காவிரி என்பது என்பது ஓர் உயிர் !

ஏன் வேண்டாம் மேகேதாட்டு அணை? – 6 

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காவிரி என்பது என்பது ஓர் உயிர். அதனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து இறுதியில் காண்போம்.

செயற்கை நீர்த்தேக்கங்கள் குறித்து DW என்ற இதழில் வெளியான கட்டுரை ஒன்று இவ்வாறு மதிப்பிடுகிறது. “மனித குலத்துக்குத் தேவைப்படும் நன்னீரில் 7% நீரை ஒவ்வோர் ஆண்டும் உலகின் செயற்கை நீர்த்தேக்கங்கள் ஆவியாக்கிக் கொண்டிருக்கின்றன.”

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இத்துடன், ‘1970-ஆம் ஆண்டு தொடங்கி நன்னீர் உயிரினங்களின் எண்ணிக்கை 84% விரைவாகச் சரிந்ததற்கு நீர்மின் அணைகளே முதன்மைக் காரணம்’ என்று ‘சர்வதேச ஆறுகள்’ அமைப்புக் குற்றம் சாட்டுகிறது.

மேகேதாட்டு அணையும் காவிரி காட்டுயிர்க் காப்பகத்தில்தான் அமையவிருக்கிறது.

காவிரி காட்டுயிர்க் காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான மேக்கேதாட்டு, பிலிகிரி ரங்க (பி.ஆர்) மலைகள் தேசியப்பூங்காவையும், புலிகள் காப்பகமான மாலே மகாதேஸ்வர (எம்.எம்) மலைகளையும் இணைக்கிறது. காவிரி காட்டுயிர்க் காப்பகத்தின் 7,862.64 ஏக்கர் நிலமும், அதனை ஒட்டியுள்ள பாதுகாக்கப்பட்ட கான் பகுதியின் 4619.63 ஏக்கர் நிலமும் அணையின் நீரில் மூழ்கக் காத்திருக்கிறது.

இந்த அணையில் மூன்று நிலத்தடி மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானமும் அடங்கும். இதற்காகக் குறைந்தபட்சம் 2,000 டன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். காப்பகத்திற்குள் உள்ள பாறை மற்றும் மணல் படிவுகளே இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

நிலத்தடி மின் உற்பத்தி நிலையம் என்று கூறுகையில் ஸ்ரீசைலம் அணை நினைவுக்கு வருகிறது. 1987இல்  அம் மின் நிலையத்தில் அதன் பாதுகாப்புச் சுவர் கட்டப்படவிருந்த இடத்திலிருந்து, நிலத்தடியில் இருந்த மின் நிலையத்திற்குள் (770 மெகாவாட்) வெள்ள நீர் புகுந்தது. இதனால், மின் நிலையம் முழுதும் மூழ்கி அதன் மின் சாதனங்கள் செயலிழந்தன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதைத் தவிர காட்டுயிர் ஆர்வலர்களின் கவலை தனியானது. பி.ஆர். மலைகள், எம்.எம். மலைகளில் வாழும் புலிகளுக்கு இப்பகுதிதான் இடைப்பட்ட மண்டலமாக (Buffer Zone) உள்ளது. இதை இழந்தால்  நாம் மனித – புலிகள் எதிர்கொள்ளலைத் தடுக்க இயலாது போகும். யானைகளின் வலசைப் பாதை இங்குதான் வடக்கு தெற்காக அமைந்துள்ளது. ஆதலால் அது தடைப்படும். காவிரி காட்டுயிர்க் காப்பகம் தனித்துவமான உயிரினங்களைக் கொண்டது. அருகிவரும் இனமான சாம்பல்நிற அணில்கள், தேன் கரடிகள், தக்காண மகாசீர் மீன்கள், நீர்நாய்கள் அழிந்துவிடும் என்று அவர்களுக்கு பல கவலைகள்.     மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத கர்நாடக அரசாங்கமா காட்டுயிர்களைப் பற்றி கவலைப்பட போகிறது? ஐந்து குடியிருப்புப் பகுதிகள் இந்த அணைக்குள் மூழ்கப் போகிறது. அனைத்தும் பழங்குடியினர் வசிப்பிடங்கள். இவர்களின் மறுகுடியேற்றத்துக்கு மீண்டும் வேறொரு காட்டுப் பகுதிகளைத்தான் அழித்தாக வேண்டும்.

உண்மை என்னவெனில், சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திட்டத்தின் நுணுக்கங்களை ஆராய்ந்த 15 பேர் கொண்ட வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (EAC – Expert Appraisal Committee)  அதன் சாத்தியக்கூறு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய பேரழிவுத் தாக்கம் மற்றும் சமூக-பொருளாதார விளைவுகள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த அறிக்கை பொதுவெளியில் கிடைக்கவில்லை என்றாலும், மாற்றுத் திட்டங்களைத் தேடுமாறு மாநில அரசுக்கு அக்குழு அறிவுறுத்தியுள்ளதாகக்  கர்நாடக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றுச்சூழல் எழுத்தாளர் கே.ஏ.ஷாஜி Mongabay இதழில் 2018ஆம்  ஆண்டிலேயே எழுதியுள்ளார்.

தெற்காசிய அணைகள், ஆறுகள், மக்கள் வலையமைப்பின் (SANDRP – South Asian Network on Dams, River and People)  ஹிமான்ஷு தாக்கரின் கூற்றுப்படி, “மேகேதாட்டுத் திட்டம் தேவையற்றது, அதிக செலவு மிக்கது, அழிவை ஏற்படுத்தக்கூடியது. இது ஏற்கனவே சீர்குலைந்துள்ள காவிரி ஆற்றை மேலும் சீரழித்துவிடும். ஆகவே, காலநிலை மாற்றத்தின் பின்னணியில், இத்திட்டம் பொருத்தமற்றது” என்கிறார்.

காவிரி மட்டுமல்ல ஆறுகள் அனைத்தும் உயிர்களே.  நம் உடலில் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடையின்றி ஓடுவது அவசியம். அதுதான் உடல் நலத்தின் அடையாளம். நம் உயிர்ச்சூழலில் ஆறுகளும் தடையின்றி ஓடுதல் அவசியம். அதுவே அதன் நலத்தின் அடையாளம்.

ஆறுகள் நலமாக இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் இருக்கும் ஏறத்தாழ 20 கோடி டன் கார்பனை உறிஞ்சிக் கொள்கிறது. அதனால் கார்பன் சுழற்சி ஒழுங்குப்படுத்தப்பட்டு காலநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தடையின்றி பாயும் ஆறுகள் நமக்கு வழங்கும் கண்ணுக்குத் தெரியாத சேவைகள், நன்மைகள் பலவாகும். அவற்றில் இதுவும் ஒன்று. நம்முடைய ஆறுகளின் நாளங்களில் நாம் ஏற்கனவே அளவுக்கும் அதிகமான அடைப்புகளை ஏற்படுத்தி விட்டோம். அதுவே போதும்.

ஆறு என்றால், நீரோடும் பாதை முழுவதும் அது ஆறுதான். அணைக்கு மேலே இருப்பதுதான் ஆறு. கீழிருப்பது ஆறல்ல என்பது முற்றிலும் வறட்சியான சிந்தனை.  காவிரிக்கும் அது பொருந்தும்.

முற்றும்

எழுத்தாளர் நக்கீரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.