குறுவை பாசனத்திற்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
குறுவை பாசனத்திற்கு
கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு:
டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் நெற் களஞ்சியம் எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசன வதிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கரூர், திருச்சி வழியாக வியாழக்கிழமை இரவு கல்லணை வந்தடைந்தது.
இதையடுத்து டெல்டா பாசனத்துக்கான இன்று காலை 9.30 மணியளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்), ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநிலங்கவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர்கள் தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), பிரதீப் குமார் (திருச்சி), சாருஸ்ரீ (திருவாரூர்), ஜானி டாம் வர்கீஸ் (நாகை), மகாபாரதி (மயிலாடுதுறை), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு மலர்களைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ஆகிய டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகபட்சமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,08,951 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு விவசாயிகளை அமைச்சர் நேரு கேட்டுக் கொண்டார்.