ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

0

ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

தங்களது நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்திருந்த டெபாசிட்தாரர்களை பணத்தை திருப்பி தராமல் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கும்பபோணம் ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், தனிப்படை எஸ்.ஐ கண்ணன் ஆகிய இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2 dhanalakshmi joseph

இதற்கு காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கில், உண்மையான குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்றுவதற்காக இவ்விருவரும் ‘பலிகடா’ ஆக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன்.

இவ்விருவரும் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த செல்வந்தர்கள், ஓய்வூதியதாரர்கள், வெளிநாடு சென்று பணம் சம்பாதித்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் டெபாசிட் செய்திருந்தனர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை தங்களது நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து அவற்றில் கிடைத்த லாபத்தில்தான், டெபாசிட்தாரர்களுக்கு வட்டியாக மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை ஹெலிகாப்டர் சகோதரர்கள் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ‘லாக் டவுன்’ அறிவிக்கப்பட்டதால், சிறு கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்கள் வரை எந்தவொரு பாரபட்சமும் இன்றி அனைத்து தொழில்களும் பாதிப்புக்குள்ளாயின.

இச்சூழ்நிலையில், வாக்குறுதி அளித்தபடி டெபாசிட்தாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த வட்டித் தொகையை தர முடியாமல் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த டெபாசிட்தாரர்கள் தங்களது டெபாசிட் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

தங்களது நிதி நிறுவனத்தில் வட்டிக்கு பணம் பெற்றிருந்தவர்கள், ஏலச் சீட்டு எடுத்தவர்கள் என அனைவரும் கரோனா லாக் டவுன் காரணமாக வருமானம் இல்லாததைக் காரணம் காட்டி பணத்தை திருப்பிச் செலுத்தாததால்  ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், டெபாசிட் பணத்தை திருப்பித் தராமல் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்துவிட்டதாக டெபாசிட்தாரர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி கடந்த 2021-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் அத் தம்பதியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகளின் தலையீட்டின்பேரில்,  மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் வழக்கறிஞர் ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் கூடுதல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் அப்போதைய கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் அந்த பகீர் தகவலை ஹெலிகாப்டர் சகோதரர்கள் தெரிவித்தனர்.

அதாவது, உடல்நலக் குறைவு ஏற்படடு அவதிப்பட்டுவந்த தனது தாயாருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக எம்.ஆர்.கணேஷ் கடந்த 17.04.2021 அன்று கோயம்புத்தூரில் உள்ள MK Residency என்ற ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்துள்ளார்.

அன்று இரவு 10.30 மணியளவில் போலீஸ் படையுடன் அங்கே வந்த தனிப்படை எஸ்.ஐ கண்ணன்,  கடனாக வாங்கிய ரூ.2.50 கோடியை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ரகுபிரசாத் என்பவரும், தங்களது நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கான கட்டணத் தொகையான ரூ.38 லட்சம் தராமல் ஏமாற்றியதாக தினமலர் செய்தியாளர் ஸ்ரீனிவாசன் என்பவரும் எம்.ஆர்.கணேஷ் மீது எஸ்.பி.யிடம் புகார் மனுக்கள் கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மறுநாள் ஏப்ரல் 18 அன்று, தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்,  தனிப்படை எஸ்.ஐ கண்ணன் ஆகிய இருவரும் காலை 8 மணியளவில் எம்.ஆர்.கணேஷை  மீண்டும் சந்தித்து,  இவ்விரு புகார் மனுக்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.1 கோடியும், இனிமேல் வரும் புகார் மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.6 கோடி தர வேண்டும் என்றும், அட்வான்ஸாக ரூ.10 லட்சம் தருமாறும் அப்போதைய தஞ்சை மாவட்ட எஸ்.பி. கேட்பதாகக் கூறியுள்ளனர்.

