சீட்டிங் பெண்ணுக்காக போலீஸையே மிரட்டும் எஸ்.பியின் மனைவி !
சீட்டிங் பெண்ணுக்காக போலீஸையே மிரட்டும்
எஸ்.பியின் மனைவி !
கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதிலேயே புதிய டெக்னிக்கை பயன்படுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த கோகிலா. இவர் மீதான புகாரை விசாரித்தால் தனக்கு வழக்கறிஞர்களை தெரியும், போலீஸ் உயரதிகாரிகளை தெரியும் என்றெல்லாம் மிரட்டுகிறார். அதுவும், போலீஸ் எஸ்.பியே அந்த பெண்ணுக்கு ஆதரவாக ஃபோன் செய்து விசாரணை அதிகாரியை மிரட்டுகிறார். இதனால், மோசடி பெண் கோகிலா மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் திணறிவருகிறோம் என்று போலீஸாரிடமிருந்தே கதறல்கள் வர, விசாரிக்க ஆரம்பித்தோம்…
யார் இந்த கோகிலா?

சென்னை எம்.ஜி.ஆர் காவல்நிலைய போலீஸார் நம்மிடம், ”எம்.ஜி.ஆர் நகர், பம்மல் நல்லத்தம்பி தெருவைச்சேர்ந்தவர்தான் இந்த கோகிலா. ஏலச்சீட்டு நடத்துவது, தண்டலுக்கு விடுவது, வட்டிக்கு விடுவது என பல்வேறு கொடுக்கல் வாங்கல் வேலைகளை செய்கிறார். தனது மோசடிகளிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் உயரதிகாரிகள் என சமூகத்தில் அந்தஸ்தான பதவியில் இருப்பவர்களின் வீடுகளில் வீட்டு வேலைக்கு சேர்வது தான் கோகிலாவின் டெக்னிக். பலரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுப்பதில்லை. அப்படியே, பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால், ‘நீங்க கடன் கொடுக்கல. வட்டிக்குத்தான் பணம் கடன் கொடுத்தீங்கன்னு உங்களையே ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்’ என்றெல்லாம் மிரட்டுவார். திட்டமிட்டபடி வேலைக்குச் சேர்ந்து வழக்கறிஞர்கள், போலீஸ் உயரதிகாரிகள் மூலம் காவல் நிலையத்தில் மிரட்டுவார். பணம் கொடுத்தவர்களோ எதற்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள்.
இப்படித்தான், பணம் வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை என்று எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. அப்போ, கோகிலாவை அழைத்து விசாரித்த போது வழக்கறிஞர் விஷ்ணு வீட்டில் வேலை செய்கிறேன் என்று அவர் பெயரைக்கூறி மிரட்டலாக பேசினார். பணத்தையும் திருப்பிக் கொடுக்கல.
தற்போது, 1 லட்ச ரூபாய் பணம் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் மிரட்டி வருவதாக இன்னொரு புகாரும் வந்திருக்கு. இப்போ, என்னடான்னா ஒரு பட்டாலியன் எஸ்.பி வீட்டுல வேலைக்கு சேர்ந்துக்கிட்டு பணத்தை கொடுக்காம மிரட்டுறாங்க இந்த கோகிலா. அதுவும், எஸ்.பியும் எஸ்.பியோட மனைவியும் அடிக்கடி போலீஸூக்கு ஃபோன் பண்ணி மிரட்டுறாங்க” என்றவர்கள் கோகிலா மீதான புகாரையும் நம்மிடம் காண்பித்தார்கள்.
பொண்ணு ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டு 1 லட்ச ரூபாய் கடன் கொடுங்க. மூன்றுமாதத்தில் திருப்பிக் கொடுக்கிறேன் என்று கோகிலாவும் அவரது கணவர் பழனியும் 2016 ஆம் ஆண்டு 1 லட்ச ரூபாய் அதே தெருவைச்சேர்ந்த சுந்தரி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளனர்.
கடன் கொடுத்த பெண்மணி அந்த ஃபங்ஷனுக்கு சென்ற போது தான், இதே காரணத்தைக்கூறி பலரிடமும் கடன் வாங்கியது தெரியவந்தது. பிறகு தான், கோகிலாவிடம் பத்திரம் எழுதி வாங்கியிருக்கிறார் அந்த பெண்மணி.

