மதுரை-தேனி இரயில் சேவையால் ‘நோ யூஸ்’விழா நடத்தி வித்தை காட்டிய ரயில்வே…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை-தேனி இரயில் சேவையால் ‘நோ யூஸ்’விழா நடத்தி வித்தை காட்டிய ரயில்வே…

மதுரையில்‌ இருந்து தேனி மாவட்டம்‌, போடி வரை இருந்த மீட்டர்‌கேஜ்‌ ரயில்‌ பாதையை, கடந்த 2009ஆம் ‌ஆண்டு அகல ரயில்‌ பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ‘இதையடுத்து கடந்த 2010-ம்‌ ஆண்டு, இதற்கான திட்டப்பணிகள்‌ தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பின்பு மதுரையிலிருந்து தேனி வரை 75 கி.மீ. தூரத்திற்கு அகலப்‌பாதையாக மாற்றப்பட்டது. போடி வரை நீடிக்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் மே27-ஆம்‌ தேதி, மதுரை முதல் தேனி இடையே ரயில்‌ இயக்கப்படும்‌ என்று தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அதன்படி மதுரையில்‌ இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்படும் இரயில் காலை 9.35 மணிக்குத் தேனியைச் சென்றடையும்.‌  தேனியில்‌ இருந்து மதுரைக்கு தினமும்‌ மாலை 6.15-க்கு புறப்படும்‌ இரயில் மதுரைக்கு 7.35 மணிக்கு வந்தடையும் எனவும்‌ வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டியில்‌ ரயில்‌ நின்று செல்‌லும்‌ என்றும்‌ அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை tஷீ தேனி இடையே ரயில்‌ சேவை‌ மீண்டும்‌ தொடங்கியது. ரயில்‌ சேவை நேரத்‌தில்‌ மாற்றம்‌ செய்து மதுரை ரயில்‌ நிலையத்தில்‌ காலை 8.05 மணிக்கு புறப்படும்‌ ரயில்‌, 9.35 மணிக்கு தேனி ரயில்‌ நிலையம்‌ சென்றடையும்‌ என்றும்‌. தேனி ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து மாலை 6.15மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை வந்தடையும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில்‌ அரசு மற்றும் தனியார்‌ ‌பணியில் உள்ள‌ மதுரை வாழ்‌ மக்களுக்கு மட்டுமே பயனடையும்‌ வகையில்‌ காலையில்‌ மதுரையிலிருந்து தேனிக்கு  ரயில்‌ வருகின்றது. மீண்டும்‌ மாலை 6.15.க்கு தேனியில்‌ ரயிலை பிடித்து மாலை 7.50 மணிக்குகெல்லாம்‌ மதுரையில்‌ இறங்கி 8.00 அல்லது 8.30க்கு வீட்டில்‌ சேர்ந்து விடுகிறார்கள்‌. இந்த இரயில் சேவையால் தேனி மாவட்ட மக்களுக்கு என்ன பயன்‌ இருக்கிறது? மதுரை மக்கள் பயனடையவே தேனி இரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதா? என்று தேனி மாவட்ட மக்கள் கொந்தளிக்கின்றனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

காலையிலும்‌ மாலையிலும்‌ தேனியில்‌ இருந்து மதுரைக்கு மற்றுமொரு ரயிலை இயக்கி மதுரைக்கும்‌ தேனிக்கும்‌ இடையே இரண்டு ரயில்களின்‌ சந்‌திப்பில்‌ மாற்று பாதை ஏற்படுத்தும்‌ வகையில்‌ பயண மார்க்கம்‌ இருந்‌தால்‌தான்‌ மதுரை மாவட்டத்தில்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்‌களில்‌ பணிபுரியும்‌ தேனி மாவட்ட மக்களும்‌ பயன்‌ அடையமுடியும்‌. இவ்வாறு இல்லாமல்‌ பள்ளி குழந்‌தைகளுக்குச் சுதந்திர தின நாளன்று மிட்டாய்‌ கொடுக்கும்‌ விதமாக அரசியல்‌வாதிகளும்‌ மத்திய தென்னக இரயில்வே நிர்வாகமும்‌ சாதனை செய்ததாக மார்தட்டிக்கொண்டு கோலாகலமாக விழா நடத்தி காட்சிபடுத்தி வித்தை காட்டியது நியாயம்‌ ஆகுமா…!! இதற்குதான்‌ தேனி மாவட்ட மக்கள்‌ ஆசைபட்டார்களா…? என்ற தேனி மக்களின் கொதிநிலை பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டன. அங்குசம் செய்தி இதழ் களத்தில் இறங்கி, தேனி சமூக நல ஆர்வலர்களின் கருத்துகளை அறிந்து மக்களின் உணர்வுகளைப் இங்கே பதிவு செய்கிறது.

