக இயங்கி வருகிறது. கொரியாவில் வாழும் தமிழர்கள் நலனுக்காகச் சங்கம் பணியாற்றுகிறது.
தமிழ்க் குழந்தைகளுக்கான “கற்க கசடற” தமிழ் வகுப்புகள், தமிழ்த் தொழிலாளர்களுக்கான கொரிய மொழி வகுப்புகள் மற்றும் அவசர உதவிகள், உயிரிழக்கும் தொழிலாளர்களின் உடல்களைத் தாயகம் அனுப்பும் ஏற்பாடுகள், தமிழ்–கொரிய இலக்கிய மொழிபெயர்ப்பு, பொங்கல் விழா, கிரிக்கெட் போட்டிகள் எனப் பல்வேறு பணிகள் மூலம் கொரியத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் இணைத்து வருகிறது.
திருவள்ளுவர் சிலை திறப்பு
விழாவின் சிறப்பம்சமாக, தென்கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்படுகிறது. உலகெங்கும் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய வி.ஜி.பி. குழுமத்தின் திரு. வி.ஜி.பி. சந்தோஷம் அய்யா அவர்கள், தமது 205ஆவது திருவள்ளுவர் சிலையாக இச்சிலையை அன்பளித்துத் திறந்து வைக்கிறார்.
கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2026
தமிழ் மொழி, இலக்கியம், கலை, ஆய்வு மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் “கொரிய தமிழ்ச் சங்க விருதுகள்” இவ்விழாவில் வழங்கப்படுகின்றன. கொரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவ்விருதுகளால் சிறப்பிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட இவ்விருதுகள், இவ்வாண்டு மூன்றாவது முறையாக வழங்கப்படுகின்றன.
உலக அளவில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் ஆற்றிய அரும்பணிக்காக திரு. வி.ஜி.பி. சந்தோஷம் அய்யா அவர்களுக்குக் கொரிய தமிழ்ச் சங்கத்தின் உயரிய “உலகத் தமிழன் விருது” வழங்கப்படுகிறது. இதய நோய் மருத்துவத் துறையில் ஆற்றி வரும் சிறந்த சேவைக்காக இதய நோய் சிறப்பு மருத்துவர் முனைவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு “மருத்துவச் செம்மல் விருது” வழங்கப்படுகிறது. மேலும், லண்டன் நகர்மன்ற உறுப்பினர் திரு. அப்பு தாமோதரன் சீனிவாசன் அவர்களுக்கும் இவ்விழாவில் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.
ஈராயிரம் ஆண்டுத் தமிழ்–கொரிய உறவு
தமிழர்களுக்கும் கொரியர்களுக்கும் இடையிலான உறவு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. பண்டைய தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கி, தென்கிழக்கு ஆசியா வழியாகக் கிழக்காசிய நாடுகள் வரை வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வளர்த்தனர். காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற தமிழகத்தின் பௌத்த மையங்களிலிருந்து பரவிய பௌத்த நெறியும் இவ்விரு மக்களையும் இணைத்தது. இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன என்பதைப் பல பௌத்த குருமார்கள் தங்கள் நூல்கள் மூலமாக அங்கீகரித்துள்ளனர். அம்மா–엄마 (எம்மா), அப்பா–아빠 (அப்பா), நான்–나 (நா) போன்ற சொல் ஒற்றுமைகளும் இத்தொடர்புக்குச் சான்றாக ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அரசி ஹியோ ஹ்வாங்-ஓக் (செம்பவளம்): மரபு நடைப்பயணம்
