எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது :சீமான் திட்டவட்ட அறிவிப்பு
எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது :சீமான் திட்டவட்ட அறிவிப்பு
எந்த கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினியும் தேர்தலில் இணைந்து நிற்பதால் மற்ற கட்சிகளின் செல்வாக்கு சரியாது என்றும் அந்தந்த கட்சிகளுக்கு இருக்கும் வாக்கை யாரும் பிரிக்க முடியாது என்றும் கூறினார்.எனினும், புதிய வாக்காளர்கள், ஒரு மாற்றத்தை விரும்புகிற இளைய வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கு என்றார் சீமான்.
“அவங்க ரெண்டுபேரும் இணைந்து நிக்கிறதுல வியப்பு இல்லை. அவர்கள் இருவரும் நண்பர்கள். இணைந்து பல படங்களில் நடித்தாங்க. அதுபோல இது ஒரு படம்… அரசியல் படம். இதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்iலை,” என்றார். டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை எனக் கேட்டதற்கு, “மத்தய அரசு எதை கணடிருக்கு… இதை கண்டுகொள்வதற்கு,” என திருப்பிக் கேட்டார்.
வேளாண்மை, உணவு என்பது மிக அத்தியாவசியமான உயிர்த் தேவையாக இருக்கிறது. அதுல இருக்கும் சந்தையை பெரும் முதலாளிகளுக்கு கொடுக்க நினைக்கிறது அரசு. எனக்கூறிய சீமான், “இது விவசாயிகள் பிரச்சினை கிடையாது. நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் பிரச்சினை,” என்றார்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் யாரும் நகைகள், கார் போன்ற ஆடம்பரப் பொருள்களை வாங்கவில்லை. மளிகைக் கடைகளைத்தான் தேடி ஓடினர். உணவு மற்றும் மளிகைப் பொருள்களை போட்டிபோட்டு வாங்கினர் எனச் சுட்டிக்காட்டிய சீமான், “வேறு எது இல்லாமலும் வாழ முடியும். ஆனால், சோறும் நீரும் இல்லாமல் வாழ முடியாது,” என்றார்.
‘வேளாண் சட்டத்தால் நமக்கு பாதிப்பு எதுவுமில்லை’ என்ற தமிழக முதல்வரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழக முதல்வரின் கருத்து மிகவும் தவறு. அச் சட்டத்தில் ஒரு நன்மை கூட இல்லை,” என்றார் சீமான்.
அஸாதுதீன் ஒவைஸி கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதா எனக் கேட்டதற்கு, “ஒவைஸி மேல் எனக்கு ஒரு மதிப்பு உண்டு. சிஏஏவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கருத்து எனக்கு ஏற்புடையது. அதனால் அந்த நேரத்தில் அவரை வாழ்த்தினேன். பாராட்டினேன்,” எனக் கூறிய சீமான், “எங்க கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காது,” என்றார்.