அரசு மருத்துவர்கள் – தனியார் கிளினிக்குகள் : தடை வருமா?
”அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லாதது தனியாரை ஊக்குவிப்பதற்கு சமம். அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகள் அல்லது மருத்துவமனைகளை ஒட்டிய கிளினிக்குகளை நடத்தி வருகிறார்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்துவிட்டு, மறுநாள் தங்களது தனியார் கிளினிக்கிற்கு வருமாறு கூறுகிறார்கள்.” என்பதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருக்கும் கருத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனை – மருத்துவர்கள் தொடர்பான விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான AV கதிர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு மீதான விசாரணையில்தான், இப்படி ஒரு கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1981-ஆம் ஆண்டிலேயே, இதயவியல் துறை தொடங்கப்பட்டாலும், 2009 இல்தான் முதல் முறையாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 2025 முதல் மே 2026 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் 1,19,924 வெளி நோயாளிகளை இந்த துறை கையாண்டிருக்கிறது. இவர்களில் 1,13,997 பேருக்கு ECG பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 77,263 பேருக்கு எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. பரிசோதனையின் முடிவில், 4,086 பேரை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சையளித்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான கரோனரி ஆஞ்சியோகிராம்கள், ஸ்டென்ட்டுடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டிகள், பலூன் ஆஞ்சியோபிளாஸ்டிகள், நிரந்தர மற்றும் தற்காலிக பேஸ்மேக்கர் பொருத்துதல்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் உயர் சிகிச்சையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயவியல் துறை மருத்துவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் இதயநோய் தொடர்பான முதற்கட்ட மருத்துவ சிகிச்சைகள்தாம்.

இவைகளைத் தாண்டி இன்னும் தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கார்டியோஜெனிக் ஷாக், கட்டுப்படுத்த முடியாத வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன், முழுமையான இதயத் தடுப்பு மற்றும் கடுமையான கரோனரி அடைப்பு போன்ற பாதிப்புகளோடு வரும் நோயாளிகளை கையாள்வதற்கேற்ப பொருத்தமான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இதுபோன்ற நோயாளிகளுக்கு சில நிமிடங்களில் பரிசோதனைகள் அவசியப்படலாம். அடுத்த சில நிமிடங்களில் தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இந்த பின்புலத்திலிருந்துதான், இதயவியல் துறைக்குத் தேவையான எக்மோ இயந்திரங்கள், இதயத் துடிப்பைச் சீரமைக்கும் மின்அதிர்ச்சி கருவிகள், உள்பெருந்தமனி பலூன் பம்ப் கருவிகள் மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு உபகரணத் தேவைகள் குறித்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள முழுமையான உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation Limited) மூலம் கொள்முதல் செய்வதற்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார், AV கதிர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை என்றில்லை; தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் அவலநிலை இதுதான். இதயவியல் துறை என்றில்லை; மூளை நரம்பியல் துறையை மட்டும் எடுத்துக் கொண்டு பரிசீலித்தால் இதுபோன்ற ஆயிரம் கதைகளை கொட்ட முடியும். டயாலிசிஸ் நோயாளிகளை கையாளும் சிறுநீரகவியல் துறையை எடுத்துக்கொண்டால் அதில் மற்றுமொரு ஆயிரம் சங்கதிகளை நம்மால் பட்டியலிட முடியும்.
