முதல்வர் ஸ்டாலினின் டி.டி.எச். ப்ளான்
தமிழகத்தின் 20 மாநகராட்சி மேயர் பதவிகளில் 11-ஐ பெண்களுக்கு வழங்கி பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று இந்தியாவே பெருமையுடன் நிமிர்ந்து பார்க்கிறது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினோ அதையும் தாண்டி, இன்னும் அழுத்தமாக சொல்லப் போனால் 50% -ஐயும் தாண்டி பெண்களை மேயர் நாற்காலியில் அமரவைத்துள்ளார். கலைஞரின் ‘பராசக்தி’கள் என திமுகவின் ஐ.டி.விங்கும் குதூகலித்துள்ளது.
பொதுவாக திமுகவைப் பற்றிய விமர்சனம் ஒன்று பல ஆண்டுகளாக அரசியல் சந்தைக்கடை வியாபாரிகளிடமும் சதுரச் செயலாளர் சந்து முருகன்களிடமும் இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. “திமுகவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. கட்சியின் தலைமைப் பதவியாக இருந்தாலும், மாவட்ட அளவிலான பதவிகள் இருந்தாலும் வாரிசுகள் தான் கோலோச்சுகிறார்கள். கட்சிக்காக உண்மையாக உழைக்கும் அடிமட்டத் தொண் டனின் நிலையோ பரிதாப நிலை தான்” என கூக்குரல் எழுப்புவார்கள், ’பக்கத்து இலைக்குப் பாயாசம் ஊத்துங்க’ என்ற ரேஞ்சில் இருக்கும் பரிதாப பயில்வான்கள்.
திமுக பிறந்த போதே, அதை வசைபாடுவதற் கென்றே, தூற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் பிறந்துவிட்டது. அந்தக் கூட்டம் தூற்றத் தூற்ற, வளர வளர, அதைவிட எழுச்சியாக திமுகவும் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் வாரிசு அரசியல் கூச்சலுக்கு, “திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல” என்பதை அடிக்கடி வலியுறுத்திச் சொல்லியுள்ளார் கலைஞர்.
தனது மகன் மு.க.ஸ்டாலினை மாநில இளைஞரணிச் செயலாளராக நியமித்த கலைஞரால், அவரை எம்.எல்.ஏ.ஆக்குவதற்கும் மேயராக்குவதற்கும் துணை முதல்வராக்குவதற்கும் பல வருடங் களானது. அதே போல் ஸ்டாலினும் கலைஞர் இருக்கும் வரை, கட்சித் தலைவர் பதவியைப் பற்றியோ, முதல்வர் ஆவது பற்றியோ கொஞ்சம் கூட யோசிக்கவும் இல்லை, கவலைப்படவுமில்லை.
தனது கடின உழைப்புகேற்ற ஊதியமும் விசுவாசத்துக்குண்டான வெகுமதியும் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் கட்சிக் காக உழைத்தார், உழைத்தார், கலைஞரின் ஆசியுடன் திமுகவை அரியணையில் ஏற்றிய பின்பும் உழைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட உழைப்பின் பலனை நேரடியாகப் பெற்றவர் என்ற முறையில் தான், இப்போது 20 மேயர்களை, ’டி.டி.எச்.’ ப்ளான் ( Direct to Honouarable ) மூலம் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதாவது மந்திரிகள், மா.செ.க்களின் ஆட்களுக்கோ, அவர்களின் துதிபாடிகளுக்கோ மேயர் பதவிகளைக் கொடுக்காமல், தானே நேரடியாக விசாரித்து தேர்வு செய்துள்ளார் முதல்வர். எனவே உண்மையான உழைப்பிற்கேற்ற பரிசையும் விசுவாசத்துக்கான பரிசு பெற்ற மேயர்களைப் பற்றி விபரங்கள் இதோ.
சென்னை மேயர் ஆர்.ப்ரியா
74-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.காம். பட்டதாரியான இவரின் தந்தை ராஜன் 30 ஆண்டுகளாக திமுகவின் தீவிர பற்று கொண்டு, பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்தார். கட்சியின் எந்தப் பதவியிலும் ராஜன் இல்லாவிட்டாலும் அவரின் விசுவாசத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வெகுமதி தான் 28 வயதான ப்ரியாவை மேயர் நாற்காலியில் அமரவைத்துள்ளது.
