வீணாகும் உணவு.. அதிகரிக்கும் பட்டினி சாவு.. அவலநிலையில் இந்தியா
- காவிய சேகரன்
இந்தியாவில் சில திருமண விழாக்களில் 289 வகையான உணவுகள் பரிமாறப் படுகின்றன. உணவுக்கென்று ஒரு நபருக்கு ரூ.2,500 செலவிடப்படுகிறது. எனவே, விருந்தினர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாது உணவு வகைகளிலும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். 11 வகைகளுக்கு மேல் உணவுகள் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்”
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தானில் திருமண நிகழ்வின்போது மணமகள், மணமகன் தரப்பிலிருந்து தலா 50 விருந்தினர்கள்தான் கலந்து கொள்ள வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதால் அரசுக்கு ஒன்றும் இழப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும்” என சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்று கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜஸ்பீர் சிங் பேசியுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இந்த மாற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இதற்குச் சட்டம் தேவையில்லை. மன உறுதி வேண்டும்’ என பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ஜஸ்பீர் சிங்கின் பேச்சிற்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இன்றைய நிலையில், இந்திய நாட்டில், பட்டினியால் வாடும் மக்கள் குறித்த தரவுகளை கணக்கில் கொண்டால், ஐஸ்பீர்சிங்கின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி இடாமல், செயல் வடிவத்திற்கு என்ன செய்யலாம் என விவாதித்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதை தவிர்த்துவிட்டார்கள்.
உலகளவில் உணவு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. குறிப்பாக அரிசி கோதுமை, உருளைக்கிழங்கு, மீன், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு இந்தியா.
அதே இந்தியா தான், உலகளவில் பசியால் வாடும் நாட்டு மக்களை கொண்ட, மொத்தம் உள்ள 116 நாடுகளில், 2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி, 101வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும் இந்தியாவைவிட முன்னேறிய நிலையிலேயே இருக்கின்றன என்று உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாகிஸ் தான் 92-வது இடத்திலும், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் 76-வது இடத்திலும், இலங்கை 65-வது இடத்திலும் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் 103-வது இடத்திலும் இருக்கிறது. உணவு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் ஏன் இந்த நிலை.?
உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகி விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை உணவு வீணாகுத லாகும். 2017ல் ஒருங்கிணைந்த தேசிய மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் ஆய்வின் படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் 40% குப்பைகளில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்படியான ஒரு தரவு களை கையில் கொண்ட நாம், ஏன் ஐஸ்பீர்சிங்கின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.?
உலகில் உள்ள எந்த நாட்டின் மனிதனாகினும் அவனின் முதல் அடிப்படை தேவை உணவு. எந்த ஒரு நாட்டில் பட்டினியற்ற நிலை உள்ளதோ அந்த நாடு வளர்ச்சியடைந்த நாடு என்கிறோம். கிட்டதட்ட 101வது இடத்தை தாண்டி நகரும் நாடாக உள்ளது இந்தியா. இதற்கான மிக முக்கியக் காரணம் மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வு..! சில காலங்களாக வசதிப்படைத்தவர் களிடையே ஆடம்பரத்திற்காக உணவு உட்கொள்ளுதல் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகுதல் போன்றவை அதிகரித்து வருகிறது. அதாவது ஏழைகள், ‘பட்டினி’ என்ற நிலையிலும், பணக்காரர்கள் உட்கொள்ளும் அபரீதமான உணவு, உணவு வீணாகுதல் என்ற சமத்துவமற்ற நிலையிலும் உள்ளது.
பொதுவாக திருமண விழாக்களில் ஊரைக் கூட்டி அளிக்கப்படும் உணவில் பலரும் அவர்களின் தகுதியையும் அந்தஸ்தையும் காட்ட வகைவகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. அதிலும் சிலர் தங்களின் தகுதியையும் மீறி கடன் வாங்கி ‘கௌரவம்’ என்ற பெயரில் நடத்தப்படும் விழாக்களும் உண்டு. வசதி படைத்தவர்களின் இல்லத் திருமணங்களில் வீணடிக்கப்படும் உணவு பொருட்கள் குறித்து சொன்னால் அது வார்த்தை களால் வர்ணிக்க முடியாத வேதனைகள்.
“பொதுவாக திருமண விழாக்களில் அதிகமாக வும், காதுகுத்து, புது நன்மை போன்ற சிறு விழாக்களிலும், நிறுவன கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களிலும் கூட உணவுப் பொருட்கள் எங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது” என்கிறார் ‘‘நோ புட் வேஸ்ட்’ன் பொறுப்பாளர் ராமகிருஷ்ணன்.
“1000 பேருக்கான விழாவில் 600/700பேர் தான் கலந்து கொள்கிறார்கள் என்பதால் உணவுகள் வீணாகிறது. மாதத்தில் இருபது நாட்கள் இப்படியான உணவுகள் எங்களுக்கு கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக பத்தாயிரம் பேருக்கான உணவுகள் கிடைக்கிறது” என்றும் அவர் கூறிய போது நமக்கு ஆச்சரியம் மேலிட்டது.
பொதுவாக பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் மீதமானால் அதை ஊழியர்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. குப்பையில் தான் கொட்டுவார்கள். இது குறித்து நாம் கேட்ட போது, “ஆமாம்.. முன்பெல்லாம் மூன்று, ஐந்து நட்சத்திர விடுதிகளில் மீதமாகும் உணவை தரமாட்டார்கள். இப்போது அப்படியல்ல. அவர்களும் தருகிறார்கள். அந்த உணவை நாங்கள் வழங்குவதை புகைப்படம் மட்டும் வீடியோக்கள் மூலமாக அவர்களுக்கு தருவதால் நம்பிக்கையோடு எங்களிடம் கொடுக்கிறார்கள்” என்றார் ராமகிருஷ்ணன். தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் செயல்பட்டு வரும் ‘நோ புட் வேஸ்ட்’ அமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியா முழுவதும் உள்ள ‘நோ புட் வேஸ்ட்’ சப்போட்டர்ஸ் மூலம் 12 பெரும் நகரங்களில் மட்டும் 1,14,440 பேருக்கான உணவை கொடுத்திருக்கிறது. அதாவது வீணாகிப் போக இருந்த 1,14,440 பேருக்கான உணவு பயன்படுத்தப்பட்டி ருக்கிறது. அவ்வளவே..!
இது ஒருபுறமிருக்க.. உலக அளவில் ஆண்டுக்கு 17 சதவிகிதம் உணவு வீணடிக்கப்படுவதாகவும், அதில் அதிகபட்சமாக 61% வீட்டில் தயாரிக்கப் படும் உணவுகளே வீணாவதாக ஐநா ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வீடுகள்தோறும் உணவு வீணடித்தல் அளவானது ஆண்டுக்கு 50 கிலோவாக உள்ளது. இது ஆண்டுக்கு 68.7 மில்லியன் டன்களுக்குச் சமமாகும் என்றும் குறிப்பிடுகிறது.
இதோடு உற்பத்தியாகும் அதிகப்படியான காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப் படுகின்றன. “தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்களில், 20 முதல் 25 சதவீதம் வீணாகி வருகின்றன” என்கிறார் வேளாண்துறை அதிகாரி ஒருவர். எனில், வீணாகுதல், உற்பத்தி என அனைத்து இடங்களிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். இதற்கு அரசு கடும் சட்டமியற்றினால் மட்டும் போதாது. ஒவ்வொரு தனிமனிதனின் செயல் மட்டுமே உணவுப் பொருள் தேவையில்லாமல் வீணாவதை தடுக்கமுடியும். அதாவது, அரசின் கடும் நடவடிக்கை களைவிட “தேவைக்கு மீறிய உணவின் நுகர்வு இன்னொருவரின் பசிக்கு காரணமாகிறது” என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து செயல்படுவதன் மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சி மேன்மையடையச் செய்து உலக தரவரிசை பட்டியலில் பட்டினியில்லா நாடாக இந்தியாவை முன்நிறுத்த முடியும்.