இந்த பின்புலத்திலிருந்துதான், AV கதிர் தொடுத்த பொதுநல வழக்கும் அதன்மீதான உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒன்று சம்பந்தபட்ட சுகாதாரத்துறை மற்றும் அரசின் அலட்சியம் தொடர்பானவை. மற்றொன்று, அரசு மருத்துவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
தமிழகத்தின் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் ஒரு பத்து நிமிடம் உள் நுழைந்து பாருங்கள். அதிலும் குறிப்பாக, தீவிர அவசர சிகிச்சைப் பிரிவை கொஞ்சம் எட்டிப்பாருங்கள். கட்டுங்கடங்காத கூட்டத்தை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அவை, நிச்சயம் உங்களுக்கு எதிர்பாராத போர்க்களத்தை நினைவு படுத்தலாம். போர்க்களத்தில் காயமுற்ற சிப்பாய்களுக்கு சிகிச்சையளிப்பதில், அடிப்படை வசதிகளையோ, மருத்துவ உபகரணங்களையோ, போதுமான மருத்துவர்களையோ எதிர்பார்ப்பதில்லை. இருப்பதைக்கொண்டு தொடர்ந்து 36 மணி நேரம்கூட பணியாற்றும் மனவலிமையை அந்த மருத்துவர்கள் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால், நாளொன்றுக்கு சராசரியாக இத்தனை நோயாளிகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம் என்ற புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டும்; அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தராதது யாருடைய பொறுப்பு? அத்தனை பணிச்சுமைகளையும் அரசு மருத்துவர்கள் தலையில் அதிலும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் தலையில் சுமத்தப்படுவதற்கும் அவர்களை எந்நேரமும் ஒருவிதமான அழுத்தத்திற்கு மத்தியிலேயே பணியாற்றும்படி நிர்ப்பந்திப்பதற்கும் யார் பொறுப்பாளி? இந்த விவகாரத்தில், முதல் குற்றவாளி சம்பந்தபட்ட சுகாதாரத்துறையும் துறை சார்ந்த அதிகாரிகளும் அவர்களுக்கு பொறுப்பான இந்த அரசும்தான்.
அடுத்து, இப்படி ஒரு புறவயமான சூழல் இருந்தும் அது குறித்து தீவிரமான அக்கறை கொள்ளாமல், அரசுக்கு அறிக்கை அனுப்பி விட்டோம். அரசு உபகரணங்களை கொடுத்தால்தான் எங்களால் பணியாற்ற முடியும் என்பதாக பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கும் மருத்துவர்களின் மனநிலை சிக்கலுக்குரியது.
மருத்துவர்கள் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கடுமையான பணிச்சூழலில் மன அழுத்தங்களோடுதான் தினமும் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. சம்பள உயர்வு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் அதிலும் குறிப்பாக தனியே கிளினிக் நடத்தக்கூடாது என்பதற்காக வழங்கப்படும் சிறப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மருத்துவர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.
அதேசமயம் தமிழகத்தில், 70% அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்களது பணிகளை முழுமையாக முடித்துவிட்டோ, அல்லது பகுதி அளவில் நிறைவேற்றிவிட்டோ, இன்னும் சிலர் முதுநிலை மருத்துவ மாணவர்களின் தலையில் கட்டிவிட்டோ தனியார் மருத்துவமனைகளில் பகுதிநேரமாக பணியாற்ற கிளம்பிவிடுகிறார்கள். அல்லது, சொந்தமாக கிளினிக் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தமாக மருத்துவமனையையே நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் பிரபலமான மருத்துவமனையில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளும் மறுக்க முடியாதவை. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முன்னெடுக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறையும் தோல்வியை தழுவியது என்பது தனிக்கதை.
தமிழகத்தின் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்துவரும் சில நூறு கோடிகள் தொடர்பான புகார்களில் அரசு மருத்துவர்கள் தொடர்பான கொடுக்கல் – வாங்கல் பஞ்சாயத்துகளும் கணிசமாக இடம்பிடித்திருக்கின்றன. தஞ்சையில் 5 கோடி பேர விவகாரத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கைதான சம்பவமும்; திருச்சியில் கட்டப்பஞ்சாயத்து சர்ச்சையில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவமும் பிரபலமான தனியார் மருத்துவமனையின் பஞ்சாயத்தை ஒட்டிய விவகாரங்கள்தான்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், வெளி நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்த 1,19,924 பேரில், வெறும் 4,086 மட்டுமே உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் உணர்த்தும் உண்மை என்ன? சொத்தை விற்றாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி சென்றிருப்பார்கள். அதற்கும் வழியில்லாதோர் விதிப்படி நடக்கட்டும் என்று வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டிருப்பார்கள்.
கார்ப்பரேட்கள் கோலோச்சும், கொள்ளை இலாபம் கொழிக்கும் துறையாக மருத்துவத்துறை மாறியதன் பின்னணி என்ன? தனியார் மருத்துமனைகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புறநோயாளி பிரிவாக அரசு மருத்துவமனைகள் மாறிவிட்டன என்ற உண்மை எவ்வளவு துயரமானது? உயிர்வாழும் உரிமைக்கு விலை நிர்ணயிக்கப்படும் கொடுந்துயர் எத்துனை கொடூரமானது?






Comments are closed, but trackbacks and pingbacks are open.