முடிஞ்சா படம் பாருங்க ‘ஏஓடி’ ஹீரோயின் ஏடாகூட பேச்சு!
ஸ்வப்னா சினிமாஸ், லைட் பாக்ஸ், கீதா ஆர்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி, நாளை மறுநாள் [நவ.20] ரிலீசாகிறது ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்குப் படம். தமிழில் ’ஆகாயத்தில் ஒரு தாரகை’ [ ஏஓடி] என வருகிறது. மலையாளம் மற்றும் கன்னடத்திலும் அதே நாளில் ரிலீசாகும் இப்படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன், சுஹானி ஷர்மா, சுவாசிகா விஜய், சின்னி ஜெயந்த், உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி டைரக்ட் பண்ணியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் ஒளிப்பதிவு.

‘ஏஓடி’யின் புரொமோஷன் நிகழ்ச்சி, சென்னையில் நவம்பர் 17—ஆம் தேதி மாலை நடந்தது. இதில் பேசியவர்கள்..
கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த், “ஒரு நடுத்தரக் குடும்பத்து இளம் பெண்ணின் கனவு எப்படி நனவானது என்பது தான் இந்தப் படம். அதனால சந்தேகப்பட்டு துல்கர் சல்மான் கூட என்னிடம் இது ஹீரோ படமா? ஹீரோயின் படமான்னு கேட்டார். நிச்சயமா இது ஹீரோ படம் தான்னு அவரிடம் சொன்னேன். படத்தின் ஹீரோயினாக இன்ஸ்டா பிரபலம் சாத்விகா தான் கரெக்டான சாய்ஸ் என்பதால் அவரை அறிமுகம் செய்கிறோம். இப்பட ரிலீசுக்கு முன்பே இரண்டு தெலுங்குப் படங்களில் கமிட்டாகியுள்ளார். படத்தின் இசையை மிகச் சிறப்பாக கொடுத்திருக்கார் ஜி.வி.பிரகாஷ். இந்திய அளவில் இந்தப் படம் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு”.
பேசிமுடித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கப் போன அல்லு அரவிந்தைக் கூப்பிட்டு “நீங்க எப்படி தமிழ் நல்லா பேசுறீக? சென்னையில உங்களுக்குப் பிடிச்ச இடம் எது? உங்க மனைவியைப் பத்திச் சொல்லுங்க”ன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டு கடுப்பாக்கினார் நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்தி[ நடிகர் சாந்தனுவின் மனைவி].
இதே போல் தான் ஜி.வி.பிரகாஷிடமும் ஹீரோ துல்கர் சல்மானிடம் கேட்டு பிரஸ் மீட்டை இழு இழு என இழுத்தார்.
ஹீரோயின் சாத்விகா வீரவள்ளியைப் பேச அழைக்கும் போது, “நம்ம சென்னையின் ஆழ்வார்பேட்டை பொண்ணு, வாங்கம்மா கண்ணு” என ஜாலியாக அழைத்தார்.
கொஞ்சம் ஒடிசலாகவும் நல்ல உயரமாகவும் லட்சணமாகவும் இருக்கும் ஹீரோயின் சாத்விகா வீரவள்ளியிடம் மைக்கைக் கொடுத்தார் மைக்செட் ராஜேஷ்.

“நான் ஆழ்வார்பேட்டை பொண்ணு தான், ஆனா அமெரிக்காவுல படிச்சு வளர்ந்ததால தமிழ் எனக்குப் படிக்கத் தெரியாது, பேசவும் சிரமப்படுவேன். அதனால் இங்கிலீஷ்ல பேசுறேன்” என திக்கித் திணறி தமிழில் பேச, “இல்லல்ல, இது தமிழ் ‘ஏஓடி’ புரொமோஷன். அதனால் நீங்க தமிழ்ல தான் பேசணும்” என்றார் கீர்த்தி.
அதனால் வழக்கமாக ஹீரோயின்கள் பேசுவது போல தயாரிப்பாளருக்கும் ஹீரோ துல்கருக்கும் டைரக்டர் பவனுக்கும் உடன் நடித்த ஸ்ருதி ஹாசன், சின்னி ஜெயந்த், கேமராமேன், மியூசிக் டைரக்டர் ஆகியோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, “படம் ரொம்ப பியூட்டிஃபுல்லா வந்திருக்கு. முடிஞ்சா படத்தைப் பாருங்க” என கேஷுவலாக சாத்விகா பேசியதும் பதறிய கீர்த்தி, “ஹலோ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. கண்டிப்பா படம் பாருங்க, சப்போர்ட் பண்ணுங்கன்னு சொல்லணும்” என திருத்தினார்.
அதன் பின் “ஸாரி…ஸாரி… என்னை மன்னிச்சிருங்க. இதுக்கு முன்னால பேசுனதை எடிட் பண்ணிருங்க ப்ளீஸ். கண்டிப்பா படம் பாருங்க, எங்க எல்லோருக்கும் சப்போர்ட் பண்ணுங்க” என ஒருவழியாக பேசி முடித்தார் சாத்விகா வீரவள்ளி.
வீரவள்ளின்னு எப்படி பேர் வச்சாய்ங்கன்னு தெரியலையே…?
— சாய்னிகா








Comments are closed, but trackbacks and pingbacks are open.