நியோமேக்ஸ் : தனி சாஃப்ட்வேர் : என்னதான் சிக்கல்?
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், கடந்த அக்-30 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஏல குளறுபடிகள், பாண்டுகளை சரிபார்ப்பதற்கான தனிகமிட்டி மற்றும் தனி சாஃப்ட்வேர் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தது.
இதில், மிக முக்கியமாக தனி சாஃப்ட்வேர் குறித்த விவகாரம்தான், அதில் என்னதான் சிக்கல் என்பதை யாரும் கண்டறிய முடியாத அளவுக்கு நீதிமன்றத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து வழுவி வருகிறது.
தற்போதைய நிலையில், கைவசம் 3 சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. ஒன்று, நியோமேக்ஸ் நிறுவனமே முன்மொழிந்த சாஃப்ட்வேர். மற்றொன்று, அரசு தரப்பில் உருவாக்குவதாக சொன்னது. மூன்றாவது, தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் டீம் உருவாக்கிய சாஃப்ட்வேர். தயார்நிலையில், 2 சாஃப்ட்வேர்கள் இருந்தும் அதில் ஒன்றை தேர்வு செய்யாமல், புதியதாக சாஃப்ட்வேர் உருவாக்க வேண்டுமென்ற அவசியம் என்ன வந்தது என்பதே மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
அதற்கு அரசு தரப்பில் சொல்லப்படும் ஆட்சேபணை, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழங்கும் சாஃப்ட்வேரை ஏற்கலாமா? என்பதே. நியோமேக்ஸ் நிறுவனத்தரப்பின் சாஃப்ட்வேருக்கு வேண்டுமானால், இந்த வரையறை பொருந்தலாம். ஆனால், தூத்துக்குடி சுரேஷ் முன்மொழிந்த சாஃப்ட்வேரை ஏற்பதில் என்ன சிக்கல் என்ற கேள்வி எழுகிறது. அவரும் இதில் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவராக இருக்கிறார் என்பதாலாயே, நிராகரிக்கலாமா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
இதில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று, தூத்துக்குடி சுரேஷ் தரப்பு ஏறத்தாழ அப்ரூவராக போலீசுக்கு ஒத்துழைக்க இசைவு தெரிவித்தும்; பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆதரவாளராக அறியப்படும் மதுரையை சேர்ந்த ரவுடி ஒருவரின் நேரடி மிரட்டலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், எங்கள் சாஃப்ட்வேரை அப்படியே அரசின் வசம் ஒப்படைத்துவிடுகிறோம். இதில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தும்; அதிலும் குறிப்பாக, எங்களுடைய கான்செப்ட்டையாவது எடுத்துக் கொண்டு புதிய சாஃப்ட்வேரை உருவாக்குங்கள் என்று தெளிவுபடுத்தியும் ஏற்க மறுப்பது ஏன்? என்ற கேள்விதான் பல்வேறு சந்தேக வலைகளை விரிவடைய வைக்கிறது.
அடுத்த கேள்விகளாக, தனிநபர்கள் அல்லது மூன்றாம் நபர்கள் முன்மொழியும் சாஃப்ட்வேரை பயன்படுத்துவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற வாதம் குறித்தும்; அடுத்து, இந்த சாஃப்ட்வேர் ஏன் பாண்ட் வெரிபிகேஷன் நிலையிலேயே அவசியமாகிறது? என்பது குறித்தும் அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம்.
அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.