அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை – சரத்குமார் !
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் சரத்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறி, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என்றார். மேலும் பணம் இல்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம் என்ற அவர், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல மாநிலங்களில் நியாயமான திட்டங்கள் தடுக்கப்படுகின்றன என்றார்.
மேலும் என்.எல்.சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், என்எல்சி விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தினால் உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
– சோழன்தேவ்