இந்திய இறையாண்மை எனும் பூச்சாண்டி !
2017-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் கசிவு மற்றும் ஹைட்ரோகார்பன் ஆய்வுப் பணிகளுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்றது.
ஜூலை 10, 2017 அன்று கதிராமங்கலம்-பந்தநல்லூர் சாலையில் (எண்ணெய்க் கிணறு எண் 35 அருகே) ஓஎன்ஜிசி குழாயில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்சிகளும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன.
நிகழ்விடத்திற்கு வந்த ஓஎன்ஜிசி அதிகாரிகளைத் தடுத்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் வரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டு வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
மேற்படி போராட்டத்திற்கு களத்தில் நின்று மக்களுக்கு ஆதரவாக போராடிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், நல்லதுரை, மாவட்ட காங்கிரசு தலைவர் லோகநாதன், விவசாயிகள் சங்க அய்யாக்கண்ணு, சி.பி.எம். (CPM) கட்சியின் பாலகிருஷ்ணன், பி.ஆர். பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை எண்- 139/2017 பதிவு செய்யப்பட்டது .
அவ்வழக்கு தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்/ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு எண் – 227/2025 என்ற எண்ணில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஐயா பெ. ம அவர்கள் 1- ஆவது எதிரி….
ஐயாவுக்காக நான் வழக்கை நடத்தினேன்…
இந்த வழக்கின் விசாரணையின் பொழுது ஐயா பெ. மணியரசன் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கால் வலியால் அவதிப்பட்டு அதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த காரணத்தால், ஐயா அவர்களால் நீதிமன்றத்தில் நேர் நிற்க முடியவில்லை.
ஐயா பெ.ம அவர்களின் உடல்நலக் குறைவை நீதிபதி அவர்களிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், மாண்பமை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை…
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து நகலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், குற்றத்தின் தன்மை நீதிமன்றத்தால் எடுத்துரைக்கப்படும். அப்பொழுது, குற்றத்தை மறுத்தோ அல்லது ஏற்றோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பின்னர், அதில் கையெழுத்திட வேண்டும்.
அதன் பின்னர், சாட்சிகள் விசாரணை தொடங்கும்.
அந்தச் சாட்சிகள் விசாரணை முழுவதும் நடைபெற்று முடிந்த பிறகு, மீண்டும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் நிற்க வேண்டும்.
அப்பொழுது, அரசு தரப்பில் சாட்சியம் அளித்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்; எனவே, அந்தச் சாட்சியம் குறித்த உங்களது கருத்து என்ன என்று நீதிமன்றம் கேள்வி கேட்கும். அதனை ஏற்றோ மறுத்தோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது பதிலைப் பதிவு செய்யலாம். அதிலேயும் சாட்சியத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த இரண்டு, மூன்று நிலைகள் மிக முக்கியமானதாகும்.
அரசு தரப்பு சாட்சியங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞரே விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வழக்கை நடத்திட முடியும்.
எனினும், சில நேர்வுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் நிற்பது அவசியமாகும்.
இந்தச் சட்ட நிலைப்பாட்டைத்தான் நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே, நீதிபதி அவர்களையும் இதில் குறை சொல்ல ஏதுமில்லை.
அவ்வாறு குற்றப்பத்திரிகையின் நகலைப் பெறுவதற்கும், குற்றச்சாட்டுப் பதிவுகளை நிறைவேற்றுவதற்கும் ஐயா பெ.ம அவர்கள் நேரில் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்பொழுது, ஐயா அவர்களுக்குத் தொடர் சிகிச்சை இருந்த காரணத்தினால் அவரைக் கட்டாயப்படுத்திப் நேரில் அழைத்து வர முடியவில்லை.
ஒரு கட்டத்தில் நீதிமன்றம், “ஆம்புலன்ஸில் வைத்தாவது அழைத்து வாருங்கள்” என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.
ஆனால், ஐயா அவர்களோ, “நான் வருகிறேன்” என்று கூறி, சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர்ந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.
அவ்வாறு வந்தபோதிலும், நீண்ட நேரம் அந்த நாற்காலியில் அல்லது இருக்கையில் காத்திருக்க இயலாது என்பதால், அதனை நீதிபதியிடம் தெரிவித்து, உடனடியாகக் குற்றச்சாட்டுப் பதிவினை மேற்கொண்டு ஐயா அவர்களைத் திரும்ப அனுப்பி வைத்தேன். அதற்கு நீதிபதி அவர்களும் அனுமதியளித்தார்.
இவ்வாறு அரசு தரப்பின் அனைத்துச் சாட்சியங்களும் விசாரணை செய்யப்பட்டு, அதன் வாதங்கள் முன்வைக்கப்பட்டு, இன்று 13/11/2026 காலை 10.32 மணிக்கு மேற்படி சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அதில், ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்…
இந்த வழக்கின் மிக முக்கியச் சாராம்சம் என்னவென்றால், ஐயா அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 143, 504, 505 1(b) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில், மிரட்டும் வகையில் ஆபாசமாகப் பேசுதல்,
கலவரத்தைத் தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் பொழுது, இந்த வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரி (காவல் ஆய்வாளர்) அவர்களை நான் குறுக்கு விசாரணை செய்தேன்.
