சமையல் கலைஞர் டூ சினிமா கவிஞர்! தன்னம்பிக்கை இளைஞர்
சமையல் கலைஞர் டூ சினிமா கவிஞர்! தன்னம்பிக்கை இளைஞர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஒருவர், சினிமாவில் பாட்டெழுத வேண்டும், கவிப்பேரரசு அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு சிற்றரசு அளவுக்காவது ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம், ஆசையுடன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோலிவுட்டிற்கு வந்திறங்கினார். கவிக்கனவு அவரைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருந்தாலும் வயிற்றுக்கு உணவு முக்கியம் என்பதை உணர்ந்து ஆரம்பத்தில் தள்ளு வண்டிக் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே பாட்டெழுத சான்ஸ் தேடி அலைந்து கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபவம் கைகொடுக்க, தேர்ந்த சமையல் கலைஞராகிவிட்டார்,
’கவிஞர் கிச்சன்’ என்ற ஓட்டலையும் நடத்தி, பத்து பேருக்கு வேலையும் கொடுக்கிறார் இப்போது. அவரின் நம்பிக்கை தளராத முயற்சியால் இப்போது கார்த்திக் ராஜா இசையில் ஒரு படத்திற்கு பாட்டெழுதும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு வித்தியா சத் தகவலைக் கேள்வி ப்பட்டு, சென்னை மேற்கு கே.கே.நகரில் உள்ள ‘கவிஞர் கிச்சனில்’ ஜெயங்கொண்டானை சந்தித்து உரையாடி னோம். “என்னோட இயற்பெயர் மகேஷ். நான் சென்னைக்கு வந்த புதிதில் சென்னை, பெசன்ட் நகர் பீச்சோரம் இருந்த தள்ளுவண்டிக்கடையில் தட்டு கழுவினேன். அப்ப அஜீத் படமான ‘சிட்டிசன்’ ஷூட்டிங் நடந்துச்சு. இரவில் தட்டு கழுவுதல், பகலில் பாட்டு சான்ஸ் தேடுதல்னு வண்டி ஓடிக்கிட்டிருந்துச்சு. தள்ளுவண்டி அனுபவத்தால் சென்னை கே.கே.நகரில் இருந்த உணவகத்தில் மாஸ்டர் வேலை பார்த்தேன். அந்த ஓட்டலின் ஓனரால தொடர்ந்து உணவகத்தை நடத்த முடியாததால், 2009-ல் நானே அந்த ஓட்டலை நடத்த ஆரம்பிச்சேன்.

அப்ப தான் ‘வேடப்பன்’ என்ற சின்ன பட்ஜெட் படத்தில் பாட்டெழுத சான்ஸ் கிடைச்சுச்சு. தொடர்ந்து சின்னச்சின்ன படங்கள் தான் கிடைத்தன. நமக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும், சென்னையில் வாழ்ந்தால் நமது சுவடு ஆழமாகப் பதியணும் என்ற லட்சியத்துடன், விஜய் ஆண்டனி, ஜிப்ரான், சத்யா, பரணி போன்ற மியூசிக் டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு அலைஞ்சேன். சினிமா சான்ஸ் தேடுவதில் தீவிரமா இருந்தாலும் ஓட்டலையும் பராமரித்து ஐந்தாறு பேருக்கு வேலையும் கொடுத்தேன். கவிஞர் கிச்சன் என்ற பெயருக்காகவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது.
நடிகர் கஞ்சா கருப்புவை ஒருமுறை நேரில் சந்தித்து என்னைப் பற்றிச் சொல்லியிருந்ததால், அவரும் எனது ஓட்டலுக்கு வர ஆரம்பித்தார். நான் நடத்தி வந்த ஓட்டலுக்கு எதிரே டெம்பிள் வியூ அபார்ட்மெண்டில் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் இருந்ததால் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவரின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் சில நாட்கள் வேலை பார்த்தேன். 2020-ல் கொரோனாவால் ஓட்டலை நடத்த முடியாமல் தடை ஏற்பட்டு, அந்தத் தடையையும் எதிர்கொண்டு, இப்போது மேற்கு கே.கே.நகரில் கவிஞர் கிச்சனை நடத்தி வருகிறேன். வறுமையில் வாடும் உதவி இயக்குனர்கள் பலருக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து பசியாற்றி வருகிறேன்.
அதே போல் தியேட்டரில் படம் பார்த்த டிக்கெட்டுடன் கவிஞர் கிச்சனுக்கு வந்தால் பில்லில் 10% தள்ளுபடி. செய்கிறேன். சமீபத்தில் தான் ஸ்ரீகாந்த், -ஷாம் நடிக்கும் ‘ட்ரெய்னர்’ படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது. என்றாவது ஒரு நாள்னு கூட சொல்ல மாட்டேன். வெகுசீக்கிரமே பொழுது புலரும் வெற்றி கண்ணுக்கு புலப்படும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என மனதில் உறுதியுடன் நம்மிடம் பேசினார் கவிஞர் ஜெயங்கொண்டான்.