ஓட்டுநர் ஷர்மிளாவும் ஓவரா பண்ணும் சோசியல் மீடியாவும் !
பெண் ஓட்டுநர் என்ற பெருமிதத்தை தாண்டி, ’பிரபலம்’ தந்த போதைதான் ஒன்றுமில்லாத விசயத்தை இன்று பெரியதாக்கியிருக்கிறது.
ஓட்டுநர் ஷர்மிளாவும் ஓவரா பண்ணும் சோசியல் மீடியாவும் !
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார், மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன். கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக இதனை அவர் வழங்கியிருக்கிறார். ”ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல.
பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. … ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்கிறார், கமலஹாசன்.
ஓட்டுநர் ஷர்மிளா ஆதரிக்கப்பட வேண்டியவர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சோசியல் மீடியா என்ற பெயரில் வரைமுறையின்றி ’வைரலாக்கப்படும்’ விதம்தான் அருவெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், சரக்கு லாரியை வைத்துக்கொண்டு கணவன் மனைவியுமாக தொலைதூரங்களுக்கு வாகனத்தை இயக்கும் பெண்கள் நிறையப் பேர் இருக்கவே செய்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி. ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரும் அவர்தான். அவர் இயக்கியது டவுன் பஸ் அல்ல; தொலைதூர விரைவுப் பேருந்துகளை. எவ்வித விபத்துக்களும் ஏற்படுத்தாமல் 24 ஆண்டு கால பணியை நிறைவு செய்தவர்.
சவால் நிறைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி, என ஷர்மிளாவுக்கு முன்பாகவே, பொதுப்போக்குவரத்தை கனரக வாகனத்தை இயக்கிய பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் வரிசையில், கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்தை இயக்கியிருக்கிறார் ஷர்மிளா. அவ்வளவுதான், அதற்குமேல் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு சாகசம் எதையும் அவர் செய்துவிடவில்லை. மாறாக, இதன்வழியே தனக்கு கிடைக்கப்பெற்ற பொது அங்கீகாரத்தை, கேடான முறையில் தனது சுய விளம்பரத்திற்காக அவர் பயன்படுத்திக்கொண்டார் என்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
வாகனத்தை இயக்கிக்கொண்டே ரீல்ஸ் செய்து, அதனை தனது தனிப்பட்ட சோசியல் மீடியாவில் பகிர்வது தொடங்கி, அவர் உறவினர் வீட்டு விசேங்ஷகளுக்கு சென்று வருவது வரையில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். அதனை முண்டியடித்துக்கொண்டு காண ஓர் கூட்டம்.
”விளம்பரத்திற்காக பணிபுரிவது என்பது நம்மை முன்னேற்றாது. நாம் பணிபுரியும் தரத்தை வைத்து மற்றவர்கள் நமக்கு விளம்பரம் செய்வார்கள். கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா விவகாரத்தை பார்க்கும்போது, அவர் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.” என மாலை இதழ் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார் ஓட்டுநர் வசந்தகுமாரி.
பெண் ஓட்டுநர் என்ற பெருமிதத்தை தாண்டி, ’பிரபலம்’ தந்த போதைதான் ஒன்றுமில்லாத விசயத்தை இன்று பெரியதாக்கியிருக்கிறது. ”தன்னை காண வந்த கனிமொழியிடம் அதுவும் எம்.பி.யிடம் எப்படி டிக்கட் காசு கேட்கலாம்?” என்பதுதான் பிரச்சினைக்கான தொடக்கம் என்கிறார்கள். ”இதற்கு நியாயம் கேட்டு, வழக்கமான ட்ரிப்பைக்கூட முடிக்காமல் நேரே ஓனர் வீட்டுக்கு பேருந்தை விட்டிருக்கிறார்.” கடைசியில், கனிமொழியால்தான் பிரச்சினை என்று முடித்துவிட்டார்கள்.
சோசியல் மீடியா மட்டுமல்ல; முன்னணி ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சிறு பிள்ளைகள் சோப்பு நுரையை வைத்துக்கொண்டு ஊதிக்காட்டும் நீர்க்குமிழிகளைப்போல, விதம்விதமாய் போட்டிபோட்டுக்கொண்டு ஊதிக்காட்டுகிறார்கள். ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள். ஷர்மிளா விவகாரம் அன்றைய நாள் முழுக்க பரபரப்பு செய்தியாக்கினார்கள். இதோ, கமல் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அடுத்து, ஒன்றன்பின் ஒன்றாய் படையெடுக்க ஒரு கூட்டம் நிச்சயம் காத்திருக்கும், கையில் ’செக்’ கோடு!
– இளங்கதிர்
மேலும் செய்திகள் படிக்க:
* ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!
* ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் மூவர் பலி : ஆற்றில் இறங்க சொன்ன A1 பட்டருக்கு முன் ஜாமீன் !
* அங்குசம் யூடியூப் வீடியோக்கள் !