கி.பி. 48ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கடல்வழியாகக் கொரியா வந்து, கரக் (கயா) நாட்டு மன்னர் கிம் சுரோவை மணந்த அரசி ஹியோ ஹ்வாங்-ஓக் பற்றி கொரியாவின் பண்டைய வரலாற்று நூலான “சம்குக் யுசா” குறிப்பிடுகிறது. அவர் தமிழகத்தைச் சேர்ந்த “செம்பவளம்” என்ற இளவரசி என முனைவர் நா. கண்ணன் மற்றும் பல தமிழறிஞர்கள் ஆய்வுகள் மூலம் முன்வைத்து வருகின்றனர். இன்றும் பெருமளவிலான கொரியர்கள், குறிப்பாக கிம்ஹே கிம், கிம்ஹே ஹியோ குடிவழியினர், தங்களை அரசியின் வழித்தோன்றல்களாகப் போற்றுகின்றனர்.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, கிம்ஹே நகரில் அமைந்துள்ள அரசி ஹியோ ஹ்வாங்-ஓக் நினைவிடத்திற்கு மரபு நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் ஒன்றிணைந்து அரசியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது, தமிழ்–கொரிய வரலாற்றுப் பிணைப்பை உலக அரங்கில் எடுத்துரைக்கும் முக்கிய நிகழ்வாக அமையும். மேலும், இரு நாட்டு மக்களிடையே பண்பாட்டு நல்லுறவையும், வரலாற்று ஆய்வுகளுக்கான புதிய வாய்ப்புகளையும் இந்நடைப்பயணம் உருவாக்கும் என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
ஆய்வரங்கம்
தமிழ்–கொரிய உறவுகள் குறித்த ஆய்வரங்கம் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக நடைபெறுகிறது. உலக நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை அறிஞர்கள் நேரிலோ அல்லது இணைய வழியாகவோ வாசிக்கலாம். பெறப்படும் அனைத்துக் கட்டுரைகளும் விழா மலரில் இடம்பெறும்; தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ISBN எண்ணுடன் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பாக வெளியிடப்படும். இவற்றுடன் கலைத் திருவிழா, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா ஆகியவையும் இடம்பெறுகின்றன.
இதுபற்றி சங்கச் செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா கூறுகையில், “தமிழ்–கொரிய மொழியியல் ஒற்றுமைகள், பண்பாட்டுத் தொடர்புகள், பண்டைய தமிழகத்துக்கும் கொரியாவுக்கும் இடையிலான கடல்வழி வணிக உறவுகள் குறித்த ஆய்வுகள் இம்மாநாட்டின் மூலம் முறையாக ஆவணப்படுத்தப்படும். இது எதிர்கால ஆய்வாளர்களுக்கு வலுவான அடித்தளமாக அமையும்” என்றார்.
உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்பு மற்றும் தலைவர் கருத்து
இதுகுறித்து கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் செ. அரவிந்தராஜா கூறுகையில், “இந்தியா, இலங்கை, கனடா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், பப்புவா நியூ கினி உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். கொரியாவிலிருந்தும் தலைவர்கள், அறிஞர்கள் விழாவுக்கு வரவேற்கப்பட்டுள்ளனர். தமிழ்–கொரியப் பிணைப்புகளை உலக அரங்கில் எடுத்துரைக்கும் முதல் முயற்சியாக இம்மாநாடு அமையும்.
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு, அரசி செம்பவளம் இணைத்த கொரிய மண்ணில் சிலை நிறுவப்படுவது ஈராயிரம் ஆண்டு உறவின் புதிய அத்தியாயமாகும். இங்கு வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு வேர்களை நினைவூட்டும் சின்னமாகவும், கொரிய மக்களுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பண்பாட்டுப் பாலமாகவும் இச்சிலை விளங்கும்” என்றார்.
விழா ஏற்பாடுகள்
இந்தியாவில் விழா ஏற்பாடுகளை முனைவர் மோ. பாட்டழகன் அவர்கள் ஒருங்கிணைத்து வருகிறார். கொரியாவில் சங்கத் துணைத் தலைவர் திருமிகு. தெ. விஜயலெட்சுமி, பொருளாளர் முனைவர் ந. முத்துசாமி, இணைப் பொருளாளர் முனைவர் பீ. ஜெரோம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கொரிய தமிழ்ச் சங்கம், ஓசோங், சியோங்ஜு, தென்கொரியா






Comments are closed, but trackbacks and pingbacks are open.