இரா.முருகன், (முன்னாள் இராணுவ வீரர்) கூடலூர் : 12 ஆண்டுகள் கழித்து மதுரையிலிருந்து தேனி வரை தொடங்கப்பட்ட இரயில்சேவை வரவேற்புக் குரியது என்றாலும் தேனி மாவட்ட மக்க ளுக்குப் பெரும் பயனைத் தரவில்லை என்பது உண்மை என்றாலும், இரயில்வே நிர்வாகம் தேனி மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேனி இரயில்நிலையத்திற்கு காலை இரயில் வரும்போதும், மாலை மதுரைக்குப் புறப்படும்போதும் தேனியில் இரு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. நெரிசல் தீர்வதற்கு அரைமணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்கிறது. இதனால் இரு சாலைகளிலும் மாநில அரசும், இரயில்வே நிர்வாகமும் இணைந்து மேம்பாலங்கள் அமைக்க முன்வரவேண்டும்.

காலையில் தேனி வரும் இரயில் மாலை வரை தேனியில்தான் நின்றுகொண்டிருக்கிறது. இரயில்சேவைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தவேண்டும். தேனி மாவட்ட மக்களுக்குப் பயன்படும் வகையில் இரயில் சேவை நடத்தப் படவேண்டும்.

தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் தேனி மு.சுப்பிரமணி : மதுரையிலிருந்து தேனிக்கு இரயில் சேவை திரும்ப வந்துவிட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், இதனால் தேனி மாவட்ட மக்களுக்கு எந்தப் பயனுமில்லை என்பதுதான் உண்மை.

தேனி மாவட்ட மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக மதுரைக்குச் சென்று திரும்புவது வாடிக்கை. இவர்கள்  காலையில் மதுரைக்குச் சென்று, தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அல்லது தங்களது பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் தேனிக்குத் திரும்ப வருவார்கள். அவர்களுக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரயில்சேவை எந்த வழியிலும் பயனளிக்கக் கூடியதாக இல்லை.

தற்போதைய இரயில் சேவையை அப்படியே முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். அதாவது, தேனியிலிருந்து காலை 8.05 மணிக்கு இரயில் புறப்பட்டு மதுரைக்கு காலை 9.35 மணிக்குள் சென்றடையும்படியும், அதன் பிறகு, இந்த இரயில் மாலை 6.15 மணிக்கு மதுரையில் புறப்பட்டு, இரவு 7.50 மணிக்குத் தேனி திரும்பி வருவதாக மாற்றியமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைத்தால் மட்டுமே, இந்த இரயில் சேவை தேனி மாவட்ட மக்களுக்குப்  பயனாக இருக்கமுடியும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த இரயிலை மதுரை இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்க இயலாது என்று கருதும் நிலையில், இதே இரயிலை மதுரை – தேனி வழித்தடத்தில் கூடுதலாக இரு முறை இயக்குவதற்கு முயற்சிக்கலாம். பகல் வேளையில், தேனி&மதுரை நெடுஞ்சாலையில் மூன்று நிமிடங்களுக்கு

ஒரு பேருந்து இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக இயக்கப்படும் இரயில் பயணத்திற்குப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். வணிக நோக்கிலும், இது இலாபகரமானதாகவே அமையும் என்பதையும் ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாண்டியராஜன் (BJP) அல்லிநகரம் : மதுரை – தேனி இரயில்சேவை தேனி மாவட்ட மக்களுக்கு முழுமையாக பயனளிக்கவில்லை என்று கூறமுடியாது. இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரயில்சேவைக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவின் அடிப்படையில் மேலும் பல பயன்கள் கிடைக்கும். தேனியிலிருந்து காலையில் மதுரைக்கு இரயில்சேவை வேண்டும் என்ற தேனி மக்களின் கோரிக்கையில் முழுமையான நியாயம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது, என்றாலும் அக்கோரிக்கையை நிறைவேற்ற இரயில்வே நிர்வாகத்திற்குக் கொஞ்ச காலஅவகாசத்தை எடுத்துக்கொண்டு நிறைவேற்றுவார்கள் என்பதில் ஐயம் கொள்ளவேண்டிய தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

மேலும், தற்போது மதுரையிலிருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் விரைவு தொடர் வண்டியைத் தேனி வரை நீடிப்பதாகத் தென்னக இரயில்வே கூறியுள்ளது. மிகவிரைவில் இந்த இரயில்சேவை தொடங்கும் என்று நம்புகிறேன். இதில் என்ன பிரச்சனையென்றால், இந்த விரைவு தொடர்வண்டி சென்டரலுக்குக் காலை 8.00 மணிக்குத்தான் சேருகிறது. இது காலை 6.00 மணியளவில் சேருவதுபோல் மாற்றினால் நல்லது. மேலும், தென்னிந்திய மற்றும் வடஇந்தியப் பயணங்களுக்கு எழும்பூரைவிட சென்டரல் இரயில்நிலையமே சிறந்தது. மேலும் பயண நேரம் தற்போது 9 மணிநேரமாக உள்ளது. தேனியிலிருந்து புறப்படும்போது 10.30 மணிநேரமாக உயரவும் வாய்ப்புள்ளது. தொடர்வண்டியின் வேகத்தை உயர்த்தி நேரத்தைக் குறைக்கும் வாய்ப்பும் எதிர்காலத்தில் ஏற்படும்.

