இன்ஃப்ளூயன்சர்கள் டூ கொள்ளையர்கள்! ரூ.15 கோடி நகைக் கொள்ளையின் அதிர்ச்சிப் பின்னணி!
கொள்ளைக்கு காதல் துணை... நகைகளை மறைக்கப் பெற்றோர் துணையா? மதுரையை அதிரவைத்த சம்பவம்!
எதை நோக்கிப் போகிறது தமிழகம் ?
காதலிக்காக தாஜ்மஹாலை கட்டி எழுப்பிய கதையை படித்திருக்கிறோம். ஆனால், வரலாற்றில் முதல்முறையாக காதலிக்காக கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்த விவகாரம், தமிழகத்தை மட்டுமல்ல; இந்திய அளவிலும் ஏன் உலக அளவில் கவனத்தை பெற்ற திட்டமிட்ட கொள்ளை சம்பவமாக மாறிவிட்டது.
மதுரை சட்னிக்குத்தானேடா பேமஸ் … இப்ப இதுக்குமா?னு வடிவேலு பாணியிலேயே நம்மையும் கேட்க வைத்துவிட்டது. ஏதோ உள்ளூர் அளவிலான ஜூவல்லரி நிறுவனமாக இருந்தால்கூட பரவாயில்லை. பாதுகாப்பு விசயத்தில் கோட்டை விட்டிருப்பார்கள் என கருதலாம். இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமாக அறியப்படும் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜூவல்லரியில்தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
தூசு கூட படாமல் தட்டித்தூக்கியது எப்படி?
அதுவும் வழக்கமான கொள்ளை சம்பவங்களைப் போல, பூட்டை உடைக்காமல், ஷட்டரை வெல்டிங் வைத்து திறக்காமல், காண்கிரீட் சுவரை துளையிடாமல் அவ்வளவு ஏன் ஒரு தூசு கூட மேல் சட்டையில் படாமல் அவ்வளவு துல்லியமாக மொத்த நகையையும் தட்டித்தூக்கிய அந்த அசாத்திய திறமையையும்; பக்காவான முன் திட்டமும்தான் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் நிஷாந்த் என்ற அந்த ஒரே உருவம்தான் இத்தனையும் செய்து முடித்திருக்கிறது என்பதெல்லாம் நிச்சயம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை.

மதுரை போலீசாரின் கூற்றுப்படி, 15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை முழுமையாக மீட்டுவிட்டார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். 6 உதவி ஆணையர்கள், 15 காவல் ஆய்வாளர்களை கொண்ட தனிப்படையினர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையிலிருந்து இவ்வளவு விரைவாக குற்றவாளிகளை கண்டறிந்துவிட்டதாக ஊடகங்களிடம் பேட்டியளித்திருக்கிறார், மதுரை கமிஷனர் ராஜேந்திரன். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் இதன் முழுமையான பின்னணி வெளிவரும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இன்ஃப்ளூயன்சர் டூ கொள்ளையர்கள் :
கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், மீனாட்சி இருவருமே வெறும் 23 – 25 வயதேயான இளைஞர்கள். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம், பின்னாட்களில் யூடியூப் பிரபலமாக மாறிய பின்னரும் நட்பு தொடர்ந்திருக்கிறது. நட்பு காதலாகியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நிஷாந்த் கல்லூரி படிப்பை முழுமையாகக்கூட முடிக்கவில்லை. படிப்பை பாதியில் கைவிட்டு யூடியூப் பிரபலமாகிவிட்டார். சைக்காலஜி படித்த மீனாட்சி, டெக்பாஸ் என்ற பெயரில் இயங்கிவந்த மின்னணு சாதனங்கள் குறித்த அப்டேட்களை வழங்கும் யூடியூப் சேனல் வழியே பிரபலமாகிவிட்டார். அந்த நிறுவனத்திலிருந்தும் விலகி, தனியே யூடியூப் சேனலை தொடங்கிய மீனாட்சிக்கு,, நிஷாந்த்தான் வீடியோ எடிட் செய்து கொடுத்திருக்கிறார்.