தற்போது தன்னிடம் ரூ.6 லட்சம் மட்டுமே வங்கி கணக்கில் இருப்பு இருப்பதாகவும், மீதி பணம் புரட்ட 5 நாள் அவகாசம் தருமாறும் எம்.ஆர்.கணேஷ் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து,  வெளியே சென்று யாரிடமோ போனில் பேசிவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பிய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்,  எஸ்.பி.யை தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  ரூ.5 லட்சத்தை மறுநாள் காலைக்குள் தருமாறும், மீதி ரூ.5 லட்சத்தை ஏப்ரல் 27-ம் தேதிக்குள் தருமாறும் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

4 bismi svs
ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!
ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

 

அதனடிப்படையில், ஸ்ரீதரன் என்ற தனது ஊழியர் ஒருவர் மூலம் வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கச் செய்து அதை தனது அலுவலக பொது மேலாளர் ஸ்ரீகாந்தன் என்பவர் மூலம் கொடுத்தனுப்பி,  இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கூறியபடி, தஞ்சாவூர் எஸ்.பி. பங்களா எதிர்புறம் உள்ள தனியார் ஓட்டல் அருகே செந்தில் என்ற போலீஸ்காரரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதேபோல,  மீதி ரூ.5 லட்சத்தை அதே ஓட்டல் அருகே ஏப்ரல் 29-ம் தேதி கொடுத்ததாகவும் எம்.ஆர்.கணேஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தைக் கேட்ட விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கணேஷ் மற்றும் அவரது சகோதரர் சாமிநாதன் ஆகிய இருவரின் வாக்குமூலங்களைப் போலீஸார் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விசாரித்தபோது, தன் மீதான குற்றச்சாட்டை எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் மறுத்தார்.

எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய்
எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய்

 

இந்நிலையில், டிஜிபிக்கு மத்திய மண்டல ஐஜி அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், தஞ்சை மாவட்ட எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், தனிப்படை எஸ்.ஐ. கண்ணன் ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய மண்டல ஐஜி உத்தரவின்பேரில், தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸார் சோதனையிட்டபோது, கும்பகோணத்தைச் சேர்ந்த ரகுபிரசாத் அளித்திருந்த புகார் மனு அங்கிருந்த மேஜை டிராயரில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரியான தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து மதுரை பட்டாலியனுக்கு தூக்கியடிக்கப்பட்டார்.

ஆனால்,  தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே அவர் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து மீண்டும் சென்னைக்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் பெற்றுவிட்டார்.

இந்நிலையில் தான், எஸ்.பி.யின் பெயரைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், தனிப்பிரிவு எஸ்.ஐ கண்ணன் ஆகியோர் மீது தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 12.06.2023 அன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதான் தற்போது காவல்துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவி என்பது மிகவும் செல்வாக்கான பதவி. மாவட்ட எஸ்.பி.யின் நல்லது, கெட்டது என அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்தான்.

இந்நிலையில், எஸ்.பி.யின் அனுமதியின்றி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெளி மாவட்டத்துக்குச் செல்ல முடியாது.

அதோடு எஸ்.பி.யின் உத்தரவின்றி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஓய்வுபெற்ற நேர்மையான காவல்துறை அதிகாரி.

கோயம்புத்தூரில் லாட்ஜில் கணேஷை சந்தித்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் திடீரென அறையிலிருந்து வெளியே வந்து யாரிடமோ போனில் பேசிவிட்டு 10 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்குள் நுழைந்துள்ளார் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படியெனில் மறுமுனையில் பேசிய அந்த நபர் யார் என்பதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் அந்த நேர்மையான அதிகாரி.

அதோடு,  குற்றச்சாட்டுக்குள்ளான அந்த எஸ்.பி.மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவரது வீட்டில் இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு எதுவும் நடத்தவில்லை.

இதுவே அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல் டிபிஎஸ் (TPS) அதிகாரியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் கதி என்னாகியிருக்கும்?

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பார் என்கின்றனர் காவல்துறையினர்.

அதேபோல, லஞ்சமாக பெறப்பட்ட ரூ.10 லட்சம் கடைசியில் என்ன ஆனது என்பதை இதுவரை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை.

எனவே,  ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்றுவதற்காக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், தனிப்படை எஸ்.ஐ. ஆகிய இருவரையும் பலிகடா ஆக்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது என்கின்றனர் தஞ்சை மாவட்ட காவல்துறையினர்.

 

இதையும் படிங்க :

* மாஜி டிஜிபி ‘பிளேபாய்’ மகன் மீது பாய்ந்தது வழக்கு….

* விஸ்வரூபம் எடுக்கும்  நியோமேக்ஸ் நிதிநிறுவன மீதான புகார் !

* ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் மூவர் பலி : ஆற்றில் இறங்க சொன்ன A1 பட்டருக்கு முன் ஜாமீன் !

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.