திருச்சி திமுகவில் வெடிக்கத் தொடங்கியது மேயருக்கான யுத்தம் !

0

திருச்சி திமுக தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு மத்திய மாவட்டத்திற்கு வைரமணி மாவட்ட பொறுப்பாளராகவும், வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே என் நேருவின் ஆதரவாளர்கள். தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கே என் நேரு தரப்பினருக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினருக்கும் மேயர் பதவிக்கான போட்டி தற்போது சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் விஜயா ஜெயராஜ் 57வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிட்டு, மேயராக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக அரசு பதவியேற்று உள்ள நிலையில் டிசம்பர் இறுதிக்குள் அல்லது ஜனவரி முதல் வாரத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம் திருச்சி மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்ற போவது யார் என்ற சர்ச்சை தற்போது மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.

மேயர் பதவிக்கான போட்டியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு இருக்கிறார் என்று கூறப்படுகிறது, ஆனாலும் அருண் நேருவுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லாததால் வரிசையில் அவரே பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அடுத்து முன்னாள் துணை மேயரும், நீண்ட காலம் திருச்சி திமுக வின் நகர செயலாளராக உள்ள அன்பழகனுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அன்பழகன் நேருவின் மிகத் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடதக்கது.

அருண் நேரு
அன்பழகன்
விஜயா ஜெயராஜ்

அதேசமயம் பெண் தொகுதியாக இருக்கும் பட்சத்தில் விஜயா ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.மேலும் இவர் திமுக மகளிர் அணியின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். நேரு தரப்பிற்குள் இப்படியான பேச்சு சென்றுகொண்டிருக்க, மகேஷ் தரப்பில் மேயர் வேட்பாளராக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற வாதமும் இருக்கிறது.

இது குறித்த செய்திகள் தினசரி நாளிதழ் வெளியானதை அடுத்து நடைபெற இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மேயர் பதவிய நேரு தரப்பு கைப்பற்றுமா, மகேஸ் தரப்பு கைப்பற்றுமா என்ற பேச்சு தற்போது சூடு பிடித்திருக்கிறது.

மதிவாணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பைச் சேர்ந்த தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் மேயர் பதவிக்கு சரியான தீர்வு மதிவாணன் என்று குறிப்பிட்டு வருகின்றனர். அதோடு மற்றும் அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை, மேலும் “அமைச்சருடன் அட்டை போல ஒட்டிக் கொண்டு சுற்றினாலே மேயர் சீட் கிடைத்துவிடும் என்று அலையும் சிலரின் மத்தியில் நமது மலைக்கோட்டை பகுதி செயலாளர் அண்ணன் மதிவாணன் அவர்கள் வித்தியாசமானவர். வேலை இருந்தால் மட்டுமே அமைச்சருடன் காரில் ஏறுவார் இல்லை என்றால் அந்த நேரத்தை பயன்படுத்தி கழகப் பணியில் ஈடுபடும் உழைப்பாளி” என்று கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகர திமுக நிர்வாகிகள் சிலர் கூறியது, அன்பழகன் கட்சியின் மூத்த நிர்வாகி, நீண்டகாலமாக கட்சியில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் உடன் இருந்து வருகிறார். அதனால் அவருக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அருண்

இவை ஒருபுறமிருக்க அன்பழகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் மாற்று வேட்பாளராக மதிவாணனை கே.என். நேரு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நேருவுடன் மிக நெருக்கமாக இருந்த மதிவாணன், மகேஷ் பொய்யாமொழி வருகைக்குப் பிறகு மதிவாணனின் மிக நெருங்கிய உறவினர் அருண், மகேஷ் பொய்யாமொழி உதவியாளராக செயல்படத் தொடங்கினர். இதை தொடர்ந்து மதிவாணனும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடு நெருக்கம் காட்ட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் மதிவாணனுக்கு ஆதரவாக தெற்கு மாவட்ட திமுகவினர் பதிவு

அதேசமயம் மகேஷ் பொய்யாமொழிக்கும் நேருவுக்கமான கோஷ்டி அரசியல்  அதிகரித்துக் கொண்டே செல்வது உட்கட்சியில் பெரிய பிளவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இதற்கு இடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தஞ்சை மாவட்டத்திற்கும், அமைச்சர் கே.என்.நேருவை சேலத்திற்கும் பொறுப்பாளராக நியமித்து  கட்சியினர் இடையே இன்னும் டென்சஷனை கூட்டி உள்ளது.

திருச்சி அரசியல் லாஜிக்கை பொறுத்தவரை மேயருக்கான தேர்வில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த நபருக்கோ அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நபருக்கோ தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் ஜனவரியா..?, நேரடியாக மக்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்களா..?, திருச்சி மேயர் பதவி ஆணுக்கா பெண்ணுக்கா …? என்று எதுவமே முடிவாகாத நிலையில் முக்கிய கட்சியில் தற்போது மேயருக்கான யுத்தம் தொடங்கி இருக்கிறது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.