ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு !
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு
இரட்டைக் குதிரை சவாரி ஊர்போய் சேராது’.. என்ற கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்பைப் பயில, பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ்குமார் அனுமதி வழங்கியுள்ள செய்தி யைப் பார்த்தவுடன் மேற்கண்ட பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
“மாணவர்கள் பன்முகத் திறன்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒரே நேரத்தில், இரு பட்டப்படிப்புகளைப் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கற்கலாம். அதுபோல ஒரு பட்டப்படிப்பைக் கல்லூரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை ‘ஆன்லைன்’ வாயிலாகவும், தொலைநிலை கல்வி மூலமும் கற்கலாம்” என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பு இப்படிக் குறிப்பிடுகின்றது.
ஒரே நேரத்தில் இருபட்டப்படிப்பு படிக்கலாம்.
அதை இன்னொரு பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழியில் படித்துக் கொள்ளலாம். சரி.. ஆன்லைன் என்னும் இணைய வழியில் கற்றுக்கொள்ளலாம். சரி.. திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொள்ளலாம். எல்லாம் சரி.. இன்னொரு பட்டப் படிப்புக்கான கட்டணச் செலவை மாணவர்கள்தான் ஏற்கவேண்டும் என்றால், இரண்டாம் பட்டப்படிப்பு படிப்பதற்குக் கல்வி உதவித்தொகை உண்டா? மாநில அரசுகள் அடுத்த பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசு ஆணை பிறப்பிக்குமா?
தமிழகத்தில் கல்வி பெறும் தாழ்த்தப்பட்ட/மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகின்றது. இதை வைத்துக் கொண்டுதான் அத்தகைய மாணவர்களால் இளநிலையிலிருந்து முதுநிலைக்குச் செல்ல முடிகின்றது. அங்கேயும் கல்வித் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை இல்லையென்றால், கல்வி என்பது அவர்களுக்குக் கானல்நீராகவே இருக்கும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் ஒரு பட்டப்படிப்பு படிப்பதற்கே அவர்கள் தாய்மார் கள் அணிந்திருக்கும் தாலி, அக்காவின் மூக்குத்தி, தங்கையின் தோடு என்ற சிறு தங்கநகைகள் எல்லாம் அடகு கடையில் இருக்கும். மீட்கமுடியாமல் ஏலத்திற்குப் போய்விடும். வீட்டில் இருக்கும் ஆடு, மாடு, கோழி அத்தனையும் விற்கப்படும். ஏழை மாணவர்கள் படித்து முடித்ததை அந்தக் குடும்பம் பெருமையாகக் கொண்டாடுமே தவிர, அடகில் மூழ்கிப்போன நகைகளைப் பற்றி அந்தக் குடும்பங்கள் கவலைகொள்ளாது.
இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் தான் பல்கலைக்கழக மானியக்குழு ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு என்ற தேவையற்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது என்றே தோன்றுகின்றது. இந்தப் புதிய முறை சமூகநீதிக்கு முற்றிலும் எதிராகவே இருக்கும் என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
இணைய வழியில் படிக்கலாம் என்றால் நாடு முழுமையும் இணைய வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதா? என்ற கேள்வியைக் கேட்டால், இன்னும் மின்சார வசதி பெறாத கிராமங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன என்ற புள்ளிவிவரங்கள் நம்மை வேதனைப்படுத்துகின்றது.
இந்நிலையில் இணையச் சேவை இதுவரை எட்டாத கிராமப்புற மாணவர்கள் எப்படி இணையவழியில் இன்னொரு பட்டப்படிப்பைப் படிக்கமுடியும்? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசிடம் பதில் இருந்தால் நல்லது