கோகிலாவின் ஹவுஸ் ஓனரின் உறவினரிடமும் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. லீஸுக்கு இருந்ததால் அந்த லீஸு காசை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டார் கோகிலாவின் ஹவுஸ் ஓனர். அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் தற்போது வாடகைக்கு குடியிருக்கிறார் கோகிலா. இப்படி ஏமாற்றிய பணத்தை வைத்து ஊரில் தம்பியுடன் சேர்ந்து நிலம் வாங்கியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
மேலும், பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார் கொடுத்த பெண்மணியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “பலரிடமும் பணத்தை வாங்கிவிட்டு, தன்னை யாரோ ஒருத்தர் ஏமாற்றிட்டாங்க. அதனால், பணத்தை திருப்பி முடியல என்று ரொம்ப நாளாகவே இழுத்தடித்துக்கொண்டிருந்தார் கோகிலா. நடையாய் நடந்து கெஞ்சி கூத்தாடி ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாயாக 7,000 ரூபாய்தான் கொடுத்தார்.

ஏற்கனவே, கொடுக்கல் வாங்கலில் 10,000 ரூபாய் கொடுத்தார். அதை, இந்த 1 லட்ச ரூபாய் கடனில் கழித்துக்கொள்ளச் சொன்னார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதையே காரணம் காண்பித்து இந்த 1 லட்ச ரூபாய் கடனைக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
எப்போது கேட்டாலும் அப்புறம் தருகிறேன் என்று சொல்வாரே தவிர, கொடுக்கமாட்டார்.
வேற வழியில்லாமத்தான் சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
அப்போது, சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணை அழைத்து வந்து இவருக்குத்தான் கடன் வாங்கிக்கொடுத்தேன். இவர் கொடுத்தால்தான் நான் திருப்பிக்கொடுக்கமுடியும் என்று புதிய கதையை அவிழ்த்துவிட்டார் கோகிலா. அந்த பெண் யார் என்றுகூட எனக்கு தெரியாது. நான் உன்னிடம் தானே கடன் கொடுத்தேன் என்று போலீஸாரிடம் கூறினேன். பிறகு, கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டார் கோகிலா. அப்போதைய 10,000 ரூபாயை கழித்துக்கொண்டு 83,000 ரூபாயை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று கோகிலா காவல்நிலையத்தில் எழுதிக்கொடுத்தார். முதல் மாதம் 3,000 ரூபாயாகவும் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயாகவும் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டார்.

முதலில் 3,000 ரூபாய் கொடுத்தார், பிறகு 2,000 ரூபாய்தான் உள்ளது என்று கொடுத்தார். பிறகு, கொடுக்கவில்லை. 4, 5 மாதங்களாக கொடுக்கவே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்டபோது, புதிதாக எஸ்.பிக்கிட்ட வேலைக்கு சேர்ந்து கொண்டு அவர் பெயரைச்சொல்லி மிரட்ட ஆரம்பித்தார்.
பிறகு, எஸ்.ஐ பாலமுருகனிடம் ஒப்படைத்தார் புதிதாக வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாறன். கோகிலாவிடம் எஸ்.ஐ பாலமுருகன் 5,000 ரூபாய் கொடுக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை 3,000 ரூபாய் கொடு என்று பேசிப்பார்த்தார். ஆனால், எஸ்.பியும் அவரது மனைவியும் ஃபோன் செய்து கோகிலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால், எஸ்.ஐ யாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
மீண்டும் இன்ஸ்பெக்டர் பூமாறனிடம் போனேன். 4, 5 முறை அலைந்தேன். திடீரென்று எல்லா பணமும் கொடுத்துட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார் கோகிலா. ஸ்டேஷனில் வந்து இதுவரை 11,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
மீதி, 72,000 ரூபாய் தரவேண்டும். ஆனால், கொடுக்காமல் ஏமாற்றிவருகிறார் கோகிலா. என்னைப்போல் யாரும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான் புகாரே கொடுத்தேன்” என்று கண்கலங்குகிறார்.
பணம் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் பலவருடங்களாக ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்ட, கோகிலாவை நாம் தொடர்புகொண்டபோது அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. கட்டுரை வெளியான பிறகு, அவர் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.
இந்நிலையில், பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் ஏமாற்றி வரும் கோகிலாவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் நகர் போலீஸிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த பட்டாலியன் எஸ்.பியின் மனைவி உமா என்பவரை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, “எனது கணவர் செந்தில் பூந்தமல்லி பட்டாலியன் எஸ்.பியாக உள்ளார். கோகிலா என்பவர் எங்கள் வீட்டில் வேலை செய்வது உண்மைதான். கோகிலா, கடன் வாங்கவில்லை. இன்னொருவருக்காக கேரண்டி கையெழுத்துதான் போட்டிருக்கிறார்” என்று கடன் வாங்கும்போது இவரே கூடவே இருந்து பார்த்தது போல் கூறியவர், “பணம் வாங்கியது திருப்பிக்கொடுப்பது குறித்து காவல்நிலையத்தில் கோகிலா எழுதி கொடுத்ததாக எஸ்.ஐ. பாலமுருகன் என்னிடம் பேசினார். இது, சிவில் கேஸ் இதில் நீங்கள் எழுதியெல்லாம் வாங்கமுடியாது. கோர்ட்டுக்கு போகச்சொல்லுங்கன்னு சொல்லிட்டேன். மற்றபடி எனக்கு இதற்கும் எந்த தொடர்புமில்லை” என்று நம்மிடம் கூறினார். இதற்குமேல் என்ன தொடர்பு வேண்டும்?
இதுகுறித்து, பூந்தமல்லி பட்டாலியன் எஸ்.பி செந்திலை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, “என்கிட்ட வேலை பார்க்கிறவங்க ஒரு பிரச்சனைனு வந்தா அவங்களுக்காக நான் ஸ்டேஷன்ல பேசத்தான் செய்வேன். உங்களாக முடிஞ்சதை எழுதிக்கோங்க” என்று டென்ஷனாக பேசியவரிடம், “உங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் பலரிடமும் ஏமாற்றியவருக்காக நீங்கள் பரிந்து பேசலாமா? என்று நாம் கேட்டபோது, “அதெல்லாம் பிரச்சனை இல்லை. இதுமாதிரி ஏகப்பட்ட பரிந்துரைகள் வரும். அதையெல்லாம் நானே விசாரித்துவிட்டு பரிந்துரை செய்யமுடியுமா என்ன? பாதிக்கப்பட்டவங்களை கோர்ட்டுக்கு போகச்சொல்லுங்க. ஏன் கோர்ட்டுக்கு போகமாட்டேங்குறாங்க?” என்று அலட்சியமாக பேசினார் எஸ்.பி. செந்தில்.

