திண்டுக்கல் அமைச்சருக்கு கரூர் அமைச்சரின் தொகுதியை ஒதுக்க திட்டம் ?
திண்டுக்கல்லைச் சேர்ந்த மூத்த முக்கிய அமைச்சர் மனவருத்தத்தில் உள்ளாராம். திமுக அமைச்சரவை அறிவிக்கப்பட்டபோது ஏற்கத்தக்க அளவிற்கு இல்லை என்று மூத்த அமைச்சர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர் என்று அங்குசம் விளக்கமாகவும், விரிவாகவும் முந்தைய செய்திகளில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மற்ற அமைச்சர்களிடம் இருந்து ஓரளவு மனவருத்தம் குறைந்து இருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த முக்கிய அமைச்சர் இன்னும் மன வருத்தத்தில் இருந்து நீங்கவில்லையாம்.
இதனால் மாவட்டத்தில் கட்சி வேலையும் சரியில்லை, அமைச்சருக்கான செயல்படும் சொல்லுமளவிற்கு இல்லையாம் இதுமட்டுமல்லாது சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்திற்கு செல்லாமல், இன்று வரை தனியார் ஹோட்டலில் தான் தங்கி வருகிறாராம்.
இப்படி தொடர்ந்து தனது வருத்தத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறாராம் அந்த அமைச்சர். இதையடுத்து முதல்வர் அவரை சமாதானப்படுத்த இரண்டு, மூன்று முறை முயற்சி எடுத்தும் அமைச்சர் எதற்கும் ஒத்துவரவில்லையாம்.
இதனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் அமைச்சரிடம் முக்கியமான துறைகள் இருக்கிறது. அதில் ஏதேனும் ஒரு துறையை பிரித்து திண்டுக்கல் அமைச்சருக்கு ஒதுக்கி விடலாம் என்று முதலமைச்சர் அமைச்சரவை மாற்றத்திற்கான பட்டியலை தயார் செய்யும்பொழுது நேரத்தில் இலாகா மாற்றுவதற்கான பட்டியலையும் தயார் செய்து வருகிறாராம்.