திருச்சி: பஞ்சாயத்து தலைவர் + தொழிலதிபர் = மணல் கடத்தல் – அலரும் பஞ்சாயத்து உறுப்பினர்
திருச்சி: பஞ்சாயத்து தலைவர் + தொழிலதிபர் = மணல் கடத்தல் – அலரும் பஞ்சாயத்து உறுப்பினர்
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வாகனம் மூலம் சரளை, செம்மண் கடத்துவதாக ஊராட்சி வார்டு உறுப்பினர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய ஊராட்சியாக கருதப்படுவது திருவெறும்பூர். காரணம் முக்கிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அதிகம் காணப்படுகின்றன. இதனால் அதிக வருவாய் ஈட்டக்கூடிய டெவலப்மெண்ட் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவும் ஒன்று.
மேலும் திருவெறும்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நவல்பட்டு பஞ்சாயத்து என்பது குடியிருப்புகளும், மக்கள் தொகையும் அதிகம் இருக்க கூடிய பஞ்சாயத்து ஆகும். ஆனால் கடந்த 2 வருடங்களாக பல்வேறு குளறுபடிகள், மோசடி என அதிகம் அறங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.
நவல்பட்டு பஞ்சாயத்து 15-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் மின்னல்கொடி. இவர் நேற்று 2022 ஜனவரி 6 ம் தேதி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் ஜேம்ஸ். இவர் நவல்பட்டு அய்யனார் கோயில் பகுதி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம்
இருந்த சரளை மற்றும் செம்மண்ணை பல நாட்களாக ஜேசிபி மூலம் கடத்தி தனது சொந்த கிராவல் நிறுவனத்தில் போட்டு விற்றுவருகிறார். மணல் கடத்த தன்னிடம் உள்ள சொந்த இயந்திரத்தினை பயன்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து கிராம மக்களோ, என்னை போன்ற வார்டு உறுப்பினர்களோ கேட்டால் கடத்தப்பட்ட மண்ணை அண்ணாநகர் 6வது வார்டு குறுக்குரோடு போடுவதற்கும் பஞ்சாயத்து இதர வேலைக்கும் பயன்படுத்திவருவதாக பொய் கூறி சமாளிக்கிறார் என்று அப்புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக புகார்தாரரான மிண்ணல்கொடியிடம் பேசுகையில்,
“ நான் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர், இப்போ 15-வது வார்டு உறுப்பினரா இருகேன். என்னுடைய வார்டுக்கு உட்பட்ட அய்யனார் கோயில் பகுதியில் அத்துமீறி மணல் அடிக்கடி அள்ளிட்டு இருக்காங்க, இதுதொடர்பா இதுக்கு முன்ன இருந்த பிடிஒ -விடம் கிராம மக்கள் சார்பா புகார் கொடுத்திருக்கேன்.
ஆனா அதுக்கு எந்தவித நடவடிக்களும் எடுக்கப்படல. காரணம் மணல் எடுக்குறதே நவல்பட்டு பஞ்சாயத்து தலைவர் என்பதால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன் வரல. அப்புறம் மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து மறைக்கவும் அதுக்கப்பறம் யாரும் மணல் எடுக்கல.
இப்போ அய்யனார் கோயில்கிட்ட ஃபேலவர்பிளாக் ரோடு போடுறாங்க, இத தலைவர் ஜேம்ஸ் வந்து பாபு என்கிற பினாமி பெயருல டெண்டர் எடுத்து வேலை செய்கிறார். டெண்டர்னால ரோடு போடுறதுக்கு மணல், கல் எல்லாம் காசு கொடுத்துதான் வாங்கணும். ஆனா இவரு கோயிலுக்கு பின்புறம் உள்ள மண்ணை எடுத்து பயன்படுத்தி வருகிறார். இவர் சொந்தமா கிராவல்ஸ் வச்சிருக்கிறதனால ஜேசிபி, டிராக்டர் போன்ற வாகனம் இருக்கிறதனால ஜேசிபி வச்சி என்னென்ன வேலை பண்ண வேண்டுமோ அத்தனையயும் முதல்ல பண்ணிட்டு அதுக்கு வாடகை செலவுனு பஞ்சாயத்து பணத்துல பில் போட்டுருவாறு. இப்போ பல இடம் பள்ளமானதுக்கு இவர் தான் காரணம்.
அதேபோல நூலகத்துல ஃபினிசிங் போடுறாங்க, ஃபினிசிங் போட்டு ஃப்லேவர் பிளாக் கல்லு போடணும். அதுக்கு உப்புவாரி மணல பயன்படுத்தி கட்ட கட்டிருக்காரு.
