வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்ட துணை ஆட்சியர்கள்
வட்டாட்சியர்களாக பதவியிறக்கம்
செய்யப்பட்ட துணை ஆட்சியர்கள்
தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சிறப்பு துணை ஆட்சியர் (ஸ்டாம்ப்ஸ்) உள்பட தமிழகத்தில் பணிபுரிந்துவரும் 45 துணை ஆட்சியர்கள் (டெபுடி கலெக்டர்கள்) உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை வட்டாட்சியர்களாக பணிபுரிந்து வந்த இவர்கள் அனைவரும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக டெபுடி கலெக்டர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் முறைகேடாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் மீண்டும் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது டெபுடி கலெக்டர்களாக பணிபுரிந்து வரும் 45 நபர்களையும் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டது.
அதன்படி, அவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரவர் வகித்துவந்த பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கே.ரங்கராஜன், சிறப்பு துணை ஆட்சியர் (ஸ்டாம்ப்ஸ்) பி.ஐவண்ணன் ஆகிய இருவரும் அவரவர் வகித்துவந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதேபோல, டாஸ்மாக் நிறுவன தஞ்சை மாவட்ட மேலாளர் (சில்லரை விற்பனை) பி.செல்வபாண்டியும் வட்டாட்சியராக பதவியிறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.