அங்குசம் பார்வையில் ‘செவ்வாய்க்கிழமை’
அங்குசம் பார்வையில் ‘செவ்வாய்க்கிழமை’

தயாரிப்பு : ஸ்வாதி ரெட்டி, சுரேஷ் வர்மா. தமிழில் ரிலீஸ்: ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். டைரக்டர்: அஜய் பூபதி, வசனம் : தாஜுதீன் சையத் & ராகவ். ஆர்ட்டிஸ்ட் பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், நந்திதா, அஜய் கோஷ், சைதன்யா கிருஷ்ணா, லக்ஷ்மண். ஒளிப்பதிவு: தசரதி சிவேந்திரா, இசை : அஜ்னீஷ் லோக்நாத், எடிட்டிங்: குல்லபள்ளி மாதவ் குமார். ஸ்டண்ட்: ரியல் சதீஷ் & பிரிதிவ். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.
லட்சுமிபுரம் கிராமம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வீட்டுச் சுவரில் கள்ளக் காதல் ஜோடியை அம்பலப்படுத்தி எழுதி வைக்கப்படுகிறது. அன்றைக்கே அந்த ஜோடி தற்கொலை செய்து கொள்கிறது. இப்படி வரிசையாக இரண்டு ஜோடி அவுட் ஆன நிலையில் , இது கொலையா? தற்கொலையா? எனவிசாரிக்க வருகிறார் அந்த ஊருக்கு புதிதாக வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் நந்திதா ஸ்வேதா.
இந்த சம்பவங்களின் பின்னணி என்ன என்பதை வெயிட்டான ஃப்ளாஷ் பேக் கதையை கச்சிதமாக பொருத்தி செவ்வாய் கிழமை சஸ்பென்ஸுக்கு ‘நச்’சுன்னு க்ளைமாக்ஸ் வைத்து அசத்திவிட்டார் டைரக்டர் அஜய் பூபதி. என்டா இது படத்துக்கு டைட்டில் ‘செவ்வாய் கிழமை’ டைட்டில் கார்டில் வரும் அம்புட்டு பேரும் ஆந்திரா ( தமிழில் நடிச்சதால நந்திதா ஸ்வேதா மட்டும் தான் நமக்கு தெரிஞ்ச முகம்) பார்ட்டிகளா இருக்கே, படம் எப்படி இருக்குமோ என்ற யோசனையுடன் தான் உட்கார்ந்தோம்.

இடைவேளை வரைக்கும் படமும் சுமார் கண்டிஷன்ல தான் போச்சு. ஆனால் அதுக்கு அப்புறம் பாயல் ராஜ்புத் ஃப்ளாஷ் பேக் ஆரம்பிச்சதும் செம வெயிட்டா, கெத்து காமிச்சிருக்கார் டைரக்டர். நடிப்பில் செம பாய்ச்சல் காட்டி படத்துக்கு உயிரூட்டியிருக்கார் பாயல் ராஜ்புத். காலேஜ் படிக்கும் போது புரொபசர் அஜ்மலிடம் தன்னை இழந்து விட்டபின் Hyper sexual Disorder என்ற அதீத பாலுறவு கொண்ட நோயாளியாக மாறிவிடுகிறார் பாயல்.
இதை கருவாக எடுத்துக் கொண்டு, மாலச்சி அம்மன், பேய் பிசாசு போன்ற வஸ்துகளை லேசாக தூவி தூள் பறத்திவிட்டார் டைரக்டர். மியூசிக் டைரக்டர் அஜ்னீஷ் லோக்நாத்தும கேமரா மேன் சிவேந்திராவும் செவ்வாய் கிழமை சம்பவங்களுக்கு சூப்பர் சப்போர்ட் பண்ணியிருக்கிறார்கள்.
சரி, லாஜிக் ஓட்டைகள் இல்லையான்னு கேட்டா, இருக்கத் தான் செய்யுது. நானூறு கோடி, ஐநூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கும் பான் இந்தியா படங்களிலேயே லாஜிக்கில் டிரைலர் லாரியை ஏத்தி குளோஸ் பண்ணுகிறார்கள். கதை என்ற பெயரில் தளபதிகளும் ‘ தல ‘களும் இஷ்டத்துக்கு கதைவிட்டு நம்மை கதறவிடுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் தைரியம் உள்ள நமக்கு இந்த ‘செவ்வாய் கிழமை’ செலிபிரேஷன் தான். .
– மதுரைமாறன்