சாலை விபத்தில் இறந்த
டிவி சீரியல் இயக்குநர்!
ஸ்கூட்டியில் இருந்த பிஸ்டல்!!
சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த டிவி சீரியல் இயக்குநர் பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் அவரது ஸ்கூட்டியில் இருக்கையின் அடியில் உள்ள பெட்டியில் இருந்த கைத் துப்பாக்கி (பிஸ்டல்) வடிவிலான பொருளை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநாகேஸ்வரம் – சன்னாபுரம் பிரிவு சாலையில் மே 13-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் SBI ATM அருகேயுள்ள வேகத் தடையை கடந்து செல்ல முயல்கையில் தடுமாறி கீழே விழுந்தார்.
இச்சம்பவத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த திருநீலக்குடி கோவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடிபோதையில் விழுந்து , ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.
இவ்விபத்து தொடர்பாக திருநீலக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் சிக்கி சாலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விஜிபி நகரைச் சேர்ந்த 50 வயதுடைய ராஜேந்திர சோழன் என்பதும், அவர் டிவி சீரியல் இயக்குநர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
டிவி சீரியல் இயக்குநரான ராஜேந்திர சோழன் தற்போது இயக்கவுள்ள தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான லொகேஷனை தேர்வு செய்ய திருநள்ளாறு வந்துள்ளார். அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணத்தில் உள்ள தனது நண்பர்களைப் பார்க்க ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது இவ் விபத்து நடைபெற்றுள்ளது.
குடிபோதையில் இருந்த இயக்குநர் ராஜேந்திர சோழன் சாலையில் இருந்த வேகத்தடையை கடக்க முயன்றபோது தானே தடுமாறி தலைகுப்புற விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்கின்றனர் போலீஸார்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இயக்குநர் ராஜேந்திர சோழன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இறந்தார்.
இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராஜேந்திர சோழனின் ஸ்கூட்டியில் இருக்கைக்கு அடியில் இருந்த பெட்டியை உள்ளுர் மெக்கானிக் உதவியுடன் இன்று காலை திறந்து பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அதற்கு காரணம், அப்பெட்டிக்குள் பிஸ்டல் வடிவிலான பொருள் ஒன்று இருந்தது.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறை உயரதிகாரிகள் அங்கே விரைந்து சென்று பிஸ்டல் வடிவிலான பொருளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைப்பற்றப்பட்டது பிஸ்டல் என்று ஒரு பிரிவினரும், இல்லையில்லை அது பிஸ்டல் வடிவிலான சிகரெட் லைட்டர் என்று மற்றொரு பிரிவினரும் தெரிவித்தனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதை நாங்கள் எஃப்ஐஆர்-ல காட்டவில்லை. நீங்க தஞ்சாவூரில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள்,” எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.
இயக்குநர் ராஜேந்திர சோழனின் ஸ்கூட்டியில் இருந்து கைப்பற்றப்பட்டது பிஸ்டலா அல்லது பிஸ்டல் வடிவிலான சிகரெட் லைட்டரா என்பதை அறிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேலை அவரது மொபைலில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
இது குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டு அவருக்கு வாட்ஸ்ஆப்ல மெசேஜ் அனுப்பியும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை.