வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்!
வாழ்க்கையில் முன்னேற
தன்னம்பிக்கை அவசியம்!
வாழக்கையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவையாறு அடுத்துள்ள மேல திருப்பூந்துருத்தி கிராமத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் நல்லிணக்க மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா தலைமையில் மேலத் திருப்பூந்துருத்தி சமூதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமைத் துவக்கி வைத்துப் பேசிய மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன், “இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலைகளுக்கு செல்லலாம்.
அதேபோல, தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. கார்ப்பொரேட் கம்பெனிகளில் இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
தொழில் முனைவராகி வேலை வாய்ப்பு உருவாக்கலாம். மாவட்ட தொழில் மையம் சார்பாக தொழில் சார்ந்த திறன் மேம்பாடுகள் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி ஏனைய மற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கலாம்,” என்றார்.
வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம். எந்த வேலையையும் தன்னம்பிக்கையோடு, விடாமுயற்சியுடன் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார் ஐஜி பாலகிருஷ்ணன்.
இந்நிகழ்ச்சியில், பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த இளைஞர்கள் சுய தொழில்கள் துவங்க மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து உதவி பொறியாளர் குணசேகரன் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, “படிப்பு மற்றும் பயிற்சி ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். படித்தது மட்டும் போதாது. முறையான தொடர் பயிற்சி மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கும்,” என்றார்.
இளைஞர்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். டிகிரி முடித்துவிட்டோம் அதனால் வேலை கிடைத்துவிடும் என இளைஞர்கள் சும்மா சோம்பித் திரியக் கூடாது.
வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு நீங்கள் நிறைய கற்று தயார் படுத்திக் கொள்ள வேண்டும். வேலைக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு, தேர்வாகி நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
உங்களது முயற்சிக்கு காவல்துறை சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார் எஸ்.பி. ரவளி ப்ரியா.
இம் முகாமில் 23 பெண்கள் உள்பட 67 இளைஞர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு கேட்டு அதற்கான தங்களது சுய விபரக் குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்தனர்.
அவர்களது விண்ணப்பங்களைப் பெற்று அம்முகாமில் கலந்து கொண்ட இரண்டு பிரபல தனியார் கார் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ஐஜி வழங்கினார்.
மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை இம்முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு ஐஜி பாலகிருஷ்ணன் வழங்கினார்.
முன்னதாக, திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் வரவேற்றார். பேரூராட்சி முன்னாள் தலைவர் அஷ்ரப், முன்னாள் துணைத் தலைவர் அஹமது மைதீன், அப்பர் சதய விழாக்குழுத் தலைவர் ஜீவா சிவக்குமார், ஒன்றியக் கவுன்சிலர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் செய்திருந்தனர்.