தாம்பரம் மேயர் வசந்தகுமாரி
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் மேயராக நாற்காலியில் அமர்ந்தி ருப்பவர். பி.டெக்.கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவருக்கு வயது 25 தான். 35 ஆண்டுகளாக திமுகவின் தீவிர விசுவாசியாக இருக்கும் வசந்தகுமாரியின் தந்தை கமலக் கண்ணன், தொண்டரணி, இளைஞரணி இவற்றில் சின்ன பதவிகளை வகித்து, இப்போது தான் தாம்பரம் 1-வது வட்டச் செயலாளராகியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி
மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு, 9-ஆவது வார்டில் நின்று வெற்றி பெற்று, இப்போது முதல்வர் ஸ்டாலினிடமிருந்து விசுவாச வெகுமதியைப் பெற்றிருக்கிறார். மகாலட்சுமியின் கணவர் யுவராஜ், காஞ்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
வேலூர் மேயர் சுஜாதா
35 வயதாகும் இவரும் பட்டதாரி தான். இவரின் கணவர் அனந்தகுமார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். வேலூர் மாநகர மகளிரணியின் செயலாளராக இருக்கும், இவரின் அப்பாவோ அண்ணன், தம்பிகளோ கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத சாதாரண குடும்பதைச் சேர்ந்தவர்கள் தான். இவரை மேயர் வேட்பாளராக முதல்வர் அறிவித்ததுமே, “கவுன்சிலர்களுக்கு, பகுதிச் செயலாளர்களுக்கு கொடுக்குமளவு என்னிடம் பணம் வசதி இல்லேண்ணே” என தயங்கியிருக்கிறார் சுஜாதா. “அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதம்மா, நான் பார்த்துக்குறேன். நம்ம எம்.எல்.ஏ.கார்த்திகேயன் பார்த்துக்குவாரு” என தெம்பூட்டியுள்ளார் ஸ்டாலின். சுஜாதா தயங்கியதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால், அமைச்சர் துரைமுருகன், தனது ஆதரவாளரான வன்னிராஜாவின் மனைவி புஷ்பலதாவை மேயராக்குவதற்கு முயற்சி செய்தும் மறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதை எல்லாவற்றையும் சமாளித்து மேயர் நாற்காலியில் சுஜாதாவை அமர வைத்துள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.
ஆவடி மேயர் உதயகுமார்
திமுகவின் மேயர்களிலேயே மிக குறைந்தளவு படித்தி ருப்பவர். 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் திருமுல்லை வாயல் பகுதியில் வட்டச் செயலாளராக இருந்து சுறுசுறுப்பாக கட்சிப் பணியாற்றி வரும் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கேயும் அமைச்சர் ஆவடி நாசரின் ரெக்கமெண்டேஷனை ரிஜெக்ட் பண்ணி, உதயகுமாரின் வாழ்க்கையில் புதிய உதயத்தை ஏற்படுத்தியிருக்கார் மு.க.ஸ்டாலின்.
நெல்லை மேயர் பி.எம்.சரவணன்
எந்தவித பிரதிபலனையோ, பணபலனையோ எதிர்பாராமல், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றி வருபவர். இவரது தந்தை சீட்டுக் கம்பெனி நடத்தி, கடனாளியாகி, நொடித்துப் போனவர். மாநகரில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மெஜாரிட்டி என்பதால், ஸ்டாலினின் ஒரே சாய்ஸ் உழைப்பாளியும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான பி.எம்.சரவணன் தான்.
தூத்துக்குடி மேயர் என்.பி.ஜெகன்
கலைஞரின் முரட்டுப் பக்தரான என்.பெரிய சாமியின் மகனும் இப்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தம்பியுமான இவர் மட்டும் தான் பலமான பின்னணி உள்ளவர். இதனால் மட்டும் இவரை மேயராக்கவில்லை ஸ்டாலின். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் படியான கட்சிப் பதவிகளிலோ, மற்ற உயர் பதவிகளிலோ ஜெகன் இருந்ததில்லை. கஷ்ட நிலையில் இருக்கும் கட்சியினரிடம் இவர் காட்டும் நெருக்கமும் செய்யும் உதவிகளும் தான் இவரை மேயர் நாற்காலியில் அமரவைத்துள்ளது. ”பதவியில் அமர்ந்த பிறகும் இதே பாணியை ஜெகன் தொடர்ந்தால் தூத்துக்குடி மாநகர உ.பி.க்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட உ.பி.க்களும் உற்சாகமாக இருப்பார்கள்” என்றார் மாநகர சீனியர் உடன்பிறப்பு ஒருவர்.
கவலையை விடுங்க உடன்பிறப்புகளே “உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை நானே நேரடியாக கண்காணிப்பேன்” என முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டார்.