‘ஓசியாக’ கிடைத்த மதுவை குடிக்காததால் உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
‘ஓசியாக’ கிடைத்த
மதுவை குடிக்காததால்
உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மது வாங்கி குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களில் ஒருவரான குட்டி விவேக் என்பவர் தனக்கு ‘ஓசியாக’ கொடுத்த மதுவை உடனடியாக குடிக்காமல் ‘வேலையை முடிச்சிட்டு குடிக்கலாம்’ எனக் கருதி பாதுகாத்து வைத்திருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்..
‘அவருக்கு ஆயுசு கெட்டி’ எனக்கூறி சிலாகிக்கின்றனர் போலீஸார்.
கீழ அலங்கம் பகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையையொட்டி அமைந்துள்ள மதுக்கூடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக கள்ளத்தனமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த கீழவாசல் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் தெருவைச் சேர்ந்த குட்டி விவேக் (36) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடித்துவிட்டு மீன் மார்க்கெட்டில் வாயில் நுரை தள்ள மயங்கிக் கிடந்த குப்புசாமியை எதேர்ச்சையாக அங்கே மீன் வாங்க வந்த அவரது மனைவி ஆட்டோவில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக இறந்தார்.
சிறிது நேரம் கழித்து அதே மதுக்கூடத்தில் மது அருந்திவிட்டு வெளியே வந்த குட்டி விவேக் மதுக்கூட வாசலிலேயே மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும் அவர் சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 2.45 மணியளவில் இறந்தார்.
அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் வைரலாகி பெரும் பரபரப்பானது.
இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் உடலுறுப்புகள் ஆய்வுக்காக தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி மெயின்ரோட்டில் செயல்பட்டு வரும் மண்டல தடய அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் மதுக்கூடத்திற்கு ஒரே நுழைவு வாயில் என்பதால் அதை வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் முன்னிலையில் போலீஸார் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த இருவரும் குடித்த மதுவில் சயனைடு என்ற விஷம் கலக்கப்பட்டிருப்பதாக தடய அறிவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இரவு 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.
இது கொலையா அல்லது தற்கொலையா, அதற்கான மோட்டிவ் என்ன, சயனைடு விஷம் எப்படி கிடைத்தது என்பன போன்ற விபரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மதுக்கூட உரிமையாளரான காங்கிரஸ் பிரமுகர் பழனிவேல், பணியாளர் காமராஜ் ஆகியோரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களை தூக்கி வந்து அவர்களிடம் அன்றைய தினம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார்.
மது குடித்து உயிரிழந்த தொழிலாளர்கள் குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய இருவரும் ரெகுலர் கஷ்டமர்கள் என்பதும், தினமும் அவ்வப்போது வந்து ஒரு கட்டிங் போட்டுவிட்டு மீன் மார்க்கெட்டிற்கு சென்று பணியை மேற்கொண்டு வந்துள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு, உயிரிழந்த குட்டி விவேக் மதுக் கூடத்தில் பணிபுரிந்துவந்த சரவணன் என்ற தூய்மைப் பணியாளருக்கு ஒரு ‘கட்டிங்’ ஊத்திக் கொடுத்த முக்கிய தகவல் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய இருவரும் ரெகுலர் கஷ்டமர்கள் என்பதால் மதுக் கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரிடமும் அவ்விருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
அந்த வகையில், சம்பவத்தன்று அவ்விருவரும் மதுக் கூடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த சரவணன் என்ற தூய்மைப் பணியாளருக்கு குட்டி விவேக் நட்பு ரீதியாக ஒரு ‘கட்டிங்’ ஊற்றிக் கொடுத்துள்ளார்.
கீழ வாசல் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரான சரவணன் தினக்கூலி அடிப்படையில் அம் மதுக்கூடத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அம் மதுக்கூடத்தில் வாடிக்கையாளர்கள் வீசியெறியும் காலி மது பாட்டில்கள், டம்ளர்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதுதான் அவரது பணி. இதற்காக அவருக்கு தினமும் ரூ.400 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
துப்புரவு வேலையை முடித்த பின்னர் சாப்பிடலாம் எனக் கருதி தனக்கு அன்பாக கொடுக்கப்பட்ட ‘கட்டிங்’ மதுபானத்தை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி அதை மூடி வைத்துவிட்டு தனது பணியை தொடர்ந்துள்ளார் சரவணன். அவரது உணவு பொட்டலமும் அதனருகே இருந்துள்ளது.
இந்நிலையில் தான், அவரது நண்பர்களான குப்புசாமியும், குட்டி விவேக்கும் உயிரிந்த செய்தி வைரலாகி, அதைத் தொடர்ந்து மதுக்கடையும் மதுக் கூடமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அங்கிருந்து ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தூய்மைப் பணியாளரான சரவணனும் தனக்கு இலவசமாக கிடைத்த ‘கட்டிங்’ மதுபானம் மற்றும் தனது உணவுப் பொட்டலம் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு தனது வீட்டிற்கு ஓடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட மதுக்கூடத்தை திங்கள்கிழமை காலை திறந்து அங்கே பிளாஸ்டிக் பாட்டிலில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருந்த ‘கட்டிங்’ மதுபானத்தைக் கைப்பற்றி தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் போலீஸார்.
அதோடு, சரவணனை தேடிக் கண்டுபிடித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தில் தடய அறிவியல் ஆய்வுத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
அங்கேயிருந்த மது பாட்டில்கள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருள்களை ஆய்வு செய்ததோடு அங்கே பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இதனால் மீண்டும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.