ஏலம் மூலம் வருமானம் 5 1/2 கோடி யாருக்கு செங்கோல் இந்து மக்கள் கட்சி ரெக்கமண்ட்?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோயில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், துண்டு உள்ளிட்ட வஸ்திரங்கள் சாத்தப்படுவது வழக்கம். அவ்வாறு சாற்றப்படும் வேட்டி, சேலை, மற்றும் துண்டுகளை கோயில் நிர்வாகம் சார்பாக வாரம் ஒரு முறை கோயில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டு வருமானம் ஈட்டப்படுகிறது.
இந்த விற்பனை மூலம் கிடைத்துள்ள வருமானம் விவரம் குறித்து மதுரை சமூக ஆர்வலர் மருதுபாண்டி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில் கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586க்கு விற்பனை செய்துள்ளோம். இந்த ஏலத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த ரொக்க பணம் கோயிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்எல்ஏவுக்கு நன்றி
இது பற்றி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணனிடம் அங்குசம் இதழ் சார்பில் கேட்டபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு போதுமான கழிப்பறை கட்டிட வசதி வேண்டும் என எங்களது கட்சியின் பல நாள் கோரிக்கைக்கு தற்போது கீழச்சித்திரை வீதி பூங்கா அருகில் எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து கழிப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய மத்திய தொகுதி எம்எல்ஏக்கு எங்கள் கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
மருதுவுக்கு நன்றி
அதேபோல் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் அணிவிக்கும் ஆடைகளை ஏலம் விட்டதின் மூலமாக ரூபாய் ஐந்தரை கோடிக்கு மேல் வருமானம் வந்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்டறிந்து உலகிற்கு தெரியப்படுத்திய சமூக ஆர்வலர் மருதுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சித்திரை பெருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் திரளான பக்தர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர், மருத்துவ வசதி என போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தரிசனத்திற்கு வரும் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவு தரிசனத்திற்க்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
யாருக்கு செங்கோல்?
மதுரை மீனா-ட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகத்தன்று எந்தவொரு நன்மையும் செய்யாமல் கடந்த 15 ஆண்டாக அதிகாரத்தால் தக்கராக இருக்கும் கருமுத்து கண்ணனுக்கு எக்காரணத்தை கொண்டும் செங்கோல் வழங்கக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை நிர்வாகம் செய்த மதுரை ஆதீனத்திடம் செங்கோல் வழங்க வேண்டும். இந்த கோரிக்கை மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது என்றார்
– ஷாகுல், படங்கள் ஆனந்த்