டெக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹைடெக் செல்ஃபோன்களின் தாத்பரியங்களை அலசி ஆராய்ந்தவர்கள், அந்த அறிவியல் மூளையை தடயமில்லாமல் கொள்ளையடிப்பது எப்படி? என்பதற்காக பயன்படுத்திவிட்டார்கள்.
தீபாவளி சீசனை மனதில் வைத்து கடையை திறந்துவிட நினைத்த தனிஷ்க் நிறுவனத்தால் திட்டமிட்டபடி கடையைத் திறக்க முடியாமல் போக; தீபாவளி வியாபாரத்தையும் கைவிட மனமில்லாமல் அரைகுறை வேலையுடன் வியாபாரத்தை தொடங்கியதுதான் கொள்ளைக்கான பிள்ளையார் சுழியாக மாறிவிட்டது. தரைதளத்தையும், முதல் தளத்தையும் மட்டும் வியாபாரத்துக்காக திறந்துவிட்டு, அதற்கு மேலான தளங்களில் கட்டுமானப்பணிகளையும் தொடர்ந்து நடத்தியிருக்கிறது தனிஷ்க் நிறுவனம். அதன் கட்டுமானப் பணிகளுக்காக போடப்பட்டிருந்த சாரம், கொள்ளைத் திட்டத்தை மிக எளிமையாக்கிவிட்டது. அந்த சாரத்தின் வழியாகவே மொட்டை மாடி வரைக்கும் பயணித்து பின்னர் அங்கிருந்து லிஃப்ட்-க்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கம் போன்ற பகுதியின் வழியாக சென்று நகைகளை வாரிச்சுருட்டிவிட்டு வந்த வழியே திரும்பியிருக்கிறார் நிஷாந்த்.
ஹை-டெக் பிளான் :
எங்கிருந்து எப்படி நுழையலாம் என்பதையெல்லாம் கண்டறிவதற்காகவே, கடை திறந்த 15 நாளில் பலமுறை கடைக்கு வாடிக்கையாளரைப் போல வந்து சென்றிருக்கிறார் நிஷாந்த். அவ்வாறு ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும் வித்தியாசமான உடை மாற்றங்களுடன் வந்து சென்றிருக்கிறார். ஆனாலும், வடிவேலு பாணியில் கொண்டையை மறைக்காமல் போனதுதான் சோகம். நிஷாந்த் அணிந்திருந்த ஒரே மாதிரியான தொப்பியும், கையில் குத்தியிருந்த டாட்டூவும்தான் அவனை போலீசிடம் சிக்க வைத்துவிட்டது.
அடுத்து, சிசிடிவி காமிரா கண்களில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? தவிர்க்க முடியாத சிசிடிவி காமிராவை மறைக்க ஸ்பிரேயை பயன்படுத்தியது; சாவி போட்டு திறக்க முயற்சித்தால் அலாரம் அடித்து மாட்டிவிட்டுவிடும் என்பதால், காட்சிக்காக பொம்மைகளுக்கு மாட்டிவிடப்பட்டிருந்த நகைகளாக பொறுக்கி போட்டது; செல்போன் டவரை வைத்து போலீசார் ஃபாலோ செய்தாலும் அவர்களை குழப்பும் வகையில் அதிலும் டிரிக்ஸ் பயன்படுத்தியது என எல்லாவிதமான ஹைடெக்னாலஜி நுட்பங்களையும் நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறான் நிஷாந்த்.
அடுத்து, வழக்கம்போல சாதாரண கொள்ளையர்கள் கையாளும் வழிமுறைகளான பைகளை கைமாற்றுவது; கொள்ளையடித்த நகைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக பதுக்கி வைப்பது; மண்ணில் புதைத்து வைப்பது; தான் அணிந்திருந்த சட்டையை வைத்து போலீசார் ஒருபோதும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக, இத்திட்டத்திற்காக பயன்படுத்திய அத்தனை துணிகளையும் எரித்தது; ஒரே இடத்தில் இல்லாமல் ஊர் ஊராக சுற்றித் திரிந்தது என வழக்கமான கொள்ளை உத்திகளையும் கடைபிடித்திருக்கிறான் நிஷாந்த்.
சிக்கியது எப்படி ?
கடைசியில், சேலத்திலிருந்து பெங்களூரு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்த நிஷாந்த், எங்கே போலீசில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் தொப்பி அணிந்தபடியும் முகத்தை மூடியபடியும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிக்க, தனியார் பேருந்தின் உதவியாளர் போலீசுக்கு தகவல் சொல்ல வகையாய் சிக்கியிருக்கிறான் நிஷாந்த்.

எந்த டெக்னாலஜியை பயன்படுத்தி இவ்வளவு துல்லியமாக இந்த கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றினார்களோ, அதே டெக்னாலஜியை வைத்துதான் போலீசாரும் நிஷாந்த் அண்ட் கோ வை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். மீனாட்சியுடனான தொலைபேசி உரையாடல் போலீசாருக்கு முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்திருக்கிறது.
அடையாளம் காட்டிய தனிஷ்க் ஊழியர்; சந்தேகத்திற்கிடமான முறையில் உடைகள் எரிக்கப்பட்டது பற்றி போலீசுக்கு துப்பு கொடுத்த நபர்; மீனாக்ஷியிடம் பேசுவதற்காக செல்ஃபோன் கொடுத்தவர்; பேருந்தில் அடையாளம் கண்டு மடக்கிய ஊழியர் என 4 சாமானியர்களின் சமயோசித அறிவும் இந்த வழக்கில் இவ்வளவு விரைவில் குற்றவாளியை நெருங்க உதவி புரிந்திருக்கிறது.
உடந்தையாக பெற்றோர்கள் :
இதில் கொடுமை இந்த கொள்ளைத் திட்டத்திற்கு நிஷாந்தின் தந்தையும் உடந்தையாக இருந்ததுதான். கொள்ளையடித்த நகைகளை இடம்மாற்றவும்; சட்டைகளை எரிக்கவும் தந்தையின் ஆட்டோவைத்தான் பயன்படுத்தியிருக்கிறான் நிஷாந்த்.

மீனாட்சியின் தாயாரும் யூடியூப் பிரபலம்தான். இந்துவின் பயணம் என்ற சேனலில் ஆவின் பாலில் கெமிக்கல் வாடை வருவதாக இவர் பேசி வெளியான வீடியோ தமிழகத்தில் படு வைரலானது. மீனாட்சி குடும்பத்தினர் புதியதாக வீடு கட்டி வருவதாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட கடன் பிரச்சினையைத் தீர்க்கத்தான் இப்படி ஒரு திட்டம் என்பதாகவும் சொல்லப்படுகிறது.
நிஷாந்த் – மீனாட்சி இருவருமே 23 -25 வயது இளைஞர்கள்; இருவரும் யூடிபர் பிரபலங்கள் – இன்ஃபுளூயன்சர்கள்; கொள்ளைக்கு பெற்றோர்களும் உடந்தை என்பதெல்லாம் எப்படி புரிந்து கொள்வது? எதை நோக்கிப் போகிறது தமிழகம் ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.