ஆட்டத்தை கலைத்து ஆடும் நியோமேக்ஸ் !
ஆட்டத்தை கலைத்து ஆடும் நியோமேக்ஸ்!
நியோமேக்ஸ் முதலீட்டாளர்களின் பாண்டுகள் சரிபார்க்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டதாக, கருதப்பட்ட நிலையில் பொய்யான புகார்கள், போலியான பாண்டுகள், ஏற்கெனவே பலனை பெற்றவர்கள் மீண்டும் புகார் அளித்திருப்பதாகக்கூறி அதன்காரணமாக புகார்தாரர்கள் அனைவரையும் நேரில் வரவழைத்து மீண்டும் ஒருமுறை புகாரை சரிபார்க்க வேண்டும் என்பதாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர்13 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில்தான் இப்படி ஒரு கருத்தை நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா முன் வைத்திருந்தார். அன்றைய நீதிமன்ற விவாதத்தில், மதுரை உயர்நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள காலிமனை, பாண்டுகள் சரிபார்ப்பு, சாஃப்ட்வேர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றது.
இதுவரையிலான ஏல நடைமுறையில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களே இடங்களை தேர்வு செய்து வரும் நிலையில், வெளி நபர்களும் ஏலத்தில் பங்கேற்பதை உறுதிசெய்தால் மட்டுமே பணமாக தீர்வு பெற காத்திருக்கும் முதலீட்டாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற சாத்தியம் என்ற நெருக்கடியை நீதிமன்றம் எதிர்கொண்டிருக்கிறது. இதன்காரணமாகவே, மதுரை உயர்நீதிமன்றத்தின் பின்புறம் அமைந்த 38 ஏக்கர் நிலத்தை தற்போது 28 பாகங்களாக பாதை அமைத்து பிரித்திருக்கிறார்கள்.
வழக்கமான செய்தித்தாள் விளம்பரங்களைத் தாண்டி மதுரை மாநகரில் குறிப்பிட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது; சோசியல் மீடியாவில் விளம்பரப்படுத்துவது; துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிப்பது; லோக்கல் கேபிள் டி.வி.யில் விளம்பரம் செய்வது என பல்வேறு ஆலோசனைகளையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதே இடத்தில் 10.39 ஏக்கர் நிலத்துக்கு உரிமைகோரி மதுரை முத்து என்பவர் தெரிவித்த ஆட்சேபணையை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களது தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்து, ஏலநடைமுறையை சிலர் சீர்குலைத்துவருவதாக தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஏல நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நீதிமன்றம் மேற்கொண்டிருக்கிறது. இதன்படி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒரு முறை மட்டுமே இ.எம்.டி. சலுகையை பெற முடியும்; ஏலத்தில் பங்கேற்கும் சொத்தின் இ.எம்.டி. கட்டணத்துக்கு நிகராக பாண்டுகளின் மதிப்பை பெற்றிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக, இனி தவறுதலாக பூஜ்ஜியத்தை போட்டுவிட்டேன் என்ற சாக்குபோக்கு சொல்ல முடியாது. அவர்களை உடனடியாக எஃப்.ஐ.ஆர். செய்து ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறார், நீதியரசர் பரதசக்,ரவர்த்தி.
பாண்டுகளை சரிபார்க்கும் நடைமுறையை எப்படி நடத்துவது என்பதாக நடைபெற்ற விரிவான விவாதத்தில்தான், இதுவரையிலான ஆட்டத்தை கலைத்துவிட்டு மீண்டும் தொடங்குவதான அந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது நியோமேக்ஸ். நிறைவாக, சோதனை அடிப்படையில் மதுரையில் சரிபார்ப்பு முகாமை நடத்துவது என நீதிமன்றம் தீர்மானித்திருக்கிறது.
மிக முக்கியமாக, பாண்டு சரிபார்ப்பு கட்டத்திலேயே சாஃப்ட்வேர் தயார் ஆகிவிட்டால் பணியை எளிமையாக முடிக்க முடியும் என்ற கருத்தும் மேலோங்கியிருக்கிறது. நியோமேக்ஸ் முன்வைத்த வாதங்கள் மட்டுமின்றி, அடிப்படையிலேயே நியோமேக்ஸ் கையாண்ட வியாபார நடைமுறைகளின் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சாஃப்ட்வேர் உதவி இல்லாமல் நியோமேக்ஸ் நிறுவனத்தின் வியாபார உத்திகள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாது என்பதைத்தான் தொடரும் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறது.
புகார்களை சரிபார்ப்பதற்கான கமிட்டியில் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள்? எந்தெந்த அம்சங்களை கருத்தில் கொண்டு புகார்களை சரிபார்க்கப்போகிறார்கள்? சாஃப்ட்வேர் குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பதெல்லாம் இந்த வழக்கு விவகாரத்தின் போக்கை தீர்மானிக்கும் மையமான விவகாரங்களாக நீடித்து வருகின்றன.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.