தினகரன் -தினமலர்- செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் !
தினகரன், தினமலர் செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் !
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது என்ன ? என்கிற கேள்வி அடிக்கடி கேட்க வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடுவது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. அப்படி ஒரு சம்வம் தான் இந்த இன்ஸ்பெக்டரின் அடாவடி
விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் 80 வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை அதே பகுதியை சேர்ந்த சின்னக்கல்பூண்டி வகையறாவினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் கோவிலின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்ததால் கோவிலை இடித்து புனரமைக்கும் பணியை தற்போது மேற்கொண்டனர். ஆனால் இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து வந்தனர்.
இதனால், இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரத்திற்கு முன்பு இந்த கோவிலை பார்ப்பதற்கு பாஜகவில் இருந்து எச்.ராஜா அவர்கள் வந்துள்ளனர். அப்போது அவரை கோவிலுக்குள் விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது.
இதையடுத்து 145 தடை உத்தரவு நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற்றொரு தரப்பினர் கோவிலின் சிலையை எடுத்து பூஜை செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்சனை நடந்துள்ளது. தொடர்ந்து, ஒரு தரப்பு அம்மன் சிலையை எடுத்து கொட்டகை அமைத்து, பூஜைகள் செய்தனர். இந்நிலையில், மற்றொரு தரப்பினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்.
அதில், கோவில் பிரச்சனை கோர்ட்டில் வழக்கு நடக்கும் நிலையில், எட்டு பேர் கொண்ட கும்பல் சுவாமி சிலையை திருடியதாக கூறியுள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், இது வருவாய் துறை ரீதியானதாக உள்ளதால் திட்டக்குடி தாசில்தாரிடம் முறையிட கூறினார்.
பின்னர், சின்னக்கல்பூண்டி வகையறா வினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இச்செய்தியை சேகரிப்பதற்காக வேப்பூர் தினகரன் நிருபர் வேளாங்கண்ணி மற்றும் தினமலர் நிருபர் தமிழரசன் மற்றும் பல்வேறு நாளிதழ் மற்றும் மீடியா நிருபர்கள் சென்றுள்ளனர்.
அப்போது தொழுதூர் ஆய்வாளர் புவனேஸ்வரி வேப்பூர் காவல் நிலையத்தில் பொறுப்பு வகித்திருந்தார். இவர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அசிங்கமாகவும் தரக்குறைவாக திட்டி அங்கிருந்து வெளியேறுமாறு விரட்டியதுமில்லாமல். பணி செய்துகொண்டு இருந்த, தினகரன் நிருபர் வேளாங்கண்ணி மற்றும் தினமலர் நிருபர் தமிழரசன் ஆகிய இருவரையும்.. புகைப்படம் எடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர்கள்.. நாங்க செய்தி சேகரிக்க தான் வந்தோம் என கூறியதற்கு ஒரு நிருபர் என்று கூட பாராமல் அவர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி, கையில் இருந்த கேமராவை பிடுங்கி உடைக்க முயற்சித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல்.. காவல் துறை அதிகாரி சீருடை அணிந்த கர்வத்துடன் உச்சத்திற்கு சென்று… அவர்கள் இருவரையும் ஒரு விசாரணைக் கைதி போல் நடத்தி.. கைதிகளை உட்காரவைக்கும் அறைக்குள் உட்கார வைத்ததுமில்லாமல்… மனிதாபமற்ற முறையில் சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளார்.
அந்த தகவலை அறிந்த வேப்பூர், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிருபர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு இருவர் இருவரையும் வெளியே விடுமாறு கூறியுள்ளனர்.
அதன் பின்பு கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் காவல்துறை தலைவர் கூறியும் கேட்காமல் ஆய்வாளர் புவனேஸ்வரி.. பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொண்டுள்ளார்.
பணி செய்யவிடாமல் தடுத்ததாக தனக்கு தானே ஒரு புகார் மனுகொடுத்து மனுரசீதும் போட்டுள்ளார். இதனால் நிலைமை மோசமாக உணர்ந்த பதத்திகையாளர்கள் அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிருபர்களின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் திரண்டு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல், ஆறு மணி நேரத்திற்கு பிறகு மாலை 5 மணி அளவில் அவர்கள் விடுவித்துள்ளார்.
செய்தி சேகரிக்கச்சென்ற ஒரு பத்திரிகையாளருக்கே இந்த நிலைமை என்றால்… புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் நிலை.. கேள்விக்குறியாகவே உள்ளது.