தண்ணிய குடிச்சா நோய் வருது … பயிரெல்லாம் கருகுது … சாராய ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு !
விராலிமலை பீர் தொழிற்சாலை வேண்டாம்!” தொடரும் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கால்ஸ் (KALS Breweries & Distilleries Pvt Ltd) தனியார் சாராய தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய கிராம மக்கள் 129 பேரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல் 5 ஆண்டுகளுக்கான அனுமதியோடு தொடங்கப்பட்ட இந்த சாராய தொழிற்சாலை, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி அதிகாரிகளின் துணையோடு தொடர்ந்து இயங்கி வருவதாகவும்; இதனால் தங்களது குடிநீர் ஆதாரம் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தொழிற்சாலை பகுதியில் குட்டை போல அமைத்து அதில் சேமித்து வருவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு போயிருப்பதோடு, மழை காலங்களில் விவசாய பயன்பாட்டுக்கான ஏரி குளங்களிலும் கலந்து விவசாயத்தை பாழ்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“ஆலைக்கழிவுகள் கலந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் பயிர்கள் கருகிவிடுகின்றன. நிலத்தடி நீரில் கலந்துவிட்டதால், ஆழ்துளைக்கிணறு மூலம் விவசாயத்துக்கும் குடிக்கவும் பயன்படுத்தும் தண்ணீரும் நஞ்சாகிவிட்டது. நச்சு கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால், உடல் உபாதைகளும் சரும பிரச்சினைகளும் வருகிறது. தர பரிசோதனைக்காக தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்ற அதிகாரிகள் இன்று வரையில் அந்த முடிவுகளை அறிவிக்கவே இல்லை. நாங்களும் 14 வருஷமாக போராடிப் பார்த்துட்டோம். தீர்வுதான் கிடைக்கலை” என்கிறார்கள், குன்னத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு ஆகியோர்.
சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கொடும் பாதிப்பை ஏற்படுத்திவரும், இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஊராட்சியில் தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனாலும், அந்த தீர்மானத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை இல்லை என்கிறார்கள். இதுதவிர, மாவட்ட ஆட்சியரிடமும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தொடர்ந்து பலமுறை முறையிட்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்கிறார்கள்.
கால்ஸ் நிறுவனம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களையா தயாரிக்கிறது? குடிகெடுக்கும் சாராயத்தை ஊரெங்கும் பாய்ச்சுவதற்காக, இயங்கிவரும் இந்த ஆலையை அதிகாரிகள் ஏன் மூட மறுக்கிறார்கள்? ஆட்சி மாறியும் காட்சி மாறாத அவலத்தை கண்டு கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் குன்னத்தூர் கிராம மக்கள். தீர்வு எப்போது?
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.