அப்பொழுது, “முதல் தகவல் அறிக்கையிலும் (FIR) குற்றப்பத்திரிகையிலும் எதிரிகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக முழக்கமிட்டார்கள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ‘இறையாண்மை’ என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
ஐந்து நிமிடங்களுக்கு மேலாகப் புலன் விசாரணை அதிகாரி நெளிந்தபடியே நின்றுக் கொண்டிருந்தார்.
அதற்கான விளக்கத்தை அவரால் இறுதி வரை தரவே முடியவில்லை.
ஒரு கட்டத்தில், அவர் பதில் சொல்லத் திணறுவதைக் கண்ட நீதிபதி அவர்கள், “சார், ‘சட்டவிரோதமாக’ என்று கேளுங்களேன்” என்று என்னிடம் கூறினார்.
நான் நீதிபதியிடம் அதனை மறுத்தேன்.
“இல்லை, முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும் இந்தப் வார்த்தையைப் பயன்படுத்திதான் எதிரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வார்த்தைக்கான விளக்கத்தைப் புலன் விசாரணை அதிகாரி இந்த நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும்; தெரிந்தால் சொல்லட்டும், தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லட்டுமே” என்று கூறினேன்.
மிக நீண்ட தாமதத்திற்கும் யோசனைக்குப் பின்பு, புலன் விசாரணை அதிகாரி வேறு வழியின்றி,
“அப்படி என்றால் என்னவென்று தெரியாது” என்று பதிலளித்தவர். அது அப்படியே நீதிமன்றச் சாட்சியப் பகுதியில் பதிவு செய்யப்பட்டது.
மேலும், சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்படும் அன்றைய தினம், அரசு தரப்பில் ஏதேனும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததா?”
அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதற்கான சான்று ஏதேனும் உள்ளதா?
அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளீர்களா?
அரசு அலுவலர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எந்த வார்த்தையை” பயன்படுத்தினார்கள் என்று முதல் தகவல் அறிக்கையிலோ (FIR) குற்றப்பத்திரிகையிலோ குறிப்பிட்டுள்ளீர்களா?
மேலும், “கதிராமங்கலத்தைக் காப்போம், ஓஎன்ஜிசியை வெளியேற்றுவோம்” என்ற முழக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதா?
குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் பொதுமக்கள் யாரேனும் கலவரத்தை தூண்டுவதாக புகார் அளித்தார்களா?
குற்ற முகாந்திரம் உடைய சம்பவம் ஏதேனும் நடந்ததாக பதிவுகள், வழக்குகள் உள்ளதா?
இந்தக் கேள்விகளை முதன்மையாக முன்வைத்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை செய்தேன்.
மேற்குறிப்பிட்ட எந்த ஒரு கேள்விகளுக்கும் அரசு தரப்பு சாட்சிகளோ, புலனாய்வு விசாரணை அதிகாரியோ சரியான பதிலளிக்கவில்லை; பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால், அதற்கான எந்தவொரு ஆவணமும் அவர்களிடத்தில் இல்லை.
எனவே, மக்களுக்காக, மக்கள் நலனுக்காக ஓஎன்ஜிசியின் எரிவாயு குழாய் வெடித்து விவசாய நிலங்கள் பாழடைந்து கிடக்கும் நிலையில், மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காவல்துறையினர் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சித்தரித்து, ஐயா பெ. மணியரசன் அவர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவர் மீதும் இந்தப் பொய்யான வழக்குப் பதிவு செய்தனர்.
அரசு தரப்புச் சாட்சிகளை, குறுக்கு விசாரணை (Cross-examination) மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியமோ ஆவணமோ இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து போராடுவது அரசியலமைப்பு அவர்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை (fundamental rights)… என்று வாதத்தை வைத்தேன்.
இதனை அடுத்து, மாண்பமை நீதிமன்றம் ஐயா பெ. மணியரசன் அவர்களையும் உடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், ஐயா பெ மணியரசன் அவர்கள்,
தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதும், கால் நடக்க முடியாத சூழ்நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நீதிமன்றத்திற்கு வந்து, இந்த மண்ணுக்காக, மக்களுக்காக, தமிழர் இறையாண்மைக்காக நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டது நாமெல்லாம் செய்த மிகப்பெரிய பாக்கியமாகும்.
மேலும், இந்த வழக்கை நடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களுக்கு இந்த நேரத்தில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கு முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டதும், ஐயா அவர்கள் என்னிடம் “பாராட்டுகள், நன்றி” என்றார்.
“எனக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?” என்றேன்.
அதற்கு அவர், “நன்றி என்பது விசுவாசம் மட்டுமல்ல; அது ஒரு செயலைப் போற்றுவதாகும்.
“‘நன்றி’ என்ற வார்த்தையை ஒற்றைப் பதத்தில் மட்டும் புரிந்து கொள்ளுதல் வேண்டாமே” என்றார்.
நிறைய கற்க வேண்டும்…
உடன் உதவியாய் வழக்குரைஞர் சிவராஜ் அவர்கள் பணியாற்றினார்…
ஐயா அவர்களின் கையைப் பிடித்து விடைப் பெற்றேன்…
வழக்காடு மன்றத்திலிருந்து…
நன்றி, வணக்கம்!
சு.செல்வநாயகம், வழக்குரைஞர்,
தஞ்சாவூர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.