தனியா டீ ஆத்தலே… தொண்டர்களை ஒண்ணு சேர்க்கிறேன்…
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை கைப்பற்ற இனி சட்டரீதியாக எதிர்கொள்வது சிரமம் என்று நினைத்தாரோ என்னவோ, ஜெயலலிதா, மோடிக்கு, திருப்புனை ஏற்படுத்திய திருச்சி ஜி.கார்னர் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட முடிவு செய்து, வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டியிடம் மாநாடு வேலைகளை ஒப்படைத்தார்.
ஆட்களை திரட்டி கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமோ என்று நினைத்தார்களோ என்னவோ, முப்பெரும் விழாவாக, மாநில மாநாடு என்று இருந்து, மண்டல மாநாடு என்று மாறி அடுத்து அரசியல் மாநாடு என்றாகி, கடைசியில் புரட்சி மாநாடாக மாறியது, வாகனம் நிறுத்துவதற்கு எந்த இடத்தையும் ஒதுக்காத நிலையில் பைபாஸ் சாலையில் நடுநடுவே நிறுத்தி, பெரிய டிராபிக்ஜாம் ஏற்படுத்தி பெரிய கூட்டம் கூடியதுப்போல் காண்பித்தது தான் பெரிய சாதனை.
ஜி.கார்னர் திடல் முழுவதும், சேர் போட்டு இருந்தாலே, 10,000 பேருக்கு மேல் போட முடியாது என்பது, கடந்த கால மாநாடு வரலாறு, மேடையில் லட்சகணக்கில் திரண்ட தொண்டர்கள், என்று முழங்கினாலும், தமிழக உளவுத்துறை 15,000 முதல் 20,000 என்கிறார்கள். அதுவும், ஓ.பி.எஸ். பேச்சை ஆரம்பித்தவுடன் கூட்டம் கலைய ஆரம்பித்தது, அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இது வரை இல்லாத அளவிற்கு எடப்பாடியை மிகக்கடுமையாக வசைபாடி பேசினார்.
தனியாக டீ ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்றும் ஒரு ஜெயக்குமார் லூசு சொல்லுது, இங்கே திரண்டு இருக்கும் தொண்டர்களை பாருங்கள், இனி தொண்டர்களை ஒன்று சேர்ப்பது தான் என் வேலை, அதை நிறைவேற்ற எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் மடமடவென்று பேசி தள்ளினார்.
மதுரையில் அதிமுக மாநாடு நடத்த எடப்பாடி முடிவெடுத்த வேளையில், சேலத்தில் தனது அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். திருச்சியைப் போல சேலத்திலும் இந்த சொதப்பல் தொடருமா?