சாதிய கலவரங்களின ஆணைய அறிக்கை லீக்… அலறுவது ஏனோ….
சங்கடப்பட்டுதான் போனேன் மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை ஆணையத்தின் முக்கிய பகுதிகளை பிரண்ட்லைன் இதழில் வெளியிட்டதற்கு. எனது 40 வருட மீடியா அனுபவத்தில் எத்தனையோ சென்சிடிவ் விஷயங்களை அரசாங்கங்கள் மறைக்க முற்பட்டதை, மறைத்ததை எனது அறம் சார்ந்த கடமை என்று நம்பி வெளிக் கொணர்ந்தேன்.
எனது பல ரிப்போர்ட்கள் மீது மேல் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிடப்பில் போடப்பட்ட மற்ற ஆணைய அறிக்கைகளையும் ரிஸ்க் எடுத்துதான் வெளிக் கொணர்ந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவேணும் நியா யம் கிடைக்க அவை வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையில்.
நடுநாலுமூலக்கிணறு, கொடியன்குளம், தூத்துக்குடி, குண்டுப்பட்டி, கோவில்பட்டி தெக்கூர், மதுரை திடீர்நகர், விருதுநகர், இராஜபாளையம் போன்ற தென் மாவட்ட சாதிய மற்றும் அதைச் சார்ந்த கலவரங்களில் காவல்துறையின் அனுகுமுறைகளை நேரில் பார்த்து, பகுத்தறிந்து எழுதியிருக்கிறேன். எத்தனையோ உயிர் இழப்புகளை கண்கூடாக கண்டுள்ளேன்.
அன்றைய காவல் துறை சற்று ஓரளவிற்கு நிதானத்துடன்தான் இந்த மாதிரி சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை கையாண்டார்கள். துப்பாக்கி சூடு அரிது. உயிர் இழப்புகளும் குறைவு. பொறுப்பு கூறல் ஓரளவிற்கு இருந்தது. காவலர் ஒருவரை ஒரு சாதிய கலவரத்தில் பெரிய கும்பலே அடித்தாலும், பொது மக்கள் மத்தியில் உயிர் இழப்பு இல்லை.
காவல் துறையின் காட்டுமிராண்டித்தமான செயல்களில் ஒன்று தாமிரபரணி அவலம். ஆனால் துப்பாக்கி பிரயோகம் இல்லாமல் என்று நினைக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது பழிவாங்கும் செயலாக இருக்கிறது. ஒரே நாளில் 13 உயிர் சேதங்கள் என்பது நினைக்க முடியாத பயங்கரம்.
இதற்கு ஆணைய அறிக்கை தேவையில்லை. 2018 ஜுன் பிரண்ட்லைன் பத்திரிகையில் எனது கட்டுரையை படித்திருந்தால் போதும். மீடியா ரிப்போர்ட்களுக்கு சட்டப்படி செல்லு படியாகும் நிலை பெரும்பாலும் கிடைப்பதில்லை.
ஆகையால் தெரிந்தே எடுத்து ஒரு வருட உழைப்பிற்கு பின் கிடைத்துதான் இந்த ஆணைய அறிக்கையின் பகுதி. அதில் முக்கிய தகவலை படித்தவுடன் வெளிக்கொணர்வது ஊடகவியளாரான எனது தார்மீக கடமையாய் கருதினேன்.
ஆனால் சில ஊடகத்துறையினரின் அணுகு முறை மிகவும் மன வேதனையை அளித்துள்ளது. ஒரு டிவி விவாதத்தில் பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்ட மிக முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல் இதை நம்ப முடியுமா என்றும், யார் கசிய விட்டது என்றும், அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரே கூச்சல். கிஞ்சித்தும் அறிவு, அறம் இரண்டும் இல்லை. நம்பத்தன்மை இல்லை என்றால் பேச வரக் கூடாது.
ஆமாம் இருக்கட்டும். நான்தான் இளவரசன் ஆணைய அறிக்கை, சகாயம் மணல் கொள்ளை அறிக்கை கூட வெளியே கொண்டுவந்தேன். இரண்டும் இன்று வரை அரசாங்கம் வெளியிடவில்லை. மற்றும் குண்டுப்பட்டி மற்றும் வெங்கடாசலம் ஆணைய அறிக்கைகளையும் நான்தான் வெளிக் கொணர்ந்தேன்.
ஏன், எல்லாவற்றிற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டியதுதானே? இது பத்திரிகைத் துறைக்கே அவமானம்…
-இளங்கோவன் இராஜசேகரன்