போடி வரை இரயில் பாதையின் பணிகள் முடிந்தால் போடியிலிருந்து மதுரை, திருச்சி, விருத்தாச்சலம் வழியாக ஒரு இரயில்சேவை தொடங்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் 8 மணி நேரத்தில் எழும்பூரை அடைந்துவிடலாம். அதனால் தேனிக்கு இரயில் சேவை தொடங்கியிருப்பது என்பது எதிர்காலத்தில் சேவைகளை அதிகம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பது என் எண்ணம். மக்கள் கொந்தளிப்பது என்பதைவிட ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் தேனி மாவட்ட மக்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

பொ.முருகன் (நேசம் அரசு சாரா நிறுவனம்) டி.கள்ளிப்பட்டி : தேனி வரை தொடங்கப்பட்டுள்ள இரயில்சேவை மதுரை மக்கள் பயன்அடையும் வகையில்தான் உள்ளது. தேனி மக்கள் பயன்படும் வகையில் அமைக்கவேண்டும். இரயில் சேவை பாசஞ்சர் என்ற முறையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் டிக்கெட் விரைவு வண்டிகளுக்கு உள்ள தொகை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தேனி இடையே ரயில் கட்டண விவரம்: மதுரை-வடபழஞ்சி ரூ.30. மதுரை-உசிலம்பட்டி ரூ.30. மதுரை – ஆண்டிபட்டி ரூ.35 மதுரை-தேனி ரூ.45. மதுரை-தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது என்றாலும் பாஞ்சர் கட்டண இரயிலுக்கான தொகை நிர்ணயம் செய்யப்பட்டால் கட்டணம் இன்னமும் குறையும்.

இரயில் சேவைகளின் எண்ணிக் கை ஒருமுறையிலிருந்து மூன்று முறையாக அதிகரிக்கவேண்டும். இதனால் தேனி மாவட்ட மக்கள் பெருமளவில் பயனடைவார்கள். இப்போது தேனி மாவட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற கொந்தளிப்பு மக்களிடம் உள்ளது. தேனியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு விரைவு தொடர் வண்டி இயக்கப்பட வேண்டும். தேனியிலிருந்து புறப்படும் இரயிலுக்கு மதுரையில் இணைப்பு இரயில்கள் வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் மீது இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

சு.சி.பொன்முடி, மதிமுக மாவட்ட துணைச்செயலர், தேனி மாவட்டம் : போடியிலிருந்து ஏலக்காய்,கிராம்பு போன்ற மணமூட்டும் பொருள்களை இரயில் மூலம் மதுரை வரை கொண்டு செல்லவே ஆங்கிலேயர் காலத்தில் போடியிலிருந்து இரயில்சேவை தொடங்கப்பட்டது.

இரயிலில் கொண்டு செல்லப்பட்ட மணமூட்டும் பொருள்கள் திருட்டுபோயின. இதனால் மதுரை மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து போடி இரயில் போக்குவரத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயணத்திற்கு மட்டுமே பயன்பட்டது. இதனால் இரயில் சேவையை நடத்துவதில் நிதி சிக்கல்கள் ஏற்பட்டன. இதனையெல்லாம் தாண்டி, இப்போது தேனியில் தொடங்கப்பட்ட இரயில்சேவை வரவேற்புக்குரியது.

இரயில்சேவை மதுரையிலிருந்து தொடங்கப்படாமல் தேனியிலிருந்து தொடங்கப்படவேண்டும். மதுரையிலிருந்து புறப்படும் விரைவு தொடர்வண்டி ஒன்று தேனி வரை வாரம் 3 முறை நீட்டிக்கப்படவுள்ளதாக தென்னக இரயில்வே கூறியுள்ளது. பயண நேரம் அதிகம் உள்ளது. அதை குறைக்க இரயில்வே முன்வரவேண்டும். தேனி இரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவர் என்று ஒருவரை பணியமர்த்தாமல் இரயில்வே நிலைய அதிகாரியே கொடிகாட்டுவது டிக்கெட் கொடுப்பது என்பது தவிர்க்கப்படவேண்டும்.

கடந்த வாரத்தில் மாலை தேனியில் புறப்பட்ட இரயிலில் பயணம் செய்ய பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. ஆனால் இரயில் நேரத்திற்குப் புறப்பட்டுவிட்டது. இதுபோன்ற குளறுபடிகளை இரயில்வே நிர்வாகம் தவிர்க்கவேண்டும். எதிர்காலத்தில் தேனி மாவட்டத்திற்கு இரயில்சேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். வடமாநில அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல இரயில் மூலம் தேனி வந்தால் குமுளி, வண்டிபெரியாறு வழியாக 125 கி.மீ. சபரிமலையை மிக எளிதாக அடையமுடியும். மேலும், திண்டுக்கலிருந்து தேனி, குமுளி, வண்டிபெரியாறு வழியாக சபரிமலைக்கு இரயில்போக்குவரத்து தொடங்க ஆய்வுபூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேனி மாவட்டம் இரயில்சேவைகளை அதிகம் பெறும் வாய்ப்பு உள்ளது. இரயில்வே நிர்வாகம் மக்களின் உணர்வை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.