காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர தூய்மைப் பணியாளர்கள்!
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட
மாநகர தூய்மைப் பணியாளர்கள்!
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாநகர தூய்மைப் பணியார்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமையன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் தினக் கூலியில் ரூ.50 பிடித்தம் செய்யப்படுவதைக் கைவிட வேண்டும்.
தினக் கூலியை ரூ.550லிருந்து ரூ.650 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையின்படி உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களை நியமிக்க புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் அல்லது முகமை யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்த உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தஞ்சை மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கே வந்த மாநகர மேயர் சண். ராமநாதன் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
‘ தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகள் ஒரு வாரத்தில் தீர்க்கப்படும்’ என உறுதி அளித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வல்லம் டிஎஸ்பி நித்யா, ‘போராட்டத்தை உடனடியாக கைவிட்டு கலைந்து செல்லுங்க. இல்லையெனில் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள்’ என எச்சரித்தார். அவரது மிரட்டலுக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிய மறுத்துவிட்டனர்.
‘கைதுனு ஒன்னு இருந்தால், ஜாமீனுன்னு ஒன்னு இருக்கு. முடிஞ்சா கைது செஞ்சுக்குங்க’ எனக்கூறி தங்களது போராட்டத்தைக் தொடர்ந்தனர் தூய்மைப் பணியாளர்கள்.
இந்நிலையில், மாநகர ஆணையரின் அழைப்பின்பேரில் தூய்மைப் பணியாளர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று ஆணையர் சரவணகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களது காத்திருப்பு போராட்டத்தை பிற்பகல் 2 மணியளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் தூய்மைப் பணியாளர்கள்.