இதுவே, இவர் தரப்பு பணத்தை ஏமாந்திருந்தால் இப்படி பேசுவாரா? இவரிடம் வேலைபார்க்கிறார் அல்லது இவருக்கு வேண்டப்பட்டவர் என்பதற்காக ஒரு அரசுப்பதவியை சாதகமாக பயன்படுத்துவது சரியா? இவர் எஸ்.பியாக இருப்பதால் இவருக்கு கீழ்நிலையிலுள்ள போலீஸை மிரட்டுகிறார். இவரது மனைவி உமா எந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர் நகர் போலீஸாரிடம் பேசி மிரட்டுகிறார்? இன்னும் இதுபோல் யார் யாருக்கெல்லாம் விசாரிக்காமல் பரிந்துரை செய்து கொண்டு போலீஸை மிரட்டிக்கொண்டிருக்கிறது இந்த தம்பதி? என்பதை காவல்துறை டி.ஜி.பி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்திற்கு சென்றாலும் இதுபோன்றவர்களால் நீதி கிடைக்காது.
எஸ்.பி. செந்தில் – உமா தம்பதியின் அதிகார துஷ்பிரயோகத்தால், போலீஸ் தன்னை மிரட்டுவதாக காவல்துறை துணை ஆணையராக இருந்த ஹரிகிரன் பிரசாத் ஐ.பி.எஸ்ஸிடம் பொய் புகார் கொடுத்துள்ளார் கோகிலா. அதேநேரத்தில், பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டு, எஸ்.பி செந்தில் மற்றும் அவரது மனைவி உமா பெயரைச் சொல்லி மிரட்டுகிறார் கோகிலா என்று பாதிக்கப்பட்டவரும் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். எஸ்.பி பேசுவதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. கோர்ட்டுக்கு போங்க என்று கூறி அனுப்பிவிட்டார் தற்போதைய எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பல வேஷம். அப்படியென்றால், சீட்டிங் புகார்கள் குறித்து காவல்நிலையங்களில் குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதே இல்லையா?
எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலைய போலீஸாரோ, “கோகிலா பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக எங்களிடம் புகார் கொடுத்தார் சுந்தரி என்பவர். இதுபோன்ற புகார்களில் இரு தரப்புக்கும் சண்டையாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிடக்கூடாது. எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆரம்பக்கட்ட விசாரணையை செய்தோம். கோகிலாவை எந்த விதத்திலும் மிரட்டவில்லை. முதலில் கடனே வாங்கவில்லை என்றவர், கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு மாதா மாதம் தவணையில் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக எழுதிக்கொடுத்த வீடியோ ஆதாரம் உள்ளது.
அதில், அவர் காவல்நிலையத்திற்கு வந்து செல்லும் வரை எந்த மிரட்டலுக்கும் ஆளாகவில்லை என்பது தெளிவாக உள்ளது. எந்த விதத்திலும் அவர் மிரட்டலுக்குள்ளாகவில்லை. பணத்தை திருப்பிக்கொடுக்காமல் பழியை போடுகிறார்” என்கிறார்கள்.
– எம்.எஸ்.