தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மாவட்ட நீதிபதி விடியல் குகன் !
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக, நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கு. கருணாநிதி (எ) விடியல் குகன் தமிழ்ச்செம்மல் விருது பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் தமிழார்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசால் வழங்கப்படும் விருதுதான் தமிழ்ச்செம்மல் விருது.
2025 ஆம் ஆண்டிற்கான, நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார், நீதிபதி கு. கருணாநிதி (எ) விடியல் குகன். தமிழ்நாடு எனும் தனி மாநிலமாக உருவான நாளான நவம்பர்-1 அன்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வன்னியரசு, விஜயலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் நீதிபதி கு. கருணாநிதி (எ) விடியல் குகன் உள்ளிட்டு 74 பேருக்கு வழங்கப்பட்டன.

M.A., M.L., M.Sc ஆகிய முதுகலைப் பட்டங்களைப் பெற்ற கு. கருணாநிதி (எ) விடியல் குகன், தொடக்க காலத்தில் வழக்கறிஞராக நாமக்கல் மற்றும் பரமத்தி ஆகிய நீதிமன்றங்களில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டவர்; பின்னர் நீதிபதியாக உயர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாவட்ட நீதிபதி என்ற அடையாளத்தை தாண்டி, அவர் ஒரு தமிழ் இலக்கியவாதியாகவே அறியப்பெற்றவர். பணி காலத்திலும் சரி, பணி ஓய்வுக்குப் பிறகும் சரி, நீதிபதிகளுக்கே உரிய எந்தவிதமான அதிகார தோரணையையும் அவரிடம் சற்றும் எதிர்பார்க்க முடியாது. எல்லோரிடமும் இயல்பாக உரையாடலை தொடங்கிவிடுவார். பணிஓய்வுக்கு பிறகும்கூட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று சொற்பொழிவுகளை ஆற்றிவருபவர்.
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்; யாவரும் கேளிர் கலை இலக்கிய மையம்; அன்பு வழி நல்வாழ்வு மையம்; விடியல் சட்ட சேவை மையம்; விடியல் மாணவர்கள் இளைஞர்கள் நல மையம் ஆகியவற்றின் அமைப்பாளராகவும் இன்றளவும் இயங்கிவருபவர். புது விடியல் படைப்பகம், தவம் ஆகிய யூடியூப் சேனல் வழியாகவும் உரையாடலை தொடர்ந்து வருகிறார்.
இசை தரும் இனிய பாடல்கள், மாணவர்களுக்கு 100 குறள்கள், புதிய வெளிச்சம், பூலோகம் ஆனந்தத்தின் எல்லை (கவிதைகள் தொகுப்பு), ஆயிரம் மலர்களே மலருங்கள் (சிறுகதைகள் தொகுப்பு), சிற்பி கொ. வேலாயுதம் பற்றிய வரலாற்று பதிவான வேலாயுத வேள்வி உள்ளிட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார்.
இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக, பணி ஓய்வு காலத்திலும் வயது மூப்பையும் பொருட்படுத்தாமல், இன்றளவும் இலக்கியத்தளத்தில் இயங்கிவரும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கு.கருணாநிதி (எ) விடியல் குகன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.