கொள்ளையடித்த நகைகள் முழுமையாக மீட்பு… நிஷாந்த் கும்பலின் பின்னணி என்ன?
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் முழுமையாக மீட்பு நிஷாந்த், தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி கைது வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் பேட்டி.
மதுரை ss காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 15 முதல் 18 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்ட நிலையில், கடையின் இருப்புப் பதிவேடுகளைச் சரிபார்த்ததில் 11.384 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், அவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததைப் பயன்படுத்தி நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டாரா என்பதை அறிய இரண்டு நாட்கள் அவர் கடைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவிகேமரா ஒன்றை மறைப்பதற்காக பெயிண்ட் போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் தன்மையை அறிய ஆய்வகப்பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொள்ளைக்குப் பிறகு நிஷாந்த் தனது தந்தையை அழைத்து பை ஒன்றைக் கொடுத்துள்ளார் அதனை வாங்கிச்சென்று வீட்டில் வைத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொள்ளை குறித்து தந்தைக்கு எப்போது தெரியவந்தது நகைகளை மறைப்பதில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

நிஷாந்தின் தோழி மீனாட்சிக்கு கொள்ளைச் சம்பவம் தெரிந்திருந்தும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கிருக்கின்றன என்பது குறித்தும் அவருக்கு ஓரளவு தெரிந்திருந்தது தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி நகைகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தக் கொள்ளையில் நிஷாந்த் மட்டுமே நேரடியாக ஈடுபட்டதாக இதுவரை தெரியவந்துள்ளது. இருப்பினும் நகைக்கடை ஊழியர்கள் அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும். கொள்ளைக்குப் பயன்படுத்திய கருவிகள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. நிஷாந்தின் செல்போனை ஆய்வு செய்து யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் கொள்ளைக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டாரா என்பதும் விசாரிக்கப்படும். கொள்ளைக்குப் பிறகு பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்றதற்கான காரணம் மற்றும் யாரிடமாவது உதவி கேட்டாரா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இந்த வழக்கில் ஒரு காவல் துணை ஆணையர் 6 உதவி ஆணையர்கள் 14 முதல் 15 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வெளி மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் நகைக்கடைகளில் பர்குலர்அலாரம் இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாதது பாதுகாப்புக் குறைபாடு எனக்குறிப்பிட்ட ஆணையர் கடையின் உள்ளே மட்டுமின்றி வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மதுரையில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சமூகவலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவதுஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கிப் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 60 முதல் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல்ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே கொள்ளையின்முழுமையான பின்னணி, மற்றவர்களின் தொடர்பு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் .






Comments are closed, but trackbacks and pingbacks are open.