காங்கிரஸ் கட்சியின் வட்டார பூத் கமிட்டியினர் ப.சிதம்பரத்தை புறக்கணித்து கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் வட்டார பூத் கமிட்டியினர் ப.சிதம்பரத்தை புறக்கணித்து கூட்டம்!
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரத்துக்குட்பட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று மானகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான கே. ஆர். ராமசாமி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், சுதர்சன ஜெய்சிம்மன், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் எனவும்,காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை முழுமையாக ஆதரிப்பது,கிராமம் கிராமமாக சென்று பூத் கமிட்டி அமைத்து தேர்தலை உந்துதலோடு எதிர்கொள்வது, போன்ற பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனிடைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவரும், முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரிலும் ப.சிதம்பரத்தின் படமும் ,பெயரும் இடம் பெறாததால் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பாலாஜி