இப்படி அடுத்தடுத்து மக்களுக்கு பயன்படுத்த கூடிய பணத்தை இவரே டெண்டர் எடுத்து, அதுக்கு தேவையான பொருட்கல ஊருலயே எடுத்துக்கொண்டு, தரமற்ற வேலையை பார்ப்பதுடன் பஞ்சாயத்து பணத்தை எல்லாம் அபேஸ் பண்ணுகிறார் .
நவல்பட்டு கிராம பஞ்சாயத்து என்பது பெரிய பஞ்சாயத்து இங்குள்ள பிஎச்எல், துப்பாக்கி தொழிற்சாலை, ஐடி பார்க் போன்ற நிறுவனங்கள் கிராம மக்களின் நலனுக்காக, கிராமத்தின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் நிதி என்பது பல லட்சம் இதெல்லம் தற்போது இருக்கிற தலைவர் தவறாக பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.”
இதுதொடர்பாக குற்றசாட்டப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ்டம் பேசுகையில்,
“நவல்பட்டு பஞ்சாயத்துல 15 வார்டு உறுப்பினர்கள் இருக்காங்க இதுல ஒரே ஒரு வார்டு உறுப்பினர் மிண்ணல்கொடி தான் இதுமாதிரி தேவையில்லாத பிரச்சனைய ஏற்படுத்திகிட்டு இருக்காங்க. ஒழுங்கா கூட்டத்திற்கு கூட வர்ரது கிடையாது. அவங்க வார்டு மக்களோட பிரச்சனைய கேட்ட சொல்ல மாட்டாங்க,
இதுக்கு முன்ன துணைத்தலைவார இருந்தவங்க, இதுக்கு முன்ன எந்தவித செயல்பாடுகளும் இல்லாம ஃபண்டு காலியாகிக் கொண்டிருந்தது. இப்போ அதுக்கு வாய்ப்பு இல்ல, என்ன தான் அவங்க துணைத் தலைவரா இருந்தாலும், தலைவராக செயல்பட்டது அவங்க தான். இப்ப அவங்களால எதையையும் ஜீரனிக்க முடியல.
அய்யனார் கோயில் சாலை போடும் டெண்டர் நீங்க தான் எடுத்துருக்கிங்களாமே குற்றச்சாட்டு வைக்கிறாங்க,
டெண்டர் நான் எடுக்கல பாபு எனும் நபர் தான் எடுத்திருக்கிறார். நான் பார்வையிட தான் போவேன் என்றார்.
அவரு கோயில் பின் புறத்திலிருந்து மணல் எடுத்து ரோடு போட்டிருக்காரு நீங்க பார்வையிட்டபோது பார்த்திங்களா கேட்டதற்கு, அதற்கு அவர் நான் எப்பயாவது தான் போவேன் எனக்கு தெரியல என்று ஜம்ப் ஆனார் அந்த சப்ஜட்லருந்து.
மேலும் நவல்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பல நாட்களா பயன்பாடு இல்லாம பூட்டியே கிடக்குது, நீங்க அந்த கிராமத்தை போய் பார்த்து பல வருடங்களாகுதுனு மக்கள் சொல்றாங்க?
நவல்பட்டு கிராமத்தில் இருந்து வரியே குடுக்கமாட்றாங்க, கேட்டா தாய் கிராமம்னு சொல்றாங்க. இதுல தெருக்கு 4 குடி தண்ணீர் வரகூடிய பைப் இருக்கு. தெரு பைப்புல வர தண்ணீர வீட்டுக்கு மற்ற உபயோகத்திற்கு டியூப் போட்டு பயன்படுத்துறாங்க.
அதனால எல்லா வசதியும் இருக்கு, வசதிகளும் ஏற்படுத்தி குடுத்துட்டு இருக்கேன். ஊராட்சி மன்ற அலுவலகத்துல கிளார்க் போட்டிருக்கு அவங்க தினமும் வந்துட்டு தான் இருக்காங்க. அதும் இல்லாம வரி, வரவு செலவு எல்லாம் பர்மா காலனி பக்கம் தான் வரதனால அவங்களுக்கு தூரமா இருக்கும்னு பர்மா காலனி ஆபீஸ்லயே எல்லாத்தையும் முடிச்சிக்கிறது அங்க போறதுக்கு அவசியம் இல்ல என்று கூறினார்.
இதுதொடர்பாக நவல்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா அவர்களிடம் பேசுகையில்,
இதுதொடர்பாக எனக்கு எந்தவித புகார்களும் வரவில்லை, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிடுவதாக கூறினார்.
-இந்திரஜித்