ஆக்ரமிப்பை அகற்றாத அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல்
ஆக்ரமிப்பை அகற்றாத அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி யில் உள்ள இருவேறு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பொதுவானஇடத்தை, ஒரு தரப்பினர் மட்டும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, அடுத்த சமூகத்தை சேர்ந்தவர்களை அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததால், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதுசம்பந்தமாக மனு கொடுத்தனர். மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் துறையூர் வட்டாட்சியர் ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆக்ரமிப்பு செய்துள்ள இடத்தின் ஒரு பகுதியை மற்றும் அகற்றிவிட்டு வருவாய்த்துறையினர் சென்றுவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாங்கள் குறிப்பிட்ட பகுதியை அகற்றாமல் ஒரு பகுதியை மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றி சென்றுள்ளனர் என்றும், இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை முழுமையாக அகற்றி தரவேண்டும் என்று கூறி செங்காட்டுப்பட்டி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். இல்லையெனில் நாளை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.