“முதலாளிகளுக்கும் சேர்த்து தான் இந்த ‘அநீதி’ திரைப்படம் – டைரக்டர் ஷங்கர் !
இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது…
“இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.”
நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி பேசியதாவது…
“‘வெயில்’ படத்திலிருந்து நான் இயக்குநர் வசந்த பாலனின் ரசிகன். வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து அவர் வழங்கி வருகிறார். ‘அநீதி’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் மிரட்டலாக இருந்தன, இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு அவையே சான்று. மிகவும் கடின உழைப்பாளரான வசந்த பாலன் தன்னுடன் பணியாற்றுபவர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை பெற்று விடுவார். இப்படத்தின் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசியதாவது…
“ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார். ‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
நடிகர் சித்தார்த் பேசியதாவது…
“இப்படத்தை பணம் செலவிட்டு நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று கட்டாயம் பார்க்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு படத்தை இயக்குநர் ஷங்கர் வழங்குகிறார் என்றாலே அது மிகவும் சிறந்த படமாகத் தான் கட்டாயம் இருக்கும். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் என்றால் அது சொல்லப்பட வேண்டிய கதையாக தான் இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையை பற்றி நிறைய பேசலாம். இவ்வாறு ‘அநீதி’ படத்தை பார்ப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வசந்த பாலன் உடன் (‘காவியத்தலைவன்’ திரைப்படத்தில்) பணியாற்றும் வாய்ப்பு எனக்கு
கிடைத்தது எனது பாக்கியம். அநீதி திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”
இயக்குநர் என். லிங்குசாமி பேசியதாவது…
“இயக்குநர் வசந்த பாலனும் நானும் சாலிகிராமத்தில் ஒரே அறையில் தங்கி இருந்தது முதல் இப்போது வரை நண்பர்கள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வசந்த பாலனுக்கு உண்டு. ஆகையால் இந்த விழாவை இந்த மேடையை எனது விழாவாகவும் எனது மேடையாகவும் தான் நான் பார்க்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றியடைய வசந்த பாலனையும், இதை தயாரித்துள்ள அவரது நண்பர்களையும் வாழ்த்துகிறேன், நன்றி.”
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா பேசியதாவது…
“இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் இரண்டு படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் வேளையிலும் ‘அநீதி’ படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டி அதை வெளியிட முன் வந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் சாருக்கு மனமார்ந்த நன்றி. வசந்த பாலன் சினிமாவை நேசிப்பவர், காதலிப்பவர். அவரது ஒவ்வொரு படத்திலும் இதை நாம் உணர முடியும். ‘அநீதி’ திரைப்படத்தையும் அவ்வாறே அவர் உருவாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிப்பிலும், குரலிலும் உடல்மொழியிலும் நாம் இழந்துவிட்ட ரகுவரன் மீண்டும் வந்தது போல் அர்ஜுன் தாஸ் உள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன். இப்படம் வெற்றியடைய உங்களது மேலான ஆதரவை தாருங்கள், நன்றி.”
இயக்குநர் அறிவழகன் பேசியதாவது…
“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே ஷங்கர் சாரிடம் பணிபுரிந்த பின்னர் எங்களது முதல் படத்தை அவரது தயாரிப்பிலேயே இயக்கியவர்கள். ‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். மக்களின் வாழ்வியலை திரையில் பிரதிபலிப்பதில் வசந்த பாலன் வல்லவர். இப்படத்திலும் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.”
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது…
“என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. விரைவில் இசையமைப்பாளராக நூறாவது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ‘அநீதி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் உங்களது ஆதரவை தாருங்கள், நன்றி.”
‘அநீதி’ திரைப்படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடும் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது…
“இப்படத்தை நான் பார்த்தேன், ரசித்தேன். எதார்த்தமாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் இப்படத்தை வசந்த பாலன் எடுத்துச் சென்றிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ‘அநீதி’ திரைப்படம் ஓங்கி ஒலிக்கிறது. தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக இப்படத்தில் வசந்த பாலன் சொல்லியுள்ளார். தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் முதலாளிகளும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை இப்படத்திற்கு அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள அர்பன் பாய்ஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். ஒரு தரமான திரைப்படத்தை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அவர்கள் பணியாற்றி உள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.”
இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது…
“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சாருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.
அநீதி – குழுவினர்
நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா
பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்
எழுத்து & இயக்கம்: வசந்த பாலன்
தயாரிப்பு: எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G. வசந்த பாலன்
ஒளிப்பதிவு: எட்வின் சகாய்
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி
படத்தொகுப்பு: M.ரவிக்குமார்
வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா
நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்
சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு
ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்
ஸ்டில்ஸ்: R.S.ராஜா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
*